``எல்லாக் காலத்திலும் கனி கொடுக்கும் மரமாக இருப்போம்!’’ - இயேசு கிறிஸ்து



Sponsored



இயேசு கிறிஸ்து ஜெருசலேமை அடைந்த பிறகு பெத்தானியா என்ற இடத்துக்குச் சென்றுவிட்டு திரும்பினார். அப்போது வழியில் அவருக்குப் பசி எடுக்கவே, இலைகள் அடர்ந்த ஓர் அத்திமரத்தில் கனிகள் ஏதும் இருக்குமா என்று ஆர்வத்துடன் பார்க்கிறார். ஆனால், கனிகள் எதுவும் இல்லாததைக் கண்டு, அவர் அந்த மரத்தைச் சபிக்கிறார். பருவ காலம் இல்லை என்பதால் அந்த மரத்தில் கனிகள் இல்லை. அப்படியிருக்கும்போது இயேசு கிறிஸ்து ஏன் அந்த மரத்தைப் பார்த்து சபிக்க வேண்டும்? இது நாம் அனைவரும் சிந்திக்கவேண்டிய ஒன்று.

 

விவிலிய அறிஞர்கள் இந்தப் பகுதி குறித்து விளக்கம் அளிக்கும்போது, `நற்செய்தி’யில் இடம்பெறும் அத்திமரம் இஸ்ரவேல் மக்களைக் குறிப்பதாகக் கூறுகின்றனர். மேலும், `இஸ்ரவேல் மக்களை இறைவன் பலவிதங்களில் வழிநடத்தியபோதும் அவர்கள் எந்தவொரு பலனையும் கொடுக்காமல் தான்தோன்றித்தனமாக இருந்ததால், இறைவன் அவர்களுக்கு தண்டனை தரப்போகிறார் என்பதைக் குறித்துக்காட்டும்விதமாக இயேசு இந்த அத்திமரத்தைச் சபித்தார்’ என்றும் விவிலிய அறிஞர்கள் விளக்கம் தருகிறார்கள். இங்கே ஒரு விஷயத்தை யோசிக்க வேண்டும். இயேசு சபித்ததால் அத்திமரம் எப்படி கருகிப் போனதோ, அதேபோல் இறைவனின் அன்பை உணராமல், அவருக்கு ஏற்ற வாழ்க்கை வாழாமல், அதனால் இறைவனின் தண்டனைத் தீர்ப்புக்கு உள்ளான ஜெருசலேம் கி.பி. 70-ம் ஆண்டு ரோமையர்களால் அழிக்கப்பட்டது என்பது வரலாறு.

Sponsored


காய்க்காத அத்திமரம் நமக்குச் சொல்லும் செய்தி ஒன்றுதான். அதாவது பலன் கொடுக்காத அல்லது கனிகொடாத வாழ்க்கை வாழ்வோரை இறைவன் தண்டிப்பார் என்பதாகும். இதை வேறு வார்த்தைகளில் சொல்ல வேண்டுமென்றால், நாம் ஒவ்வொருவரும் மிகுந்த கனி தர வேண்டும். அப்படிப்பட்ட வாழ்க்கையே இறைவனுக்கு ஏற்ற வாழ்க்கை ஆகும்.

Sponsored


`என்னிடமுள்ள கனி கொடாத கொடிகள் அனைத்தையும் அவர் தறித்துவிடுவார். கனி தரும் கொடிகள் அனைத்தையும் மிகுந்த கனி தருமாறு அவர் கழித்துவிடுவார். நீங்கள் மிகுந்த கனி தந்து என் சீடராக இருப்பதே என் தந்தைக்கு மாட்சியளிக்கிறது’ - யோவா 15: 2,8. யோவான் எழுதிய நற்செய்தியில் இயேசு இப்படி சொல்லியிருக்கிறார். ஆம், நாம் ஒவ்வொருவரும் மிகுந்த கனி தர வேண்டும். அப்படி இல்லாதபட்சத்தில் இறைவனுடைய தண்டனைத் தீர்ப்பை நம்மீது வருவித்துக்கொள்வோம் என்பதே உண்மை.

நம்முடைய வாழ்க்கையையும் சிறிது நாம் அலசிப் பார்க்கவேண்டும். அனுதினமும் இறை வார்த்தையைக் கேட்கிறோம்; திருப்பலியில் கலந்துகொள்கிறோம். அப்படியானால் நாம் எவ்வளவு பலன் கொடுக்க வேண்டும்? ஆனால், நாம் ஆதியில் இருந்ததுபோல் இப்போதும் எப்போதும் இருந்தால் என்ன செய்வது?

இங்கே இன்னொரு செய்தியையும் நாம் நம்முடைய கவனத்தில்கொள்ள வேண்டும். அது என்னவென்றால், அத்திமரம் எல்லா காலத்திலும் கனி கொடாது; பருவகாலத்தில் மட்டும்தான் கனிகொடுக்கும். ஆனால், நாம் அப்படியிருக்கக் கூடாது, எல்லாக் காலத்திலும் கனிகொடுக்க வேண்டும். அதுதான் உண்மையான கிறிஸ்தவ வாழ்க்கை அல்லது சீடத்துவ வாழ்க்கை. ஆகவே, எல்லாக் காலத்திலும் பலன் தரக்கூடிய மக்களாவோம். நம்மிடத்தில் இருக்கிற சோம்பல், அசட்டைத்தனம் போன்றவற்றுக்கு முற்றுப்புள்ளி வைப்போம். அதன் வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.



Trending Articles

Sponsored