ராமர் வழிபட்ட மல்லிகார்ஜுனேஸ்வரர்! - தனித்துவமான தருமபுரி கோட்டைக் கோயில்



Sponsored



சீதையை ராவணன் கவர்ந்து சென்றதால் ஏற்பட்ட துக்கம் மேலிட, மேற்கொண்டு என்ன செய்வதென்று புரியாமல் தவித்த ராமன், காடு, மலை என அலைந்து திரிந்தார். 'அண்ணன் ராமரின் துயரத்தைப் போக்க வேண்டும்' என்று நினைத்த லட்சுமணன் நாரதரிடம் சென்று, தன் அண்ணனின் துன்பம் தீர்க்க வழி கேட்டான். நாரதர், லட்சுமணனை அகத்தியரிடம் சென்று கேட்கும்படி கூறினார். ஆனால் அகத்தியரோ, லட்சுமணனை ஹயக்ரீவரிடம் சென்று கேட்கும்படிக் கூறியனுப்பிவிட்டார். லட்சுமணனும் சளைக்காமல் ஹயக்ரீவரிடம் சென்றான். லட்சுமணன் தான் வந்த  காரணத்தை ஹயக்ரீவரிடம் தெரிவித்தான். ஹயக்ரீவர், 'உன் அண்ணன் ராமரின் துன்பம் நீங்கவேண்டுமென்றால், சிவனைவிடவும் சக்தி உயர்ந்திருக்கும் தலத்துக்குச் சென்று வழிபட்டால், ராமரின் துன்பம் நீங்கும்' என்று கூறினார்.


ஹயக்ரீவர் கூறியபடி ராமர் வழிபட்ட தலம்தான் தருமபுரியில், 'கோட்டைக் கோயில்' என்று அழைக்கப்படும் அருள்மிகு காமாட்சி அம்பாள் சமேத அருள்மிகு மல்லிகார்ஜுனேஸ்வரர் கோயில். 

Sponsored


சிவபக்தரான பிருங்கி முனிவர், எப்போதும் சிவனை மட்டுமே வழிபடுபவர். அவர் தன்னையும் வழிபட வேண்டும் என்பதற்காக, பார்வதி சிவனுடன் இணைந்து காட்சி தந்தபோது, பிருங்கி முனிவர் வண்டாக மாறி, சிவனை மட்டும் வலம்வந்து வழிபட்டார். சினம் கொண்ட சக்தி, பிருங்கி முனிவரின் சக்தி முழுவதையும் அகற்றிவிட்டாள். தன் பக்தன் பிருங்கிக்கு ஈசன் மூன்றாவது கால் கொடுத்து நிற்கச் செய்கிறார். 'தன்னைவிட பக்தன் முக்கியமா?' என்று சினம் கொண்ட பார்வதி சிவனை விட்டுப் பிரிந்துவிட்டாள். இதன் காரணமாக பூமியின் இயக்கம் நின்றுவிட்டது. தம்மால்தான் இந்த நிலை ஏற்பட்டது என்று எண்ணிய பிருங்கி முனிவரும், தேவர்களும், முனிவர்களும் பிரார்த்தித்துக்கொண்டதால், சிவனும் சக்தியும் இணைந்தார்கள்.

Sponsored


தேவியின் மகிமையை உலகத்தவர்க்கு உணர்த்தும்விதமாக சிவபெருமான், அம்பிகைக்கு இந்தத் தலத்தில் உயர்வான இடத்தை வழங்கியிருக்கிறார். ஆம். இறைவனின் சந்நிதியைவிட மிக உயரத்தில் அம்பிகையின் சந்நிதி அமைந்திருக்கிறது. இந்தத் தலத்தில்தான் ராமர், சிவ சக்தியரை வழிபட்டு, மனத்துயரம் நீங்கப் பெற்றார். ராமர் இந்தத் தலத்தில் வழிபட்டதை நினைவுகூரும் வகையில், அம்பாள் சந்நிதியின் கீழ் ராமாயணக் காட்சிகளைச் சித்திரிக்கும் காட்சிகள் புடைப்புச் சிற்பங்களாகச் சித்திரிக்கப்பட்டிருக்கின்றன.

சக்தியின் சிறப்பை வெளிப்படுத்தும் இந்தக் கோயிலில் நவராத்திரி விழா மிகவும் விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது. மேலும் கௌரி விரதம், வரலட்சுமி விரதம் போன்ற விரதங்களும் கோயிலில் வைத்துக் கடைப்பிடிக்கப்படுகின்றன. ஶ்ரீராமர் அம்பிகையை வழிபட்ட காலம் வசந்த நவராத்திரியாகக் கொண்டாடப்படுகிறது. ராமருக்கு மட்டுமல்லாமல், பாண்டவர்களுக்கும் அருள்புரிந்த அன்னை, இந்தக் கோயிலில் அருளும் கல்யாண காமாட்சி அம்மன். 18 கோணம், 18 யானை, 18 திருப்படிகள் கொண்டதாக அமைந்திருக்கிறது அம்பிகையின் சந்நிதி. சுவாமி விமானத்தைவிடவும் அம்பிகையின் விமானம் உயர்ந்து காணப்படுவது, சக்தியின் பெருமையை நமக்குப் பறைசாற்றுவதாக இருக்கிறது.


சூலினி ராஜதுர்கை :

காமாட்சி அம்மன் சந்நிதியிலேயே ஶ்ரீராஜ துர்கை சந்நிதிகொண்டிருக்கிறாள். மிகவும் அழகிய திருக்கோலத்தில் காட்சி தரும் ராஜ துர்கையை மகாபாரத தர்மபுத்திரர் முதல் வரலாற்றுக் கால அதியமான் வரை பலரும் வழிபட்டிருக்கிறார்கள். 

எண்திசைக் காவலர்கள் :
மண்டபத்தின் விதானத்தில் எண்திசைக் காவலர்களின் சிற்பங்கள் காணப்படுகின்றன. விதானம் ஒன்பது பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு, மையப் பகுதியில் சிவன் எட்டுக் கரங்களுடன் நடராஜர் வடிவத்தில் காட்சிதருகிறார். நடராஜரின் கரங்களில் சூலம், உடுக்கை, பாசம், அக்னி காணப்படுகின்றன. நடராஜரைச் சுற்றிலும் எட்டு திசைகளின் காவலர்கள் தங்களுடைய வாகனங்களில் அமர்ந்தநிலையில் காட்சிதருகின்றனர். திசைக் காவலர்களில் இந்திரன் மட்டும் இந்திராணி தேவியுடன் காட்சிதருகிறார்.

மிகவும் புராதனமான இந்தக் கோயில் காலப் போக்கில் மறைந்துவிட்டது. கி.பி.9-ம் நூற்றாண்டில் அடர்ந்த வனப்பகுதியாக இருந்த இந்தப் பகுதிக்கு வேட்டையாட வந்த நுளம்பா மன்னரின் பார்வையில் வேளாள மரத்தினடியில் சிவபெருமான் லிங்க வடிவத்தில் தேவியுடன் காட்சிதந்தார். தனக்குக் காட்சி தந்த இறைவனுக்கும் இறைவிக்கும் சிற்பக்கலையின் உச்சம் என்று சொல்லும்படி இந்தக் கோயிலை மிகவும் எழிலுடன் எழுப்பி, மானியங்களும் வழங்கியதாக சொல்லப்படுகிறது.
 



Trending Articles

Sponsored