மனிதர்களின் அதே பிரச்னைதான் சமயபுரம் கோயில் யானைக்கு மதம் பிடிக்கக் காரணம்!



திருச்சி சமயபுரத்தில் அமைந்திருக்கும் மாரியம்மன் கோயில் யானைக்கு மதம் பிடித்து, மூத்த பாகன் கஜேந்திரனை மிதித்துக் கொன்றிருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. பொதுவாக, `ஆண் யானைகளுக்குத்தான் மதம் பிடிக்கும்’ என்பார்கள். ஆனால், சமயபுரத்தில் பெண் யானைக்கு மதம் பிடித்திருக்கிறது. இந்தப் பரபரப்பு காரணமாக, சமயபுரம் கோயிலில் இன்று தரிசனம் ரத்துசெய்யப்பட்டிருக்கிறது.

Sponsored


மதம் பிடித்த யானை, கோயில் வளாகத்துக்குள் சுற்றி வந்ததால் கோயில் கதவுகள் அனைத்தும் மூடப்பட்டு பக்தர்கள் வெளியேற்றப்பட்டார்கள். இப்போது யானை ஓரிடத்தில் நின்றுகொண்டிருக்கிறது. ஆனால், யாராலும் அதை நெருங்க முடியவில்லை. உதவிப் பாகன்கள் கோயில் யானையை அமைதிப்படுத்தும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டிருக்கிறார்கள். யானையை அமைதிப்படுத்த ஜெயா என்ற பெண் யானையும் ஓர் ஆண் யானையும் வரவழைக்கப்பட்டிருக்கின்றன. மயக்க ஊசி செலுத்தாமல் யானையை அமைதிப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்துடன் முயற்சி தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறது.

Sponsored


Sponsored


மதம் பிடித்த பெண் யானையின் பெயர் மசினி. அதற்கு வயது ஒன்பது. 2008-ம் ஆண்டு முதுமலை கார்குடி வனப் பகுதியில் பெய்த பெருமழையின் காரணமாகப் பெருக்கெடுத்து வந்த ஆற்று நீரில் அடித்து வரப்பட்ட குட்டி இது. முதுமலையில் மசினி அம்மன் கோயிலுக்கு அருகில் மீட்கப்பட்டதால், இந்த யானைக்கு `மசினி’ என்று பெயர் வைத்தார்கள். இந்த யானையை மீண்டும் வனத்துக்குள் அனுப்பாமல் தெப்பக்காடு முகாமில் வைத்துப் பராமரித்து வந்தார்கள். 2016-ம் ஆண்டு சமயபுரம் கோயிலிலில் இருந்த மாரியப்பன் என்ற யானைக்கு மதம் பிடித்தது. அதைக் கட்டுப்படுத்த முடியாததால், டாப்சிலிப் முகாமுக்கு அனுப்பிவைத்தார்கள். மாரியப்பன் யானைக்குப் பதிலாக மசினி யானையை சமயபுரம் கோயிலுக்கு வழங்க உத்தரவிட்டார் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா.

மசினி யானைக்கு மதம் பிடித்தது ஏன்?

``வழக்கமாக பெண் யானைகளுக்கு மதம் பிடிப்பதில்லை. யானைக்கு மதம் பிடிப்பதென்பது, நோய் அல்ல. அது, ஆரோக்கியமான ஆண் யானையின் இயல்புகளில் ஒன்று. மத நீர் ஒழுகும் காலம் என்பது இணை சேரும் காலத்தைக் குறிக்கும். இந்தக் காலம் பத்து நாளிலிருந்து ஒரு மாதம் வரைகூட நீடிக்கும். சமயபுரம் பெண் யானைக்கு ஏற்பட்டிருப்பது மதம் அல்ல. ஒருவித மன அழுத்தம். அதன் வெளிப்பாடுதான் இந்த ஆவேசம். யானைகளுக்கு வியர்வைச் சுரப்பி கிடையாது. அதனால் அது வெயிலில் சுற்றாது. உணவைக்கூட, காலை, மாலை, இரவு வேளைகளில்தான் தேடும். ஆனால், கோயில் யானைகள் நீண்ட நேரம் வெயிலில் நிற்கவைக்கப்படுகின்றன. தார்ச் சாலையில் அவற்றை நடக்கவைக்கிறார்கள். யானையின் இயல்பென்பது நடந்துகொண்டே இருப்பது. ஓரிடத்தில் நிற்கவே நிற்காது. கோயில் யானைகள் ஒரே இடத்தில் நிற்கவைக்கப்படுகின்றன. அதனால், யானைகளுக்கு மன அழுத்தம் ஏற்படுகிறது. வருடத்துக்கு ஒருமுறை புத்துணர்ச்சி முகாமுக்கு அனுப்பிவைத்தால் மட்டும் போதாது. கோயில் யானைகளைப் பராமரிப்பதில் கடுமையான விதிமுறைகளை உருவாக்க வேண்டும். வியர்வைச் சுரப்பியே இல்லாத யானை மீது போர்வை போர்த்தி, அலங்காரம் செய்வது தவறு. தொடர்ச்சியாக அது அனுபவிக்கும் வேதனைதான் இப்படி மன அழுத்தமாகவும் கோபமாகவும் வெளிப்படுகிறது" என்கிறார் 'ஓசை சுற்றுச்சூழல் அமைப்பின்' தலைவர் காளிதாஸ்.

கோயில்களில் `கோபூஜை’, `கஜபூஜை’ போன்ற பூஜைகளைச் செய்வது மிகவும் விசேஷம். அதன் காரணமாகத்தான் கோயில்களில் பசுக்களும், யானைகளும் வளர்க்கப்படுகின்றன. பெரும்பாலான கோயில்களில் பசுக்கள் வளர்க்கப்பட்டாலும், குறிப்பிடத்தக்க சில கோயில்களில் மட்டுமே யானைகள் வளர்க்கப்படுகின்றன. கோயில்களுக்கு யானைகளை நன்கொடையாகத் தரவிரும்பும் நபர்கள், வனத்துறையினரிடம் உரிய அனுமதி பெறுவதுடன், யானைகளை எப்படிப் பராமரிக்க வேண்டும் என்று வனத்துறையினர் விதிக்கும் நிபந்தனைகளுக்கு உட்பட்டுத்தான் யானைகளைப் பெற்று கோயில்களுக்கு வழங்க வேண்டும் என்பது நியதி. ஆனால், யானைகளைப் பராமரிப்பதில் வனத்துறையினர் விதித்திருக்கும் நிபந்தனைகளை மீறுவதால்தான், கோயில் யானைகளுக்கு மதம் பிடிக்கிறது. உரிய முறையில் பராமரித்தால், இதுபோன்ற அசம்பாவிதங்களைத் தவிர்த்துவிடலாம்.



Trending Articles

Sponsored