``எனக்குப் பெரிய அளவில் உதவியாக இருப்பது ஆல்ஃபா தியானம்’’ - கவிஞர் யுகபாரதி #WhatSpiritualityMeansToMe



Sponsored



யுகபாரதி... கவிஞர், திரைப்படப் பாடலாசிரியர். 1,300 பாடல்களை எழுதியிருப்பவர். ஆனால், பேச்சில் அத்தனை நிதானம்! `பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன் ஒற்றை நாணயம்’, `மன்மத ராசா...’ பாடல்கள் இவருக்கு ஆரம்பகாலத்தில் பெரும்புகழ் சேர்த்தவை. அவரை 'எனது ஆன்மிகம்' பகுதிக்காக சந்தித்தோம். ``மனமே மந்திரம்...’’ என்று ஆரம்பித்தார். 

``கடவுள் இருக்காரா இல்லையாங்கிற சர்ச்சைக்குள்ள நாம போக வேண்டியதே இல்லை. ஆனா, மனம்ங்கிறது முக்கியமான விஷயமல்லவா? அது எதையோ நோக்கி நகர்ந்துகொண்டே இருக்கிறது. ஒவ்வொரு காலகட்டத்துலயும் ஒவ்வொரு கருத்தை நோக்கி நகர்ந்துகொண்டேயிருக்கிறது. 

Sponsored


தொடக்கத்தில் கவிஞர் கண்ணதாசன் தீவிரமான கடவுள் மறுப்பாளராக `சாமியே இல்லை' என்று சொல்லிக்கொண்டிருந்தார். அப்படி இருந்தவர் `அர்த்தமுள்ள இந்து மதம்' எழுதும் அளவுக்குப்போனார். அவர் ஒரு மதத்துக்குள் போவதைப் பற்றிப் பார்க்க வேண்டியதில்லை. 
ஆரம்பத்திலிருந்து ஒரு கருத்தில் உடன்பாட்டோடு இருந்தவர்களுக்கு, அதில் ஏன் ஒரு தொய்வு ஏற்படுகிறது என்று பார்க்க வேண்டும். வாழ்க்கையில் அடுத்தடுத்து நிகழும் சம்பவங்கள் நமது மனப்பாங்கில், மன இயல்புகளில் ஒரு மாற்றத்தைக்கொண்டுவரவே செய்கின்றன. ஒரு கருத்திலிருந்து இன்னொரு கருத்துக்கு நாம் நகர்வதற்கு நம்முடைய விருப்பமோ தேவையோ அனுபவமோ காரணமாக இருக்கலாம்.

Sponsored


சில நேரங்களில் நம் தகுதிக்கு மீறிய அங்கீகாரமோ அவமானமோகூட நமக்குக் கிடைக்கலாம். நம் தகுதிக்கு மீறிய அங்கீகாரம், அடையாளம் கிடைக்கும்போது ஏதோ ஒரு சக்தி நம்மை இயக்குகிறது என நினைக்கிறோம். நமக்கு ஓர் அவமானம் நிகழும்போது ஏதோ ஒரு சக்தி நமக்கு எதிராகச் செயல்படுகிறது என்று நினைக்கிறோம். இதுதான் எனக்கு நேர்ந்தது. என் தகுதிக்கு மீறிய ஓர் அடையாளம் எனக்குக் கிடைத்திருப்பதாக நானாகவே உணர்ந்தேன். இந்த அடையாளம் நமக்கு எப்படிக் கிடைத்தது என்று யோசித்தேன்.

நமக்கு தகுதி, திறமை, அறிவு, ஆற்றல் எல்லாம் இருந்தாலும் ஏதோ ஒன்று நம்மைச் செலுத்திக்கொண்டே இருக்கிறது. மனம் ஒரு விஷயத்தை இடைவிடாமல் பற்றிக்கொண்டே இருக்கிறது. அதைத் தொழுதுகொண்டே இருக்கிறது. 

பாரதியார்  `மந்திரம்போல் வேண்டுமடா சொல்' என்று எழுதுகிறார். இதில் மந்திரம் என்பது என்ன என்று யோசித்தேன். ஒரே விஷயத்தைத் திரும்பத் திரும்பச் சொல்லி, திரும்பத் திரும்பச் செய்யும்போது அதற்கு ஒரு வலு ஏற்படுகிறது. ஒரு சொல் சிலருக்கு சாதாரணமானதாக இருக்கிறது; சிலருக்கு மந்திரமாக இருக்கிறது. அதை மந்திரமாக மாற்றுவது நம் நம்பிக்கை. திரும்பத் திரும்பச் சொல்லும்போது அப்படி ஆகிறது.

தியானம், சூஃபி தத்துவங்கள் போன்ற விஷயங்களைக் கொஞ்சம் வாசிக்க ஆரம்பித்தேன். எனக்குப் பிடித்த தத்துவவியலாளர் ஓஷோ. `மனதை வெற்றுக்கோப்பையாக வைத்திரு. எதையும் ஊற்றி நிரப்பாதே’ என்று சொல்கிறார் ஓஷோ. 

எல்லாவற்றிலிருந்தும் வெளியேறுவது, எல்லாவற்றிலிருந்தும் விடுதலையாவது என்று மனம் நினைக்க ஆரம்பித்தது. அப்போதுதான் என் நண்பர், எழுத்தாளர் நாகூர் ரூமி, `ஆல்ஃபா தியான’த்தைப் பற்றிச் சொன்னார்.   

தியானம் என்பது அமைதியாக இருத்தல், நிதானத்துடன் இருத்தல். இவையெல்லாமே நம் சித்தர்கள் சொன்னதுதான். சூஃபிக்களுக்கும் சித்தர்களுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. சூஃபிக்கள் மதப்பற்றாளர்கள். சித்தர்கள் மதத்துக்கு எதிரானவர்கள். `மதத்தைக் கடந்து போகணும்னா, கடவுளையும் கடந்து போங்க’ என்று சொல்கிறார்கள்.

இகலோகம், பரலோகம் என்று இருக்கின்றன. இகத்திலிருந்து பரத்துக்கும் பரத்திலிருந்து இகத்துக்கும் வருவதுதான் ஆன்மிகம். ஒன்றைப் பற்றிக்கொண்டே இருப்பது, ஒன்றை தியானித்துக்கொண்டே இருப்பது... நம்மை ஓர் இடத்துக்குக் கொண்டு போய்விடும். இதற்கு மதமே இல்லை. இதற்கு மதம் தேவையும் இல்லை.   

`நீங்கள் என்னவாக ஆக வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அதுவாகவே ஆகிவிடுகிறீர்கள்' என்று சொல்கிறார்கள் அல்லவா? என்னவாக ஆக வேண்டும் என்பதை நோக்கித்தான் நகர்ந்துகொண்டே இருக்கிறோம். அதற்கு நம்பிக்கையும் முயற்சியும் தேவைப்படுகின்றன. இப்படி நகரும்போது எனக்கு பல விஷயங்கள் நடக்கின்றன. 

மனதை ஒருநிலைப்படுத்தி, ஒன்றை நோக்கி நகர்த்தும்போது வெற்றி கிடைக்கிறது. இந்த லௌகீக வெற்றியை நான் சொல்லவில்லை. சொந்தமாக வீடூ வாங்குவது, கார் வாங்குவது, பேங்க் பேலன்ஸை உயர்த்துவது அதை நான் சொல்லவில்லை. 

எந்த இடத்துக்குப் போனாலும் ஒரு நிதானத்துடன் இருக்க முடிகிறது. மிகப் பெரிய மேதைகள் இருக்கும் சூழலில்கூட பதற்றம் இல்லாமல் இருக்க முடிகிறது. எல்லாரோடும் அன்பாக இருக்க முடிகிறது. ஆயிரம் பாடல்களுக்கு மேல் எழுதிவிட்டேன். அகந்தை என்பது கொஞ்சம்கூட என் மூளைக்குப் போகவில்லை. மூளையில் அகந்தை ஏறி இருக்கிறதா இல்லையா என்பதை மற்றவர்கள்தான் சொல்ல வேண்டும் என்றாலும், என்னாலும் ஓரளவுக்கு அதை உணர முடிகிறது. நான் எழுதிய பாடலுக்கு மிகப்பெரிய வெற்றி கிடைக்கிறது. அப்படி நடக்கும்போது இந்தப் பாடல் என்னால்தான் வெற்றி பெற்றது என்கிற எண்ணம் எனக்கு வராது. என் வழியாக இது நடந்தது என்றுதான் நான் நினைப்பேன்.

என் வழியாக ஏன் நடக்கிறது... வேறு ஒருவர் மூலமாக நடந்திருக்கலாம் இல்லையா... இந்த ஆற்றல் எனக்கு எங்கிருந்து வழங்கப்படுகிறது... இயற்கையாகக் கிடைக்கிறதா... என் மனைவியின் மூலமாக நடக்கிறதா... ஏக சக்தியால் வழங்கப்படுகிறதா? 
என்னிலும் தமிழ் தெரிந்தவர்கள் இருக்கிறார்கள். என்னிலும் ஆற்றல் மிக்கவர்கள் இருக்கிறார்கள். என் வழியாக ஏன் நடக்கிறது என யோசிக்கிறேன். இதில் சித்தர் பாடல்கள் எனக்கு கைகொடுக்கின்றன. சின்ன வயதில் சித்தர் பாடல்களைப் படித்தபோது எனக்குப் புரியவில்லை. இப்போது அதிலுள்ள விஷயங்கள் புரிகின்றன. 

`நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலு புட்பம் சாத்தியே
சுற்றி வந்து முணுமுணுத்துச் சொல்லும் மந்திரம் ஏதடா
நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில் 

சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ’ எனும் சித்தர் பாடல்களைப் படித்தபோது `என்ன இப்படி சாமியைத் திட்டுகிறார்கள்?’ என நினைத்தேன். ஆனால், அப்படியே அதோடு சேர்ந்து வந்துகொண்டே இருந்தால், அந்தச் சக்தி நமக்கு வந்துவிடும். உதாரணமாக, நம் உடனிருப்பவர்களின் அன்பு ஏக சத்தியாக நமக்குத் துணை நிற்கும்.

1,300  பாடல்கள் எழுதியிருக்கிறேன். இதுவரைக்கும் எந்தக் கசப்பான அனுபவமும் எனக்கு ஏற்பட்டதில்லை. யாரிடமும் போய் எந்த வாய்ப்பையும் நான் கேட்டுப் பெறவில்லை. எந்த விளம்பரமும் செய்துகொண்டதில்லை. ஆனாலும், என்னைத் தேடி வாய்ப்புகள் வருகின்றன. 

இறைநிலையைத் தாண்டி மனம் என்பது ஒரு பெரிய சக்தியாக மாறுகிறது. `நம்பிச் செய்வது நடக்கும்’ என்று சொல்வார்கள் இல்லையா, அதுதான். அந்த நம்பிக்கையைத்தான் நான் சக்தி என்று சொல்கிறேன். மனம்தான் அதை நடத்திவைக்கிறது. அதற்கு ஆல்ஃபா தியானம் எனக்கு பெரிய அளவில் உதவியாக இருக்கிறது. 

எழுதுவதற்கு முன்பு எந்த நேரமாக இருந்தாலும் தியானம் செய்வேன். மனதை உற்று நோக்குவேன்; அதன் பரபரப்பைக் குறைப்பேன். நிதானத்துக்குக் கொண்டு வருவேன். இதுதான் மனம் எனும் மந்திரம்!'' என்கிறார் யுகபாரதி. 



Trending Articles

Sponsored