மதுரையில் அழகர் ஆற்றில் இறங்கும்போது வீரராகவ பெருமாளுக்கு முதல் மரியாதை... ஏன்?Sponsoredதுரை ஶ்ரீவீரராகவ பெருமாள் கோயில் சுமார் 1,500 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது. இங்கே வெள்ளிக்கிழமைகளில் இரவு 8 முதல் 9 மணி வரை சுக்கிர ஹோரையில் நடைபெறும் சிறப்பு பூஜை மிக விசேஷமானது. அந்த பூஜையை தரிசிப்பவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம். மேலும் வீடு கட்டுதல், மனை வாங்குதல், படிப்பு தொடர்பான சிக்கல்களிலிருந்து விடுபடுதல், வழக்குகளில் வெற்றி போன்ற பலன்களும் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

இந்தக் கோயிலில் நின்ற கோலத்தில் வீரராகவ பெருமாளாகவும், கிடந்த கோலத்தில் ரங்கநாதராகவும், அமர்ந்த கோலத்தில் நரசிம்மராகவும் அருள்பாலிக்கிறார். தாயாரின் திருப்பெயர் கனகவல்லித் தாயார். உற்சவர் வீரராகவ பெருமாள் ஶ்ரீதேவி, பூதேவி சமேதராகக் காட்சிதருகிறார்.

Sponsored


மதுரை சித்திரைத் திருவிழாவின்போது, வைகை ஆற்றில் எழுந்தருளும் கள்ளழகரை எதிர்கொண்டு அழைத்து, அவரிடமிருந்து முதல் மரியாதை பெறுபவர் வீரராகவ பெருமாள். இந்தச் சம்பவத்தின் பின்னணியில் நெகிழ்ச்சியான ஒரு நிகழ்ச்சி சொல்லப்படுகிறது.

Sponsored


மன்னர் திருமலை நாயக்கர் காலத்துக்கு முன்னர் வரை, அழகர்கோயிலிலிருந்து புறப்படும் கள்ளழகர், அலங்காநல்லூர் வழியாக வந்து, தேனூர் வைகையாற்றில்தான் எழுந்தருளுவார். அப்போது விவசாயிகள் தங்கள் வயல்களில் விளைந்த பொருள்களை கள்ளழகருக்குக் காணிக்கையாக சமர்ப்பிப்பார்கள். தேனூர் வைகையாற்றில் கள்ளழகர் எழுந்தருளும் மண்டபம் வைக்கோல்களைக் கொண்டு வேயப்பட்டிருக்கும். 

ஒருமுறை கள்ளழகர் வைக்கோல் மண்டபத்தில் எழுந்தருளியபோது, மண்டபம் தீப்பற்றிக்கொண்டது. தீப்பிடித்துக்கொண்ட மண்டபத்துக்குள் சென்று பெருமாள் விக்கிரகத்தை மீட்டு வரும் துணிச்சல் யாருக்குமே வரவில்லை. பெருமாளை தரிசித்து முதல் மரியாதை பெற வந்திருந்த அரசர்கூட தீயின் வெம்மை தாங்க மாட்டாமல் விலகிச் சென்றுவிட்டார். அமைச்சர்களும் மற்றவர்களும் விலகிச் சென்றுவிட்ட நிலையில், அர்ச்சகர் ஒருவர்தான் துணிச்சலுடன் மண்டபத்துக்குள் ஓடிச் சென்று பெருமாளின் விக்கிரகத்தை மீட்டெடுத்து வந்து, ஈரமான ஆற்று மணலில் பதித்துக் குளிர்வித்தவர், வெப்பத்தின் காரணமாக மயங்கிவிட்டார். அவருடைய மயக்கத்தைத் தெளிவிக்க ஏற்பாடு செய்த அரசர், மயக்கம் தெளிந்த அர்ச்சகரிடம், ``ஐயா, நான் பெரிதும் நேசித்து பூஜிக்கும் இறைவனை நீங்கள் துணிந்து காப்பாற்றிவிட்டீர்கள். எனவே, எனக்குக் கிடைக்கும் முதல் மரியாதையை இன்று முதல் நீங்கள்தான் ஏற்றுக்கொள்ளவேண்டும்'' என்று கூறினார். 

அதற்கு அந்த அர்ச்சகர், ''அரசே, தங்களுக்கு பதிலாக நான் முதல் மரியாதையை ஏற்றுக்கொள்வதில் எனக்கு மகிழ்ச்சியோ பெருமையோ இல்லை. நான் அனுதினமும் வழிபடும் வீரராகவ பெருமாளுக்கு முதல் மரியாதை வழங்கச் செய்வதே எனக்கு மிகவும் மகிழ்ச்சி தருவதாக இருக்கும்'' என்றார்.

அன்றிலிருந்து ஆண்டுதோறும் கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும்போது, வீரராகவ பெருமாளுக்கு முதல் மரியாதை வழங்கப்படுகிறது. கள்ளழகர் வைகையில் எழுந்தருளும் நிகழ்ச்சி தேனூரிலிருந்து மதுரைக்கு மாற்றப்பட்ட பிறகும், இந்த வைபவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நாளில் அதிகாலை 2 மணிக்கு வீரராகவ பெருமாள் கோயிலிலிருந்து புறப்பட்டு, யானைக்கல் வழியாக அழகர் ஆற்றில் இறங்கும் நேரத்துக்குச் சரியாக எழுந்தருளிவிடுவார். அழகர் ஆற்றில் இறங்கியதும், வீரராகவ பெருமாள் முன்னும் பின்னும் ஆடிக்கொண்டே அழகரை எதிர்கொண்டு அழைப்பார். பின்னர், கள்ளழகர் சார்பாக வீரராகவ பெருமாளுக்கு மாலை, பரிவட்டம் போன்ற மரியாதைகள் செய்யப்படும். அழகர் ஆற்றில் இறங்கும்போது, 'வாருங்கள் அண்ணா!' என்று வீரராகவ பெருமாள் மனம் நிறைய அழைக்கும் இந்த வைபவத்தை பக்தர்கள் நெகிழ்ச்சியும் மகிழ்ச்சியுமாக தரிசிக்கிறார்கள்.Trending Articles

Sponsored