கண்முன் கஷ்டப்படும் ஏழைக்கு உதவுவதே சொர்க்கத்துக்கு செல்லும் வழி! - பைபிள் கதைகள் #BibleStoriesபொதுக்கூட்டங்களில் அரசியல்வாதிகளும் ஆட்சியாளர்களும் பேசும்போது அவ்வப்போது குட்டிக்கதைகளைச் சொல்லி, மக்களை தன்வசப்படுத்தி கைதட்டல் பெறுவார்கள். இவற்றுக்கெல்லாம் முன்னோடியாக விளங்கியவர் இயேசு கிறிஸ்து. மக்களுக்கு நல்ல கருத்துகளை எடுத்துரைக்க இயேசு நிறைய கதைகளைச் சொல்லியிருக்கிறார். அந்த வரிசையில், பைபிளில் கூறப்படும் கதைகளில் அதிக முன்னுதாரணமாக சொல்லப்படும் கதை நல்ல சமாரியன்.

Sponsored


இறைவனால் படைக்கப்பட்ட நாம் இறைவனுக்கு உகந்தவர்களாக வாழ்வது எப்படி... சொர்க்கத்துக்குச் செல்ல தகுதி உடையவர்கள் ஆக வாழ்வது எப்படி என்பதை விளக்குகிறது நல்ல சமாரியன் கதை.

Sponsored


சட்ட வல்லுநர் ஒருவர் இயேசு கிறிஸ்துவிடம், தனது அறிவுத் திறமையைக் காட்டும் நோக்கத்தில், `போதகரே சொர்க்கத்துக்கு செல்ல நான் என்ன செய்ய வேண்டும்?' என்று கேள்வி கேட்டார். அதற்கு இயேசு, `திருச்சட்ட நூலில் ஏற்கெனவே எழுதப்பட்டிருக்கிறது. அதில் நீங்கள் படித்தது என்ன?' என்று பதில் கேள்வி கேட்டார். உடனே சட்ட வல்லுநர், `உன் கடவுளாகிய ஆண்டவருக்கு, உன் முழு மனத்தோடும், உன் முழு ஆன்மாவோடும் அன்பு செய்வாயாக! உன்மீது நீ அன்பு காட்டுவதுபோல உன் அயலார் மீதும் அன்பு காட்டுவாயாக!' என்று பதிலளித்தார். இதைக் கேட்டதும் இயேசு, `இவற்றை நீங்கள் உங்கள் வாழ்க்கையில் கடைப்பிடித்தால் சொர்க்கத்துக்கு செல்வீர்கள்' என்றார்.

Sponsored


தன்னை அறிவாளியாகக் காட்டிக்கொள்ள விரும்பிய சட்ட வல்லுநர் ஏதேதோ யோசித்துப் பார்த்தார். கடைசியில் இயேசுவிடம் `என் அயலான் யார்?' என்று கேள்வி கேட்டார்.

சட்ட வல்லுநரின் இந்த கேள்விக்குப் பதில் கூறும் நோக்கில் இயேசு ஒரு கதையைச் சொன்னார். `எருசலேமிருந்து எரிக்கோவுக்கு ஒருவர் பயணம் செய்துகொண்டிருந்தார். வழியில் திருடர்கள் அந்தப் பயணியைத் தாக்கி, அவருடைய உடைகளையும் அவரிடம் இருந்த பொருள்களையும் திருடிக்கொண்டனர். மேலும், அவரை நையப்புடைத்து ரத்தக்காயங்களை ஏற்படுத்திவிட்டு அங்கிருந்து ஓடிவிட்டனர். 
அப்போது அந்த வழியாக மதபோதகர் ஒருவர் வந்தார். அவர் காயங்களுடன் காணப்பட்ட பயணியைப் பார்த்து விலகிச் சென்றார்.

போதகருக்குப் பிறகு லேவியன் ஒருவன் அந்த இடத்துக்கு வந்தான். அவனும் காயம்பட்ட பயணியைப் பார்த்து அவருக்கு உதவாமல் `நமக்கென்ன?' என்று சென்றுவிட்டார். 

யூதர்களால் வெறுக்கப்பட்டு, பிரிவினைவாதி என்று ஒதுக்கப்பட்ட சமாரியன் ஒருவர் அந்த வழியாக வந்தார். அவர் காயம்பட்டுக் கிடந்த அந்தப் பயணியைப் பார்த்து, பதறிப்போனார். `யார் பெற்ற பிள்ளையோ? இப்படிக் கவனிப்பாரின்றி கிடக்கிறாரே!' என இரக்கம்கொண்டார். அத்துடன் காயம்பட்ட பயணியின் அருகே வந்து, அவரது காயங்களைத் துடைத்து, எண்ணெய் ஊற்றி, கட்டுப் போட்டார்.

அந்தப் பயணியின் தாகத்தைப் போக்க திராட்சைப் பழச்சாறு கொடுத்தார். அத்துடன் தன்னுடைய வண்டியில் அவரை ஏற்றிக்கொண்டு போய் அருகேயுள்ள சத்திரத்தில் தங்கவைத்தார். சத்திரத்தின் பொறுப்பாளரிடம், இரண்டு வெள்ளி காசுகளைக் கொடுத்து, `இவரை நன்றாகக் கவனித்துக்கொள். இதற்கு மேலும் செலவானால் திரும்பி வரும்போது கொடுத்துவிடுகிறேன்' என்றார் அந்த சமாரியன்.
திருடர்களிடம் அகப்பட்டு காயம்பட்ட அந்தப் பயணி விஷயத்தில், மதபோதகர், லேவியன் மற்றும் சமாரியன் ஆகிய மூன்று பேரில் யார் அயலான்? என்று உங்களுக்குத் தோன்றுகிறது?’ என்று இயேசு சட்ட வல்லுநரிடம் கேட்டார். உடனே சட்ட வல்லுநர், `காயம்பட்டவருக்கு உதவிய சமாரியன்தான்' என்று பதிலளித்தார். 

அதற்கு இயேசு, சட்ட வல்லுநரிடம், `நீரும் போய் அவ்வாறே செய்யும்' எனக் கூறினார்.

நமது கண்முன்னே கஷ்டப்படும் ஏழை, எளிய மக்கள் மீது இரக்கம் கொண்டு, அவர்கள் வாழ்க்கையில் முன்னேற நம்மால் ஆன உதவிகளைச் செய்வதுதான் சொர்க்கத்துக்குச் செல்லும் வழி என்று இயேசு கூறுகிறார். நல்ல சமாரியனைப்போல நாமும் வாழ்ந்து, மண்ணுலக வாழ்வுக்குப் பிறகு விண்ணுலகம் செல்ல நம்மைத் தயார்படுத்திக்கொள்வோம். Trending Articles

Sponsored