`ஆன்மா இறைவனோடு கலக்கும் இடமே கோயில்’ - காஞ்சி மகா ஸ்வாமிகள் ஜயந்தி தினப் பகிர்வு #VikatanPhotoStoryகாஞ்சி மகா ஸ்வாமிகளின் ஜயந்தி விழா இன்று (29.5.18) கொண்டாடப்படவிருக்கிறது. 'நடமாடும் தெய்வம்' என்று பக்தர்கள் போற்றி வணங்கிய காஞ்சி பரமாசார்ய ஸ்வாமிகளின் 125-வது அவதார ஜயந்தியை முன்னிட்டு, அவருடைய அமுதம் நிகர்த்த அருள்மொழிகளை அவருடைய திருவடிகளுக்கு சமர்ப்பிக்கிறோம்.

Sponsored


Sponsored


மரத்திலிருக்கும் பூ மறைந்து காயாகிறது; காய் கனியாகிறது. அதுபோலவே, மனிதர்கள் மறைந்துவிட்டாலும், அவர்களுடைய ஆத்மா அழியாமல், வேறொரு உடலை மேற்கொள்கிறது. மாறுதல் இல்லாமல் எப்போதும் ஒன்றுபோலவே இருக்கும் ஆத்மாதான் நிலையானதே தவிர, அது மேற்கொள்ளும் உடல் நிலையானதல்ல. 

Sponsored


பக்தியே முக்திக்கு பூர்வாங்கம். காரணமே இல்லாமல் எல்லாக் காலங்களிலும் பரமாத்மாவை தியானித்து, பரமாத்மாவையே சரணடைய வேண்டும். `இதைக் கொடு, பக்தி செய்கிறேன்' என்பது பக்தி அல்ல. தன்னை அறியாமல் ஆண்டவனிடம் லயித்துவிடுகிற சித்த விருத்திக்குப் பெயர்தான் பக்தி.

மனம் எதைத் தீவிரமாக இடைவிடாமல் நினைக்கிறதோ, அதுவாகவே மாறிவிடுகிறது.

இரைச்சல் இல்லாமல் வரும் நதியைக் கடல் எதிர்கொண்டு சென்று உள்வாங்கிக்கொள்கிறது. நாமும் அடக்கமாக வாழ்ந்தால்தான் பரமாத்மா எனும் கடல் நம்மைத் தம்முள் அடக்கம் செய்துகொண்டுவிடும்.

எதை நாம் செய்யக் கூடாது என்று உள்மனதில் தோன்றுகிறதோ அதுதான் பாவம். எதைச் செய்வது நல்லது என்று தோன்றுகிறதோ அதுவே புண்ணியம். ஆசையில்லாமல் ஒரு காரியத்தைச் செய்தால் அது புண்ணியம். ஆசையோடு செய்தால் அது பாவம்.

கயிற்றை எப்படிச் சுற்றினோமோ அப்படித்தான் அவிழ்க்க வேண்டும். அதேபோல் நாம் வாக்கினால் செய்த பாவத்தை, பகவானின் நாமத்தை ஜபிப்பதன் மூலமாகவும், மனதால் செய்த பாவத்தை இறைவனை தியானிப்பதன் மூலமாகவும், தேகத்தால் செய்த பாவத்தை உடலை இறைவனின் திருப்பணியில் ஈடுபடுத்துவதன் மூலமாகவும், பணத்தால் செய்த பாவத்தை மற்றவர்களுக்கு தர்மம் செய்வதன் மூலமாகவும் நிவர்த்தி செய்துகொள்ள வேண்டும்.

தண்ணீர் நிரம்பிய குடம் கிணற்று நீருக்குள் இருக்கும்போது இழுப்பதற்கு லேசாக இருக்கிறது. அதைப்போலவே, நம்முடைய துன்பங்களையெல்லாம் 'ஞானம்' என்ற கிணற்றுக்குள் அழுத்திவிட வேண்டும். அப்போதுதான் மனம் லேசாகி, துக்கம் குறையும்.

ஒரு மனிதனுக்கு சக மனிதனைப் பற்றித் தெரியாதபோதே, இத்தனை அகங்காரம் இருக்கிறதென்றால், மூன்று காலங்களையும் அறிந்திருக்கும் வல்லமை அவனுக்கு  இருந்தால், அவனுடைய அக்கிரமம் எல்லை மீறிப்போய்விடும். அதனால்தான் பல கேள்விகளுக்கு விடை தெரியாமல் வைக்கப்பட்டிருக்கிறான். எனவே, அகங்காரத்தை விட்டொழித்து அமைதியாக இருங்கள்.

இஷ்ட தெய்வங்களே மேலான தெய்வங்கள் என்று சிலர் நினைக்கலாம். ஆனால், எல்லா தெய்வங்களும் ஒரே பரம்பொருளின் பல தோற்றங்கள் என்பதே உண்மை.

ஈஸ்வரன் பரம தயாளன், ஏழைப் பங்காளன். எல்லோராலும் மிகச் சுலபமாக ஆராதிக்கக்கூடியவன் ஈஸ்வரன். அவனை நினைத்து மனம் உருகிக் கரைய வேண்டும். இவ்வாறு செய்தால் நம் ஜன்மம் சாபல்யமாகிவிடும்.

மனிதர்கள் பகவானுக்கு நன்றி சொல்லும் இடமே கோயில்கள். கோயில்களின் சூழல் மிகவும் அமைதியாக, தூய்மையாக இருக்க வேண்டும். பகவத் நாமங்களை ஒலிப்பதைத் தவிர, மற்ற சத்தங்கள் எழாதபடி இருக்க வேண்டும். ஆன்மா இறைவனோடு கலக்கும் இடமே கோயில்.

வாயையும் கண்களையும் மூடிக்கொள்ளலாம். ஆனால் மனதிடம், ‘எதையும் நினைக்காதே’ என்று சொன்னால் கேட்கவே கேட்காது! மனதைக் கட்டுப்படுத்த அந்தரங்கம், பகிரங்கம் என்று இரண்டு வழிகள் உண்டு. பகிரங்கம் என்பதில் தியானம், சந்தியாவந்தனம், தியாகம், தர்மம் ஆகியவையும், அந்தரங்கம் என்பதில் அகிம்சை, சத்தியம், திருடாமல் இருப்பது, தூய்மை, இந்திரியக் கட்டுப்பாடு ஆகியவையும் உள்ளன.

ஆரவாரமான, அமைதியே இல்லாத கோயில் தெய்வ சாந்நித்யத்தைக் குறைக்கிறது. வியாபார இடமாகிவரும் கோயில்கள் அநாசாரத்தின் அடையாளம். பக்தியின் சூழலைக் கெடுக்கும் இதுபோன்ற ஆலயங்களை மாற்றியமைக்க வேண்டும்.

ஒருவரின் உண்மையான அன்புக்குக் காரணமோ, நோக்கமோ தேவையில்லை. நிபந்தனையற்ற அன்பை ஒருவர் காண்பிக்கிறாரா என்று கேட்டால், ஒருவர் காண்பிக்கிறார். அவர்தான் இறைவன். அவரிடம் மட்டுமே பரிபூரண அன்பு நிறைந்துள்ளது.
 Trending Articles

Sponsored