கோயில் யானைகளுக்கு மதம் பிடிப்பது ஏன், தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?



Sponsored



காட்டில், பரந்த நிலப்பரப்பில் தன் கூட்டத்தோடு சுதந்திரமாகச் சுற்றித் திரிந்த யானைகளை, தங்களுக்குத் தேவையான உணவை தேவையான நேரத்தில் சாப்பிட்டுத் திரிந்த அந்த அழகு ஜீவன்களை, நாளின் பாதி நேரத்தை நீரில் உடலை நனைத்து சுகமாகக் கழித்த அந்த அபூர்வ விலங்குகளை காட்டிலிருந்து நாட்டுக்குள் கூட்டி வந்தால் என்னவாகும்?

காட்டிலிருந்து நாட்டுக்குள் அழைத்து வந்து பழக்கப்படுத்தி, பயிற்சி கொடுத்து சொல்வதை எல்லாம் கேட்கவைக்கலாம்; அவ்வளவு பெரிய உருவத்தை ஓர் அங்குசத்தில் கட்டுப்படுத்திவிடலாம்; தெருத் தெருவாக ஊர்வலம் அழைத்துச் செல்லலாம்; அனைவருக்கும் ஆசீர்வாதம் வழங்கச் செய்து காசு வாங்கலாம்... இந்த `லாம்’- எல்லாம் எதுவரை?

Sponsored


அந்த யானை அவற்றை அனுமதிக்கும்வரை, அவற்றையெல்லாம் தாங்கிக்கொள்ளும்வரை, அது பொறுமையிழக்கும்வரை... ஒருவேளை பொறுமையிழந்தால், கோபம் கொண்டால் யாராலும் அதைக் கட்டுப்படுத்த முடியாது. நாம் அதைக் கட்டுப்படுத்தி வெற்றி காண்பதற்குள் பல அழிவுகள் கண் முன்னே நிகழ்ந்து போயிருக்கும்.

Sponsored


யானைக்கு மதம் பிடிக்கும் நேரங்களிலெல்லாம் நாம் அதைக் கண்கூடாகப் பார்க்கிறோம். சமீபத்தில் சமயபுரம் கோயிலில் நடந்த நிகழ்வு அதற்கொரு சாட்சி. பாகன் கஜேந்திரனின் உயிர் அநியாயமாகப் பறிபோனது. இத்தனை நாள்கள் அருகிலிருந்து பார்த்துக்கொண்ட பாகனுக்கே இந்த நிலை என்றால்... மற்றவர்களுக்கு?

பொதுவாக யானைகளுக்கு மதம் பிடிப்பது ஏன்... யானையின் இதுபோன்ற திடீர் குண மாற்றம், கோபத்துக்கு என்ன காரணம்? பதிலளிக்கிறார்  `ஓசை’ சுற்றுச்சூழல் அமைப்பின் தலைவர் காளிதாஸ்.

``யானை ஒரு காட்டு விலங்கு. என்னதான் நாம் அதைப் பழக்கப்படுத்தி வளர்த்தாலும், அது ஒருபோதும் வீட்டு விலங்காகாது. அதற்குள் ஒரு காட்டுத்தன்மை இருந்துகொண்டேயிருக்கும். அதே சமயம் யானைகளைப் பழக்கி, மனிதர்களின் தேவைகளுக்குப் பயன்படுத்திக்கொள்ளும் பழக்கம் பழங்காலத்திலிருந்தே நம் நாட்டில் இருந்துவருகிறது. தமிழர்களைப் பொறுத்தவரை, போர்களுக்குப் பயன்படுத்தி வந்த வரலாறு இருக்கிறது. யானை வளர்ப்பு என்பது தனித்துவமான கலை. அனைவராலும் அதை வளர்த்துவிட முடியாது. அதற்கு ஒரு பாரம்பர்ய அறிவு வேண்டும்.

தமிழ்நாட்டில், பழங்குடியின மக்களான குரும்பர் மற்றும் மலசர்கள்தான் வனத்துறை கேம்ப்களில் யானைப் பாகன்களாக இருந்துவருகிறார்கள். இந்தியாவில் காட்டு யானைகளைப் பிடித்து வளர்ப்பவர்கள், அங்குசத்தைக்கொண்டு யானைகளைத் துன்புறுத்தித்தான் பழக்குவார்கள். ஆனால், தமிழ்நாட்டிலுள்ள பழங்குடியின மக்கள் வெறும் தடியைவைத்து துன்புறுத்தாமலே கட்டுப்படுத்துகிறார்கள். எவ்வளவு உயரமான காட்டு யானையையும் பிடித்து, பழக்கிவிடுவார்கள். இவ்வளவு நிபுணத்துவம் வாய்ந்த பாகன்கள் இருப்பதால் கேம்ப்களில் இருக்கிற யானைகளுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை.

அதே நேரத்தில், கோயில் யானைகளில் இரண்டு வகைகள் இருக்கின்றன. ஒன்று, ஏற்கெனவே கோயில்களில் இருக்கிற யானைகள் போடும் குட்டிகள்; மற்றொன்று, வட மாநிலங்களிலிருந்து விலைக்கு வாங்கி வரப்படும் யானைக்குட்டிகள். இவற்றில் கோயில் யானைகள் போட்ட குட்டி யானைகளைச் சிறுவயதிலிருந்தே பழக்கிவிடலாம் அதில் எந்தப் பிரச்னையும் இல்லை. வெளியிலிருந்து வாங்கிவரும் யானைகளால்தான் அசம்பாவிதங்கள் ஏற்படுகின்றன. அதற்கு யானைகளை குற்றம் சொல்ல முடியாது.

கேம்ப்களில்வைத்துப் பராமரிக்கப்படும் யானைகளுக்கு அரிசி, வெல்லம், புல், ராகி கலந்த சரிவிகித உணவுகள் யானையின் உயரத்துக்கும் எடைக்கும் தகுந்தவாறு கொடுக்கப்படுகின்றன. கோயில்களில் வளர்க்கப்படும் யானைகளுக்கு அப்படி சரிவிகித உணவுகள் கொடுக்கப்படுவதில்லை. நமக்கு விருப்பப்பட்ட உணவுகளைக் கொடுத்துவிடுகிறோம். கேம்ப்களில் பராமரிக்கப்படும் யானைகளுக்கு பசுந்தழைகள் கொடுக்கிறார்கள். காடுகளில் மேயவிடவும் செய்கிறார்கள். யானையின் உணவில் புற்கள் மிக முக்கியமானவை. ஆனால், கோயில்களில் வளர்க்கப்படும் யானைகள் குறைந்த அளவிலாவது புற்கள் சாப்பிடுகின்றனவா என்பது தெரியவில்லை.

கேம்ப்களில் உள்ள யானைகளின் உடல்நிலையை மருத்துவர்கள் தொடர்ச்சியாக கவனித்துவருவார்கள். ஆனால், கோயில் யானைகளின் உடல்நிலையைப் பெரிதாகப் பராமரிப்பதில்லை. கேம்ப்களில் இருக்கிற யானைப் பாகன்கள் மிகவும் திறமைசாலிகள். ஆனால், கோயில் யானைகளைப் பராமரிப்பவர்களுக்குப் போதிய பயிற்சிகள் கொடுக்கப்படுவதில்லை. புதிதாக வாங்கி வரும் யானைகளை அவர்களால் கையாள முடிவதில்லை.

யானைக்கு மதம் பிடிப்பது என்பது அதன் நோய் அல்ல... இயல்பு. ஆரோக்கியமான, பருவத்துக்கு வந்த ஆண் யானைக்கு ஆண்டுக்கு ஒருமுறை மதக்காலம் வரும். இந்தக் காலத்தில் ஆண் பாலுணர்வு சுரப்பிகள் மிகுந்து சுரக்கும்போது ஒருவித பரவசநிலையை அடையும். அந்த நேரத்தில் பல பெண் யானைகளுடன் உடலுறவுகொள்ளும். ஒருவித குறுகுறுப்போடு அலையும். மதக்காலம் பதினைந்து நாள்கள் முதல் மூன்று மாதங்கள் வரை இருக்கும். அதற்குப் பிறகு இயல்புநிலையை அடைந்துவிடும். மதக்காலத்தில் ஆண் யானைகளின் கண்களுக்கு மேல் மதநீர் சுரக்கும். அதைவைத்து நாம் தெரிந்துகொள்ளலாம். பெண் யானைகளுக்கு மதம் பிடிப்பதில்லை. ஆனால், பாலுணர்வுச் சுரப்பிகள் சுரக்கும்போது இயல்புநிலையிலிருந்து சிறு குறுகுறுப்போடு இருக்கும். அப்போது அதன் உடலில் சுரக்கும் சுரப்பிகளின் வாசத்தை வைத்துதான் ஆண் யானைகள், அவற்றோடு உடலுறவுகொள்ளும்.

கோயில் யானைகள் மதத்தால் மட்டும் மூர்க்கம் கொள்வதில்லை. வளர்ப்பு முறைகளாலும் மூர்க்கமடைகின்றன. போதிய உணவு கொடுக்காமல் இருப்பது; ஊர்வலமாக அழைத்துச் செல்வது; அதிக நேரம் வெயிலில் நிற்கவைப்பது; அதன் மீது எதையாவது போர்த்துவது... போன்ற செயல்களால்தான் மூர்க்கமடைகின்றன.

இதில் கவனிக்க வேண்டிய இரண்டு முக்கியமான விஷயங்கள் இருக்கின்றன. ஒன்று, யானைகளுக்கு வியர்வைச் சுரப்பிகள் கிடையாது; காடுகளில் அதிகமாக வெயிலடிக்கும் நேரங்களில் நிழலான பகுதிகளுக்குச் சென்றுவிடும். ஆனால், இங்கேயோ யானைகள் தொடர்ந்து வெயிலில் நிற்கவைக்கப்படுகின்றன. மற்றொன்று, யானைகள் எப்போதும் கூட்டமாக வாழ்ந்து பழக்கப்பட்டவை. அப்படிப்பட்ட விலங்கை, தனியாகக் கூட்டி வருவதே அதன் மீது நாம் தொடுக்கும் உளவியல் வன்முறை. இதுபோன்ற பலவிதமான அழுத்தங்களால்தான் அதற்குள்ளிருக்கும் முரட்டுத்தனம் வெளிப்படுகிறது. அதனால் முதலில் பாதிப்படுவது பாகன்தான். அதற்கு முன்பாக பாகனின் பேச்சை நன்றாகக் கேட்டு வந்த யானை, மூர்க்கமான பிறகு அவரை துச்சமாக நினைத்துவிடும்.

சமயபுரத்திலும் அதுதான் நடந்தது. அது, காட்டில் தாயிடமிருந்து கைவிடப்பட்டு அனாதையாகத் திரிந்த யானைக்குட்டி. அதை முதலில் வனத்துறையின் கேம்ப்பில் வைத்து வளர்த்தார்கள். பின்னர் அது கோயிலுக்கு தானமாகக் கொடுக்கப்பட்டது. அப்படிக் கொடுத்ததே தவறு என்பது எங்களின் கருத்து. பொதுவாக, கோயில்களுக்கு யானை தேவையா என்பதையே மறு பரிசீலனை செய்ய வேண்டும். மன்னர் காலத்தில் பராமரிப்பதற்கு போதுமான இடமிருந்தது. அதற்காக நிதி ஒதுக்கப்பட்டது. தனியாக ஆட்கள் இருந்தார்கள். இப்போது அது போன்ற வசதிகள் இல்லை. இதுவரை கோயில்களில் இருக்கிற யானைகள் அப்படியே இருக்கட்டும். காடுகளில் விட வேண்டாம். இந்த யானைகளுக்கு ஏதேனும் நோய்களிருந்தால், அது காட்டு யானைகளுக்கும் பரவிவிடும். அதே நேரத்தில், புதிதாக இனி எந்த யானையையும் கோயில்களுக்குக் கொண்டுவரக் கூடாது.

இந்து சமய அறநிலையத்துறையின் யானை பராமரிப்புக்கான விதிமுறைகள் சரியாகப் பின்பற்றப்படுகின்றனவா என்பதைக் கண்காணிக்க வேண்டும். ஆண்டுக்கொருமுறை புத்துணர்வு முகாம் நடத்த வேண்டும். புத்துணர்வு முகாமை மேட்டுப்பாளையத்தில் மட்டுமல்லாமல், காவிரிக்கரையிலும் நடத்தலாம். பல இடங்களில் முகாம்களை உருவாக்கலாம். பல கிலோமீட்டர்கள் யானைகளை அழைத்துசென்று துன்புறுத்துவதை நிறுத்தலாம். மருத்துவர்களை நியமித்து கோயில் யானைகளை மாதத்துக்கு இருமுறை கண்காணிக்க வேண்டும். அவற்றின் உடலில், பழக்கவழக்கங்களில் ஏற்படும் மாற்றங்களைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். தினமும் யானைகளை வாக்கிங் கூட்டிச் செல்ல வேண்டும். அதிக நேரம் வெயிலில் நிறுத்தக் கூடாது.

பல கோயில் யானைகளுக்கு டி.பி போன்ற நோய் பாதிப்புகள் இருக்கின்றன. மனிதர்களிடமிருந்துதான் இவை யானைகளுக்குப் பரவியிருக்கும். ஆசீர்வாதம் செய்யும்போது மீண்டும் மனிதர்களுக்குப் பரவ வாய்ப்பிருக்கிறது. அதனால், குழந்தைகளுக்கு யானைகளைவைத்து ஆசீர்வாதம் செய்யவைப்பதை மறுபரிசீலனை செய்ய வேண்டும். இவை மூர்க்கமடையும் நேரத்தில் பக்தர்களுக்கு பல ஆபத்துகள் ஏற்படுகின்றன. இவற்றையெல்லாம் கருத்தில்கொண்டு கோயில்களில் யானைகள் அவசியம்தானா என்பதை அரசாங்கம் பரிசீலிக்க வேண்டும்" என்கிறார்

கோயில் யானைகள் எப்படி பராமரிக்கப்படுகின்றன?

* காலை 5 மணிக்குக் கண்விழிப்பு

* 6 மணிக்கு ஐந்து கிலோமீட்டர் வாக்கிங்.

*7 மணிக்கு கோயில் பூஜையில் பங்கேற்பு.

*பூஜை முடிந்ததும் மூன்று மணி நேரக் குளியல்.

* அடுத்ததாக நெய் பொங்கல், மாட்டுத்தீவனம், தென்னை மட்டை, அரசந்தழை, புற்கள், கொள்ளு... உணவாக.

* சாப்பாடு முடிந்ததும் கோயிலில் அறுபது, எழுபது சாந்தி பூஜை செய்ய வருபவர்களுக்கு ஆசீர்வாதம் வழங்குதல் (10 - 12 மணி).

*பின்னர் மதியம் மூன்று மணியிலிருந்து நான்கு மணி வரை ஷவரில் குளியல்.

* பின்னர் நான்கு மணிக்கு மீண்டும் வாக்கிங், சாப்பாடு.

* மாலை கோயிலில் பூஜைக்கு 6 - 7 மணிவரை.

* பின்னர் இரவில் தூங்கிவிடும். நடுவே இரண்டு மணிக்கு மட்டும் கண்விழித்துச் சாப்பிட்டுவிட்டு மீண்டும் உறக்கம்.

*நாளொன்றுக்கு ஐந்து முறை குடிப்பதற்கு தண்ணீர் கொடுக்கப்படும்.

*இடையிடையே ஆப்பிள், திராட்சை போன்ற பழங்கள் கொடுக்கப்படும்.

*இடையிடையே தண்ணீரால் உடலை நனைத்தல்.

* மதக்காலத்தில் மருந்து கொடுக்க வேண்டும். சூட்டின் காரணமாகத்தான் மதம் பிடிக்கும். இஷ்டம்போல் அதன் உடலெங்கும் தண்ணீர் அடித்துவிட்டால் போதும்.

- திருக்கடையூர் அமிர்தகடேசுவரர் கோயில் யானை அபிராமி (13) பராமரிப்படும் முறை குறித்து யானைப் பாகன் சுகுமாரன் தெரிவித்த கருத்துகள் இவை. இந்த யானை மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் அஸ்ஸாமிலிருந்து விலைக்கு வாங்கி வரப்பட்டது.



Trending Articles

Sponsored