சப்த ரிஷிகள் பாலாற்றங்கரையில் பிரதிஷ்டை செய்து வழிபட்ட ஷடாரண்ய க்ஷேத்திரங்கள்!காஞ்சியில் நடைபெற்ற சிவ - பார்வதி திருமணத்தை தரிசிக்க வந்த அகத்தியர், கௌதமர், அத்திரி, பரத்வாஜர், வசிஷ்டர், வால்மீகி, காஷ்யபர் ஆகிய ஏழு ரிஷிகள், மனித குலம் நோயின்றி வாழ்வதற்காக, கல்ப மூலிகைகள் பற்றிய ரகசியத்தை அறிந்துகொள்ள விரும்பினர். தங்கள் விருப்பத்தை அகத்திய மகரிஷியிடம் தெரிவித்தனர். கல்ப மூலிகை ரகசியங்களை சிவபெருமானே நமக்கு அருள வல்லவர் என்று கூறிய அகத்தியர், அவர்களை அழைத்துக்கொண்டு சிவபெருமானிடம் சென்றார். சப்த ரிஷிகளும் பாலாற்றின் கரையில் தம்மை பிரதிஷ்டை செய்து வழிபட்டால், உரிய காலத்தில் தாம் அவர்களுக்குக் கல்ப மூலிகைகள் பற்றி விளக்குவதாகக் கூறினார். அதன்படி காஷ்யபர் தவிர்த்து மற்ற ஆறு ரிஷிகள் வழிபட்ட தலங்கள்தாம், `ஷடாரண்ய க்ஷேத்திரங்கள்' என்று போற்றப்படுகின்றன. மேலும், ஈசன் அருளால் தோன்றிய இந்தத் தலங்கள் முருகப்பெருமானின் ஷடாட்சர மந்திரத்தைக் குறிப்பிடும் வகையில் அமைந்திட அருள் செய்த இறைவன், அதன் மூலம், `முருகப்பெருமானின் திரு அவதாரத்தை விரைவில் தாம் நிகழ்த்தவிருக்கிறோம்' என்பதை ரிஷிகளுக்கு உணர்த்துவதாகவும் இருந்தது. 

(ஷடாரண்ய தலங்களை வீடியோவாகப் பார்க்க இங்கே க்ளிக் செய்யவும்...)

Sponsored


Sponsoredஆறு காடுகள் இருந்த இடம்தான் ஆற்காடு என்று மருவி, தற்போது வேலூர் மாவட்டத்தில் புகழ்பெற்ற ஊராக இருந்து வருகிறது. வேப்பூர், மேல்விஷாரம், புதுப்பாடி, காரை, குடிமல்லூர், வன்னிவேடு ஆகிய ஆறு ஊர்களிலும் ஈசன் அருள்பாலித்து வருகிறார். இந்த ஊர்கள் ஆரம்பத்தில் வனங்களாக, முறையே வேப்பங்காடு, எட்டிக்காடு, மாங்காடு, காரைக்காடு, மல்லிக்காடு, வன்னிக்காடு என்று இருந்தன. 
ஆறு ரிஷிகளுக்கு ஈசன் காட்சி தந்து கல்ப மூலிகைகளைப் பற்றி சொல்லித் தந்த இடங்களே இவை. பாலாற்றங்கரையின் வடகரை, தென்கரைகளில் தலா மூன்று கோயில்கள் அமைந்துள்ளன. காரைக்காடு, எட்டிக்காடு, வேப்பங்காடு ஆகிய மூன்று தலங்களும் முக்கோண வடிவில் அமைந்துள்ளன. வன்னிக்காடு, மல்லிக்காடு, மாங்காடு ஆகிய மூன்று தலங்களும் தலைகீழ் முக்கோண வடிவில் அமைந்துள்ளன. இந்த இரு முக்கோண வடிவங்களையும் இணைத்தால் முருகப்பெருமானின் சக்கர வடிவான நட்சத்திரம் கிடைக்கும். (படம் பார்க்கவும்)

Sponsoredகாரைக்காடு :
ஆற்காட்டிலிருந்து 7 கி.மீ. தொலைவில் இருக்கும் காரைக்காட்டில் கௌதமேஸ்வரர் ஏகாந்தமாக அமர்ந்து அருள்பாலிக்கிறார். கௌதம ரிஷி வழிபட்ட ஈசன் இவர்.


வன்னிக்காடு :
காரைக்காட்டிலிருந்து 5.5 கி.மீ. தொலைவில் பாலாற்றின் வடகரையிலேயே பயணித்தால் வருகிறது வன்னிவேடு. இது முன்னர் வன்னிக்காடாக இருந்துள்ளது. அகத்திய மகரிஷி வணங்கிய ஈசன் இவர். புவனேஸ்வரி அம்பாள் சமேத அகத்தீஸ்வரர் சுயம்பு மூர்த்தியாக இங்கு கோயில் கொண்டுள்ளார்.  


குடிமல்லூர் :
வன்னிவேடு ஆலயத்திலிருந்து பாலாற்றங்கரையின் இடது கரையில் உள்ளது குடிமல்லூர். வன்னிவேட்டிலிருந்து 5.8 கி.மீ. தொலைவில் அணைக்கட்டு செல்லும் சாலையில் இந்த ஆலயம் உள்ளது. திரிபுரசுந்தரி அம்பாள் சமேத அத்திரியீஸ்வரர் இங்கு அருள்புரிகிறார். அத்திரி ரிஷி வழிபட்ட தலம் இது.


புதுப்பாடி : 
குடிமல்லூரிலிருந்து 6 கி.மீ. தொலைவில் ஆற்காடு- செய்யாறு சாலையில் இந்த ஊரும், ஊருக்குள் ஆலயமும் அமைந்துள்ளது. பரத்வாஜ ரிஷியால் ஸ்தாபிக்கப்பட்டுப் பூஜிக்கப்பட்டதால், ஈசன் பரத்வாஜேஸ்வரர் என்று  அழைக்கப்படுகிறார். 


வேப்பூர் :
புதுப்பாடியிலிருந்து 5.2 கி.மீ. தொலைவில் பாலாற்றின்  தென்கரையில் வேப்பூர் அமைந்துள்ளது.  இது வசிஷ்ட முனிவர் வழிபட்ட திருத்தலம் என்பதால், வசிஷ்டேஸ்வரர் கோயில் என்று அழைக்கப்படுகிறது. பாலகுஜாம்பிகை சமேத வசிஷ்டேஸ்வரர் இங்கு அருள்பாலிக்கிறார். 


மேல்விஷாரம் :
வேப்பூரிலிருந்து தென்கரையில் 4 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள திருத்தலம் விஷாரம். வால்மீகி முனிவர் இந்த எட்டிமரக்காட்டில் வந்து சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து வழிபட்டார். இதனால் ஈசன் வால்மீகீஸ்வரர் என்று வணங்கப்படுகிறார்.


இந்த ஆறு தலங்கள்தாம் `ஷடாரண்ய க்ஷேத்திரங்கள்' என்று அழைக்கப்படுகின்றன. இந்த ஆறு ரிஷிகள் வழிபட்ட தலங்களுடன், காஷ்யபர் வழிபட்ட ஆவாரங்காட்டு இறைவனையும் வழிபடவேண்டும் என்பது மரபு.

அவரக்கரை :
காஷ்யபர் ஆவாரங்காட்டில் சிவபெருமானைக் குறித்து தவமியற்றினார். அவர் மனதில், `ஈசன் என்ன தனக்கு உபதேசிப்பது' என்பதாக ஒரு கர்வம் சிறுபொழுது ஏற்பட்டு மறைந்தது. அதன் காரணமாக ஈசன் அவருக்கு நீண்ட காலம் சென்றே தரிசனம் தந்தார். கல்ப மூலிகை ரகசியங்களையும் எடுத்துரைத்தார்.


ஷடாரண்ய ஷேத்திரங்களை ஒரே நாளில் தரிசித்தால் எல்லா நன்மைகளும் உண்டாகும். ஆற்காட்டை அடைந்து அங்கிருந்து கார் அல்லது இரு சக்கர வாகனத்தில் பயணிப்பது நல்லது. பேருந்து வசதிகள் எல்லாக் கோயில்களுக்கும் இல்லை. ஆற்காடு, வாலாஜா, ராணிப்பேட்டை பகுதிகளில் சுமார் 60 கிலோமீட்டர் சுற்றளவில் இந்த ஆலயங்கள் அமைந்துள்ளன. இந்தத் திருத்தலங்களைப் பற்றிய விவரங்களை மேலும் அறிந்துகொள்ள இந்த இதழ் சக்தி விகடனில் பாருங்கள்..


 Trending Articles

Sponsored