சந்தனக் கட்டை வடிவில் அருள்பாலிக்கும் கருங்குளம் ஸ்ரீவெங்கடாசலபதி! - பிரம்மோற்சவ விழா கோலாகலம்!



குலசேகரநாயகி சமேத மார்த்தாண்டேஸ்வரரை தரிசித்த பிறகுதான் பெருமாள் கோயிலுக்குச் செல்ல வேண்டும் என்ற நியதி கடைப்பிடிக்கப்படும் கோயிலைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா? தூத்துக்குடி மாவட்டம் ஶ்ரீவைகுண்டத்துக்கு அருகிலுள்ள கருங்குளம் என்னும் ஊரில், மலையின் மேல் அமைந்திருக்கும் கருங்குளம் ஸ்ரீவெங்கடாசலபதி கோயிலில்தான் இப்படி ஒரு நடைமுறை கடைப்பிடிக்கப்படுகிறது. 

Sponsored


கருங்குளத்தில் மலையின் மீது அமைந்திருக்கும் ஶ்ரீவெங்கடாசலபதி கோயில், 'தென் திருப்பதி' என்று அழைக்கப்படுகிறது. இதன் பின்னணியில் ஒரு சம்பவம் சொல்லப்படுகிறது.

Sponsored


முற்காலத்தில் சுபகண்டன் என்னும் மன்னரின் கழுத்தில் ஒரு கட்டி வந்தது. வலி பொறுக்க மாட்டாமல் துடித்த மன்னர், திருப்பதி திருமலைக்குச் சென்று வெங்கடாசலபதியை வழிபட்டு, தன்னுடைய கட்டி மறைய வேண்டும் என்று வேண்டிக்கொண்டு திருமலையிலேயே தங்கியிருந்தார். ஒருநாள் பெருமாள் மன்னரின் கனவில் தோன்றி, 'சந்தனத்தால் ஆன தேர் ஒன்றைச் செய்து எனக்குச் சமர்ப்பித்துவிடு. உடனே உனது நோய் ஓரளவுக்குக் குணமாகிவிடும். இந்தத் தேரை செய்து முடித்ததும், உனக்கு இரண்டு சந்தனக் கட்டைகள் மீதமிருக்கும். அந்தக் கட்டைகளைக் கொண்டு சென்று தாமிரபரணி நதிக்கரையிலுள்ள வகுளகிரியில் பிரதிஷ்டை செய்தால், உன் நோய் முற்றிலும் சரியாகிவிடும்’’ என்று தெரிவித்தார்.

Sponsored


பெருமாள் கூறியதைப்போலவே, சந்தனக் கட்டைகளால் ஆன தேரை பக்தியுடன் செய்யத் தொடங்கினார் சுபகண்டன். தேரைச் செய்து முடித்த பிறகு, பெருமாள் கூறியதைப் போலவே இரண்டு கட்டைகள் மீதமிருந்தன. சந்தனத் தேரை வெங்கடாசலபதிக்குச் சமர்ப்பித்த பிறகு, மீதமிருந்த அந்த இரண்டு சந்தனக் கட்டைகளை எடுத்துக்கொண்டு திருப்பதியிலிருந்து புறப்பட்டு தாமிரபரணி நதிக்கரையை வந்தடைந்தார். தாமிரபரணி நதிக்கரைக்கு அருகிலிருந்த ஒரு மலையில் சீனிவாசன் ஆலயம் ஒன்று அமைந்திருந்தது. ஆதிசேஷனே வகுளகிரியாகக் காட்சி தருவதாக ஐதீகம். புளியமரத்துடன் கூடிய அந்த மலையில் புளியமரத்துக்கு வடக்கேயும், சீனிவாச பெருமாள் ஆலயத்துக்குத் தெற்கேயும் இருந்த இடத்தில் மீதியிருந்த இரண்டு சந்தனக் கட்டைகளையும் பிரதிஷ்டை செய்ய எண்ணினார் சுபகண்டன்.

அப்போது சந்தன மரக்கட்டைகளிலிருந்து பிரகாசமான ஒளி தோன்றியது. அந்த ஒளியைக் கண்டு பிரம்மாவே இந்திரன் மற்றும் தேவர்களுடன் இங்கு வந்து தன் கரங்களால் சந்தன மரப் பெருமாளை பிரதிஷ்டை செய்தார். இவர்தான் 'தென் திருப்பதி ஶ்ரீவெங்கடாசலபதி’ என்று அழைக்கப்படுகிறார். பிரம்ம தேவரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஶ்ரீவெங்கடாசலபதி பெருமாளுக்கு வருடத்தில் 365 நாள்களும் பால், எண்ணெய், இளநீர் ஆகியவற்றால் திருமஞ்சனம் செய்யப்படுகிறது.

சுபகண்டன் ஆரம்பித்த சித்ரா பௌர்ணமி திருவிழா பல ஆண்டுகளாகக் கொண்டாடப்பட்டுவருகிறது. திருவிழா நடக்கும் பத்து நாள்களில், ஒன்பது நாள்கள் மலையின் மீதே சுவாமி எழுந்தருளுகிறார். இங்கே வெங்கடாசலபதிக்கு என்று தனி உற்சவர் இல்லை. அருகிலிருக்கும் கோயிலில் உள்ள சீனிவாசப் பெருமாளே உற்சவராக இருக்கிறார். சீனிவாசப் பெருமாளை தெற்குப் புறமாக இருக்கும் கோயிலுக்கு அழைத்து வந்து தினமும் இருவருக்கும் திருமஞ்சனம் செய்யப்படுகிறது.

சித்ரா பௌர்ணமியின் முதல் நாள் காலை பந்தல் கால் நட்டு திருவிழா தொடங்குகிறது. முதல் நாள் இரவு, தோளுக்கினியான் வாகனத்தில் தாயாரோடு சீனிவாசப் பெருமாள் எழுந்தருளுகிறார். இரண்டாம் நாள் இரவு, சீனிவாசப் பெருமாள் மட்டும் சிம்ம வாகனத்திலும், மூன்றாவது நாளில், அவரே ராமராக வில்லோடு அனுமனின் மீதும் காட்சிதருகிறார். நான்காவது நாளில், சேஷ வாகனத்தில் எழுந்தருளுகிறார். ஐந்தாவது நாள், கருட சேவை நடைபெறுகிறது. ஆறாவது நாள், யானை வாகனம். ஏழாவது நாள், பொன் வண்ணச் சப்பரம். எட்டாவது நாள், குதிரை வாகனம். ஒன்பதாவது நாள், பல்லக்கில் தவழ்ந்த திருக்கோலம்... என்று ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாகனத்தில் எழுந்தருள்கிறார் சீனிவாசப் பெருமாள்.

சித்ரா பௌர்ணமியன்று இரண்டு கோயில்களுக்கும் இடையே உள்ள மண்டபத்தில் சீனிவாசப் பெருமாள் தாயாருடன் எழுந்தருளுகிறார். அன்று காலை மூலவர் வெங்கடாசலபதி பெருமாள் கோயிலில் சந்தனாபிஷேகம் நடைபெறுகிறது. மாலை ஐந்து மணியளவில் தாமிரபரணி நதியிலிருந்து தீர்த்தம் கொண்டு வந்து மண்டகப்படி அபிஷேகம் செய்யப்படுகிறது. இரவு பத்து மணிக்குப் பொன் வண்ணச் சப்பரத்தில் தாயாருடன் கண்கொள்ளாக் காட்சியாக சீனிவாசப் பெருமாள் வெங்கடாசலபதி பெருமாள் சந்நிதிக்கு எழுந்தருளி, ஆனந்தமாக நடனமாடி மலையிலிருந்து இறங்கி வருகிறார். அன்று இரவு முழுவதும் பொதுமக்களுக்கு அருள்புரியும் பெருமாள், காலையில் தாமிரபரணி நதிக்கரையை அடைகிறார். அங்கே தாயாருடன் மீன் விளையாட்டு மற்றும் வெள்ளை சார்த்தி திருக்கோலம் நடைபெறுகிறது. அதன் பிறகு 11-வது நாள் தாமிரபரணி நதிக்கரையில் சீனிவாசப் பெருமாளுக்கும் தாயாருக்கும் திருமஞ்சனம் நடைபெறுகிறது. பிறகு பச்சை சார்த்தி திருக்கோலத்தில் புறப்பட்டு மலையிலிருக்கும் வெங்கடாசலபதி மண்டபத்தை அடைகிறார். அதன் பிறகு சீனிவாசன் பல்லக்கில் தாயாரோடு புறப்பட்டு யதாஸ்தானம் அடைகிறார்.

இந்தப் பத்து நாள் திருவிழாவும் அந்தக் காலத்தில் எப்படி நடைபெற்றதோ அப்படியே இன்றும் நடைபெறுகிறது. வெளிநாட்டில் இருப்பவர்கள்கூட இந்தத் திருவிழாவுக்கு வந்துவிடுகிறார்கள்.

பெருமாள் கோயில் திருவிழாவின் ஒன்பதாவது நாள் காலையில், அருள்மிகு மார்த்தாண்டேஸ்வரர் கோயிலில் ருத்ராபிஷேகம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. பதினோராவது நாள் பிரம்மோற்சவம் நிறைவு பெறுகிறது.


 



Trending Articles

Sponsored