வீரபாகு உள்ளிட்ட நவவீரர்கள் எப்படித் தோன்றினார்கள் தெரியுமா..?- விசாக மகத்துவம்!Sponsored'தமிழ்க் கடவுள்' என்று போற்றப்படும் அழகு முருகனுக்கு ஆயிரமாய் திருநாமங்கள் இருந்தாலும், சிறப்பான பெயர்களாகத் திகழ்பவை 'கார்த்திகேயன்' மற்றும் 'விசாகன்' ஆகிய இரண்டு திருப்பெயர்களாகும். காரணம்?

முருகப்பெருமான் ஞானஸ்வரூபி. அவனைச் சரணடைந்தால், நம்முடைய அகம்பாவம் நீங்கும். அகம்பாவமே மனிதர்களைப் பாவக்குழியில் வீழ்த்துகிறது. அதன் விளைவாக பல துன்பங்களையும் அனுபவிக்க நேரிடுகிறது. சூரபத்மன் அகங்காரத்தின் ஒட்டுமொத்த வடிவம். அவனால் பலவகையான துன்பங்களுக்கு ஆட்பட்ட தேவர்களின் துயரங்களைத் தீர்ப்பதற்காகவே, 'குமார சம்பவம்' நிகழ்ந்தது.

Sponsored


தர்மத்தை நிலைநிறுத்தவும், அதர்மத்தை அழிக்கவும் இறைவன் பல அவதாரங்களை எடுத்ததாக புராணங்கள் பேசுகின்றன. முருகப்பெருமானின் அவதாரம் தவிர்த்து, இறைவனின் மற்ற அவதாரங்களில் அசுரர்கள் சம்ஹாரம் செய்யப்பட்டனர். ஆனால், அழகு, அன்பு, கருணை ஆகிய அனைத்தும் உருவம் தரித்து வந்ததுபோல் அவதரித்த முருகப்பெருமான், சூரனை சம்ஹாரம் செய்யவில்லை. மயிலாகவும் சேவலாகவும் மாற்றி வாகனமாகவும், கொடியாகவும் கொண்டார். ஆக, முருகப்பெருமான் சூரனை சம்ஹாரம் செய்யவில்லை; மாறாக ஆட்கொண்டருளினார்.

Sponsored


அதுவே முருகப்பெருமானின் பேரருள் பெருங்கருணைத் திறம்.

முருகப்பெருமானின் திரு அவதாரம் நிகழ்ந்த வைகாசி விசாகம், நாளை (28.5.18) முருகப்பெருமானின் அனைத்து தலங்களிலும் வெகு விமர்சையாகக் கொண்டாடப்படவுள்ளது.

சரி, விசாக நட்சத்திரத்தில் முருகப்பெருமான் அவதரித்தபோது நிகழ்ந்த மற்றோர் அற்புதம்தான் என்ன? 

சூரபத்மனின் கொடுமைகளைத் தாங்கமாட்டாத தேவர்கள் அனைவரும் சிவபெருமானிடம் சென்று பிரார்த்திக்கின்றனர். அவர்களுக்கு அபயம் அருளிய சிவபெருமான், குமார சம்பவத்தை நிகழ்த்தத் திருவுள்ளம் கொண்டார். தம் நெற்றிக் கண்ணைத் திறக்க, ஆறு தீக்கதிர்கள் வெளிப்பட்டு, சரவணப்பொய்கையில் இருந்த ஆறு தாமரை மலர்களில் ஆறு அழகிய குழந்தைகளாகத் தோன்றியதும், அறுவரையும் அன்னை பார்வதி ஆறு குழந்தைகளையும் ஒன்று சேர்த்து, அதன் பயனாக முருகப்பெருமானுக்கு ஆறுமுகன் என்ற திருப்பெயர் ஏற்பட்டதும் நாமெல்லாம் அறிந்த விஷயம்தான். ஆனால், அன்றைக்கே நிகழ்ந்த மற்றோர் அற்புதம் நவவீரர்களின் தோற்றம்தான்.

குமாரசம்பவத்துக்கு முன்பாக மற்றொரு தருணத்தில் சிவபெருமான் தம் நெற்றிக்கண்ணைத் திறந்த நிகழ்ச்சியும் நடைபெற்றது. அப்போது வெளிப்பட்ட அக்னிச் சுடரின் வெம்மை தாங்கமாட்டாமல், பார்வதி தேவி எழுந்தோடினார். அதனால், அவருடைய திருவடி சிலம்புகளிலிருந்து நவமணிகள் தெறித்துச் சிதறின. சிதறிய நவமணிகளை, பார்வதி தேவியார் திருக்கண் நோக்க, அந்த மணிகளிலிருந்து நவசக்தி தேவியர் தோன்றினர். ஈசனின் திருவுள்ளக்குறிப்பின்படி அவர்கள் கருத்தரித்தனர். ஆனால், திடீரெனத் தோன்றிய நவதேவியரும் ஈசனருகே நிற்பதைக் கண்ட சக்திதேவி அவர்களிடம் கோபம் கொண்டு அவர்களது கரு பிரசவமாகாமல் நீண்ட காலம் அப்படியே தங்கியிருக்க வேண்டும் என்று சபித்தார்.

அம்பிகையின் சாபம் கேட்டு அஞ்சி நின்ற நவசக்தியரின் உடலிலிருந்து வெளிப்பட்ட வியர்வைத்துளிகள் ஒவ்வொன்றும் ஒரு வீரனாக மாற, மொத்தம் ஒரு லட்சம் வீரர்கள் தோன்றினர். பின்னர், அம்பிகையின் கோபம் தணியவேண்டி சரவணப்பொய்கையின் அருகில் தவமியற்றினர். காலம் கனிந்து விசாகத்தன்று முருகப்பெருமானின் அவதாரம் நிகழ்ந்த அதே தருணத்தில், பார்வதிதேவி நவசக்தியருக்கும் அருள்புரிந்தாள். நவசக்தியரும் ஆளுக்கொரு பிள்ளையைப் பெற்றனர்.

மாணிக்கவல்லி வீரபாகுவையும், மௌத்திகவல்லி வீரகேசரியையும், புஷ்பராகவல்லி வீரமகேந்திரனையும், கோமேதகவல்லி வீர மகேஸ்வரனையும், வைடூரியவல்லி வீர புரந்தரனையும், வைரவல்லி வீர ரட்சகனையும், மரகதவல்லி வீர மார்த்தாண்டனையும், பவளவல்லி வீராந்தகனையும், இந்திரநீலவல்லி வீர தீரனையும் வீரத் திருமகன்களாகப் பெற்றனர். பிறக்கும்போதே பகைவர்களை அச்சுறுத்தும் தோற்றத்தோடு தோன்றிய அவர்களை வாழ்த்தி ஈசன் ஆளுக்கொரு வாளை பரிசளித்து வாழ்த்தினார். தர்மத்தை காக்க பிறப்பெடுத்திருக்கும் முருகப்பெருமானுக்கு உதவத் தயாராக இருக்க வேண்டும் என்றும் ஆணையிட்டார். இப்படி முருகப்பெருமான் தோன்றிய திருநாளிலேயே உருவானவர்கள் இந்த நவவீரர்கள். வைகாசி விசாகத் திருநாளில் கந்தனை வணங்குபவர்கள் இவர்களையும் வணங்கினால் எதிரிகள் பயம் ஒழிந்து வாழ்வாங்கு வாழ்வார்கள் என்கிறார்கள் ஆன்மிகப் பெரியோர்கள்.

முருகப்பெருமான் விசாக நட்சத்திரத்தில் தோன்றியதால் விசாகன் என்ற பெயரும், கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப்பெற்றதால் கார்த்திகேயன் என்ற பெயரும் சிறப்பு வாய்ந்தவைகளாகப் போற்றப்படுகின்றன.

எங்கும் ஞான வடிவாக காட்சியளிக்கும் முருகப்பெருமான் அவதரித்த இந்த நாளில் அவன் தாள் வணங்கி அவன் புகழ் பாடி உய்வோம்.Trending Articles

Sponsored