"நன்மையை ஏவி தீமையைத் தடுக்க வேண்டும்"- அல்லாஹ் அளிக்கும் அளப்பரிய அருளின் வாசல்Sponsoredரம்ஜான் நோன்பு உலகம் முழுவதும் இஸ்லாமியர்களால் சிறப்பாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. இஸ்லாமிய நெறிமுறைகளின்படி அல்லாஹ் தன்னை நாடியவர்களுக்கு, அவர்கள் எவ்வளவு தவறுகள் செய்தாலும் மன்னிக்கிறான். அவனது அருளின் வாசல் அளப்பரியது. மனிதர்களான நாம் எல்லோரும் சந்தர்ப்பவசத்தால் பாவம் செய்யக்கூடியவர்கள்தான். பாவக்கறை நம் எல்லோரது இதயங்களிலும் ஒட்டிக்கொண்டிருக்கிறது. நாம் செய்யும் இந்தத் தீமைகளைவிட்டுத் தவிர்த்து வாழ என்ன வழி?  

நாம் தீயச் செயல்களில் ஈடுபடும்போதோ அல்லது பிறர் ஈடுபடும்போதோ நம்மை அவரும், நாம் அவரையும் பாவம் செய்யவிடாமல் தடுக்க வேண்டும். அவ்வாறு ஒருவருக்கொருவர் பாவச் செயலைத் தடுத்துக்கொண்டால் எப்படி இருக்கும் என எண்ணிப் பாருங்கள். 

Sponsored


நம் குடும்பத்தினரிடத்தில், உறவினர்களிடத்தில், நண்பர்களிடத்தில், நாம் பொய் சொல்ல முடியாது. நம் முன்னால் யாரும் பொய் சொல்ல முடியாது. நம்மால் புறம் பேச முடியாது. நமக்கு முன்னாலும் எவரும் புறம் பேச முடியாது. 

Sponsored


நமக்கு முன்னால் யாரும் சண்டையிட முடியாது, புகைக்க முடியாது. மது அருந்த முடியாது. தீய விஷயத்தைப் பேசவோ, பார்க்கவோ, கேட்கவோ, செய்திடவோ முடியாது என்னும் நிலைமை வந்துவிட்டால் நம்மால் பாவங்களைவிட்டு தவிர்த்திருக்க முடியும் அல்லவா? 

தீமை செய்வதைத் தடுக்க வேண்டும் என்று பார்த்தோம். எப்படித் தடுக்க வேண்டும்? அதையும் இஸ்லாம் நமக்குக் கற்றுத்தருகிறது. 
நம் முன்னால் ஒருவர் பாவம் செய்கிறார். உடனே நாம் அவரைத் தீமையிலிருந்து தடுக்கிறோம் என்ற பெயரில் அவரைக் கண்டபடி திட்டித் தீர்க்கிறோம். அவமானப்படுத்துகின்றோம்.

`உனக்கு பாவ மன்னிப்பே கிடையாது. சுவனத்தில் உனக்கு இடமில்லை’ எனத் தீர்ப்பு வழங்குகிறோம். இவ்வாறு செய்தால் பாவம் செய்தவர் ஒருபோதும் திருந்த மாட்டார். 

மாறாக, அந்தப் பாவத்தை நமக்கு எதிராகச் செய்கிறோம் எனக் கருதி, மீண்டும்  மீண்டும் செய்வார். மேலும் பாவத்தைத் தடுக்க முற்பட்ட நாமும் அவரை வசைபாடி, தர்க்கம் செய்து, சண்டையிட்டு பாவியாகிவிடுகிறோம். 

இறைவன் கூறுகின்றான்: `நபியே! அல்லாஹ்வின் மாபெரும் அருளினாலேயே நீங்கள் இவர்களிடம் மென்மையாக நடந்துகொள்கின்றீர். நீங்கள் கடுகடுப்பானவராகவும் வன்மையான நெஞ்சம்கொண்டவராகவும் இருந்திருந்தால், இவர்களெல்லோரும் உம்மைவிட்டு விலகிப் போயிருப்பார்கள்.’ (திருக்குர்ஆன்: 3:159) 

முன் வாழ்ந்த சமூகத்தினரில் ஒருவர் பாவம் செய்யும் மற்றொருவருக்கு எவ்வாறு அறிவுரை கூறினார். பாவம் செய்தவர் அவர் அறிவுரையால் திருந்தினாரா என்பதைக் கீழ்காணும் சம்பவம் நமக்கு விவரிக்கிறது.

அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 

இஸ்ரவேலர்களில் இரு சகோதரர்கள் இருந்தார்கள். அவர்களில் ஒருவர் பாவம் செய்பவர். மற்றொருவர் இறைபக்தியில் ஆர்வம் உள்ளவர். 

வணக்கசாலியான மனிதர், பாவம் செய்பவரைக் காணும்போதெல்லாம், ``சகோதரரே! பாவச் செயலைக் குறைத்துக்கொள்ளுங்கள்’’ என்று உபதேசம் செய்துவந்தார்.  

ஒருநாள் பாவச் செயல்களில் ஈடுபடும் அந்த மனிதர், தீமையான காரியத்தில் ஈடுபட்டுக்கொண்டிருப்பதை வணக்கசாலியான மனிதர் பார்த்ததும், கோபமுற்றவராக அவரிடம் சென்று, ``பாவம் செய்யாதே!’’ என்று மீண்டும் அறிவுரை செய்யத் தொடங்கினார்.  ஆனால் பாவம் செய்த மனிதரோ, ``இதோ பார்! இது எனக்கும் எனது இறைவனுக்கும் உள்ள விஷயம். நீ என்னைக் கண்காணிக்கவா அனுப்பப்பட்டிருக்கிறாய்!’’ எனச் சாடினார். இதனால் கோபமுற்ற வணக்கசாலி, ``அல்லாஹ்வின் மீது சத்தியமாக, அல்லாஹ் உனது பாவங்களை மன்னிக்க மாட்டார் அல்லது உன்னை சுவனத்தில் புகுத்த மாட்டார்’’ எனச் சபித்துவிடுகிறார். இவ்வுலகில் அவர்களுக்கான தவணை முடிந்ததும் இருவரும் மரணிக்கின்றனர். அல்லாஹ் இருவரையும் ஒன்று திரட்டி விசாரிக்கின்றார்.

வணக்கசாலியிடம், `என்னைக் குறித்து நீ அறிந்தவனா அல்லது நீ என்னிடமுள்ளவற்றை (மறைவான ஞானத்தை) அறியும் ஆற்றலுள்ளவனா?’  எனக் கடிந்து கூறிவிட்டு பாவம் செய்து வாழ்ந்த மனிதரிடம், `நீ எனது அருளினால் சுவனம் செல்' என்றும் வணக்கசாலியான மனிதரிடம், `நீ நரகம் செல்’ என்றும் கூறுகிறார்.

படிப்பினைகள்:

* நமது உறவினரிடத்தில்தான் நாம் முதலில் நன்மையை ஏவி, தீமையைத் தடுக்க வேண்டும்.

* அல்லாஹ், யாவருக்கும் நேர்வழி காட்டப் போதுமானவன். ஒருவர் அவரது தீய செயல்களாலேயே நாசத்தைத் தேடிக்கொள்கின்றார்.

* பிறருக்கு உபதேசம் செய்யும்போது நல்ல சொற்களையே பயன்படுத்த வேண்டும். வன் சொற்களால் அவரைக் காயப்படுத்தக் கூடாது. 

* நாம் பிறருக்கு உபதேசிக்கும்போது அவர் நம்மைக் கடின வார்த்தைகளால் வசை பாடினாலும், நாம் அதனைச் சகித்துக்கொண்டு பொறுமையுடன் அழகிய முறையில் அவருக்கு எடுத்துக் கூறினால், அவரிடம் இறை நாட்டப்படி மாற்றம் நிகழும்.

* ஒருவர் செய்த தீமையின் வீரியத்தை அவருக்கு எடுத்துக் கூறி, அதற்காக மறுமையில் கிடைக்கும் வேதனைகளைச் சொல்லியும் அவரை எச்சரிக்கலாம்.

* ஒருவர் நம் கண் முன்னால் தவறு செய்தால் அது யாராக இருந்தாலும் அதைத் தடுப்பது நம் கடமை.

* அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு அவர் எவ்வளவு பாவம் செய்தாலும், மன்னிக்கின்றான். அவனது அருளின் வாசல் அளப்பரியது.

* நன்மையை ஏவி, தீமையைத் தடுக்கும் பணியில் நமது பங்களிப்பு என்ன என்பதை நாம் ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டும். இறைவன் கூறுகின்றான்: `மனித இனத்தைச் சீர்படுத்துவதற்காக தோற்றுவிக்கப்பட்டிருக்கும் மிகச் சிறந்த சமூகத்தவராய் நீங்கள் இருக்கிறீர்கள்.’ 


 Trending Articles

Sponsored