திருமணம் கூடி வரும், கிரக தோஷங்கள் நீங்கும்... செவ்வாய் விரத மகிமை!Sponsoredசெவ்வாய்க்கிழமைக்கு, 'மங்கள வாரம்' என்றும் ஒரு பெயருண்டு. மங்களங்கள் அனைத்தையும் தரக்கூடிய நாள். மங்களங்கள் அனைத்தும் நமக்குக் கிடைக்கவேண்டுமானால், நாம் விரதமிருந்து இறைவனை வழிபட வேண்டும் என்பதுதானே முறை. எனவேதான், செவ்வாய்க்கிழமைகளில் தெய்வ வழிபாடும் விரதமும் மிகுந்த முக்கியத்துவம் பெற்றிருக்கின்றன. செவ்வாய்க்கிழமைகளில் கடைப்பிடிக்க வேண்டிய விரதத்தைப் பற்றியும், அது தரும் பலன்களையும் பார்ப்போம்.

செவ்வாய்க்கிழமை ராகுகால விரதம்:

Sponsored


செவ்வாய்க்கிழமைகளில் ராகுகாலத்தில் விரதமிருந்து துர்கையை வழிபட்டால் பல நன்மைகளைப் பெறலாம். செவ்வாய்க்கிழமை 3 முதல் 4:30 வரை ராகுகாலம். இந்த நேரத்தில் துர்கையை வழிபடுவது மிகவும் விசேஷம். 'மங்கள வார விரதம்' என்று இந்தியா முழுவதும் சிறப்பிக்கப்படும் ராகுகால வழிபாடு துர்கைக்குச் செய்யப்படுகிறது. இந்த விரதத்தைக் கடைப்பிடிக்கும் பெண்களுக்கு மாங்கல்ய பலம் கூடும். செவ்வாய் தோஷத்தின் காரணமாக திருமணம் தடைப்படும் பெண்களுக்கு திருமணம் கூடிவரும். கிரக தோஷங்களால் எண்ணற்ற துன்பங்களுக்கு உட்படுபவர்கள், செவ்வாய்க்கிழமை ராகுகாலத்தில் விரதமிருந்து துர்கையை வழிபட்டால், அனைத்து தோஷங்களும் விலகி, வாழ்க்கையில் சந்தோஷம் நிலவும்.

Sponsored


கயிலையில் சிவ - பார்வதி திருக்கல்யாணம் நடைபெற்றபோது, சமநிலை தவறிய பூமியை சமன்படுத்த தென் திசைக்குச் சென்ற அகத்தியரின் பாதையில், அவருடைய பயணத்தைத் தடை செய்வதுபோல் விந்தியமலை உயர்ந்து நின்றது. அகத்தியர் கேட்டுக்கொண்டும் விந்தியமலை அவருக்கு வழிவிடவில்லை. அகத்தியர் செவ்வாய்க்கிழமை ராகுகால விரதமிருந்து துர்கையை வழிபட்டார். துர்கையின் அருளால் விந்திய மலையின் செருக்கை அடக்கி, தம்முடைய தென் திசைப் பயணத்தைத் தொடர்ந்தார் என்பது புராண வரலாறு.

விரதமிருப்பது எப்படி?

செவ்வாய்க்கிழமை விரதம் இருப்பவர்கள், வளர்பிறை செவ்வாய்கிழமையில் விரதத்தைத் தொடங்குவது நல்லது. ராகுகால வேளையில், வீட்டு பூஜையறையிலிருக்கும் அம்பிகையின் திருவுருவத்தையோ அல்லது படத்தையோ அலங்கரித்து, கிழக்குமுகமாக விளக்கேற்றி வழிபட வேண்டும். செந்நிறப் பூக்களால் அம்மனை அர்ச்சிப்பது நல்ல பலனைத் தரும். செவ்வரளி, செம்பருத்தி, செந்தாமரை, செவ்வல்லி போன்ற மலர்கள் பூஜைக்கு உகந்தவை. இந்த விரதமிருக்கும் நாளில், அதிகாலையில், 'கோபூஜை' செய்து வழிபடுவது கூடுதல் நன்மைகளைத் தரும். கோபூஜை செய்ய முடியாவிட்டால், பசுக்களுக்கு கீரை மற்றும் பழங்களை அளிக்கலாம்.

விரதமிருக்கும் நாளில் வீட்டில் நேர்மறையான எண்ணங்களை உருவாக்கும் புனிதப் பொருள்களைக் கொண்டு தூபமிடவேண்டியது அவசியம். சாம்பிராணி, குங்கிலியம், சந்தனம், மூலிகைகள் ஆகியவற்றை எரித்து தூபமிடுவதால் வீடு சுத்தமாகி கிருமிகள், பூச்சிகள் இல்லாமலிருக்கும். புனித அதிர்வுகள் உண்டாகி வீடு மகிழ்ச்சிகரமாக மாறும். துர்கை கவசம், துர்கை சந்திரகலா ஸ்துதி, துர்கா சப்த ஸ்லோகம், அம்மன் தாலாட்டு என அம்பிகைக்கான பாடல்களைப் பாடி விரத வழிபாட்டைச் செய்யலாம்.அன்று சிவப்பு அல்லது மஞ்சள் ஆடையை உடுத்திக்கொள்வது சிறப்பு.

செவ்வாய்க்கிழமை ராகுகால விரதத்தில் கோயிலுக்குச் சென்று துர்கையை நெய்தீபம் ஏற்றி வழிபடுவது சிறப்பான பலன்களைத் தரும்.

வீட்டில் விரதம் இருப்பவர்கள் தேன், பசும்பால், சர்க்கரைப் பொங்கல், கல்கண்டு என நைவேத்தியம் படைத்து அம்பிகையை வணங்கலாம். உபவாசம் இருப்பவர்கள் பூஜையை முடித்ததும், துர்கைக்கு செய்யும் நைவேத்திய பிரசாதத்தில் சிறிது உண்ட பிறகு உணவு உண்ணலாம்.

செவ்வாய்க்கிழமை விரதம் தரும் பலன்கள்...

செவ்வாய்க்கிழமை விரதமிருப்பவர்கள் வளர்பிறை செவ்வாய்க்கிழமையில் விரதத்தைத் தொடங்க வேண்டும். தொடர்ந்து பதினோரு வாரங்கள் செவ்வாய்க்கிழமை ராகுகால விரதமிருந்தால் எல்லா கஷ்டங்களும் நீங்கும். கல்யாண யோகம் கூடி வரும். எதிர்மறையான எண்ணங்கள் விலகும். `வாழ்க்கையே அவ்வளவுதான்’ என்ற விரக்தி நிலையிலிருப்பவர்கள் இந்த விரதமிருந்தால் மனக்குழப்பங்கள் நீங்கி நலம் பெறுவார்கள் என ஆன்மிகப் பெரியவர்கள் கூறுகிறார்கள்.

ஆண்களும் இந்த விரதமிருக்கலாம். ராகுவால் உண்டாகும் தோஷங்கள் நீங்க, வீண் செலவுகள் ஏற்படாமலிருக்க, வீட்டில் சண்டை சச்சரவுகள் தீர இந்த விரதத்தை,மேற்கொள்ளலாம். அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் போகும் ஆண்கள், இந்த விரதத்தைக் கடைப்பிடித்தால், நோய்களிலிருந்து விடுபடலாம். ஆண்களால் முடியாத பட்சத்தில், அவர்களுக்காக அவர்களின் தாயார் அல்லது மனைவி இந்த விரதத்தை மேற்கொள்ளலாம்.

செவ்வாய்க்கிழமை ராகுகால விரதமிருந்தால் ஸ்ரீதுர்கை, செவ்வாய் பகவான், ராகு பகவான் ஆகியோரை ஒரே நேரத்தில் ப்ரீதி செய்த பலன் கிடைக்கும். அதனால், அனைத்து மங்களங்களும் உ ண்டாவதுடன், மனத்துணிவு, உடல் வலிமை ஆகிய நன்மைகள் ஏற்படும்; சகல தோஷங்களிலிருந்தும் நிவாரணம் பெறலாம்.Trending Articles

Sponsored