ஆயிரம் மாதங்களைவிடச் சிறந்த `லைலத்துல் கத்ர்’ இரவு! - ரம்ஜான் நோன்பு சிறப்புக் கட்டுரை



Sponsored



மலான் மாதத்தின் கடைசிப் பத்து நாள்களுக்குள்தாம் `லைலத்துல் கத்ர்' எனும் மகத்துவமிக்க இரவு இருக்கிறது. அந்த இரவின் சிறப்புகளை குர்ஆனும் நபிமொழிகளும் மிக அழுத்தமாகச் சொல்கின்றன. குர்ஆனின் 97-வது அத்தியாயம் இந்த இரவின் பெயரிலேயே பதிவுசெய்யப்பட்டு அதன் சிறப்புகளைப் பின்வருமாறு அறிவிக்கிறது.

* இந்த இரவு ஆயிரம் மாதங்களைவிடச் சிறந்தது. அதாவது, ஆயிரம் மாதங்கள் ஒருவர் வணக்கங்களில் ஈடுபட்டுப் பெறுகிற நன்மைகளைக் காட்டிலும் அதிகமான நன்மைகளை இந்த ஓர் இரவை அடைவதின் மூலம் பெற முடியும்.

Sponsored


* இந்த இரவில் வானவர்களின் சிறப்பு வருகை நடக்கிறது. அவர்களுடன் அவர்களின் தலைவர் ஜிப்ரீல் (அலை) அவர்களும் வருகிறார்கள்.

Sponsored


* ஜிப்ரீலும் அவர்களது படையும் இறங்குவதின் காரணம், அவர்கள் அல்லாஹ்வின் கட்டளைகளைக் கொண்டு வருகிறார்கள். விதி நிர்மாணிக்கப்படுகிறது.

* இந்த இரவில் அமைதி நிலவும். அது அதிகாலை வரை நீடித்திருக்கும்.

`லைல்’ என்றால் இரவு. `கத்ர்’ என்றால் சிறப்பு, கண்ணியம் அல்லது விதி, தீர்ப்பு. இந்த இரண்டு அர்த்தங்களும் அந்த இரவுக்குப் பொருந்தும். எப்படியெனில், அந்த இரவில்தான் விதியிலுள்ளவற்றை நடைமுறைப்படுத்த அல்லாஹ் கட்டளைகளை இறக்குகிறார்.
ஒருவர் நம்பிக்கையோடும் நன்மையை எதிர்பார்த்தும் லைலத்துல் கத்ர் இரவில் நின்று வணங்க, அது லைலத்துல் கத்ராகவே அமைந்துவிட்டால் அவருக்கு மன்னிப்பு வழங்கப்படும். (அறிவிப்பு: அபூஹுரைரா (ரலி), ஸஹீஹ் முஸ்லிம் 1818).‎

அறிஞர் முஹம்மது ஸாலிஹ் அல்உஸைமீன் (ரஹ்) கூறுகிறார்கள்: நம்பிக்கையுடன் தொழுவது என்றால் `அல்லாஹ்வின் மீதும் இந்த இரவில் தொழக்கூடியவர்களுக்கு அல்லாஹ் தயார் செய்துவைத்துள்ள மறுமை பாக்கியங்கள் மீதும் நம்பிக்கை கொண்டு’ எனப் பொருளாகும்.


எதிர்பார்ப்புடன் தொழுவது என்றால், `நற்கூலியையும் நன்மையையும் எதிர்பார்த்து' என்று பொருள். இந்த இரவை அறிந்தவர்களுக்கும் இந்தச் சிறப்பு கிடைக்கும்; அறியாதவர்களுக்கும் கிடைக்கும். ஏனெனில், இந்தக் கூலி கிடைக்கும் விஷயத்தில் இந்த இரவை அறிந்திருக்க வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் நிபந்தனை விதிக்கவில்லை.

அன்னை ஆயிஷா (ரலி) கூறுகிறார்கள்: `அல்லாஹ்வின் தூதரே, எந்த இரவு லைலத்துல் கத்ர் என்பதை நான் தெரிந்துகொண்டால், நான் என்ன கூற வேண்டும்?' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், `அல்லாஹ்! நிச்சயமாக நீ மன்னிப்பவன்; கண்ணியமானவன். மன்னிப்பதை விரும்புகிறவன். ஆகவே என்னை மன்னித்துவிடு' என்று பிரார்த்தனை செய் என்றார்கள். (ஜாமிவுத் திர்மிதீ 3855-ஸஹீஹ், அஸ்ஸஹீஹா 3337)

லைலத்துல் கத்ர் மறைக்கப்பட்டது -தேடுங்கள்!

உபாதா இப்னு ஸாமித் (ரலி) சொல்கிறார்கள்: லைலத்துல் கத்ர் பற்றி எங்களுக்கு அறிவிப்பதற்காக நபி (ஸல்) அவர்கள் வெளியே வந்தார்கள். அப்போது இரண்டு முஸ்லிம்கள் சச்சரவு செய்துகொண்டிருந்தனர். நபியவர்கள், `லைலத்துல் கத்ரை உங்களுக்கு அறிவிப்பதற்காக, நான் புறப்பட்டேன். அப்போது இன்னாரும் இன்னாரும் சச்சரவு செய்துகொண்டிருந்தனர். எனவே, அது பற்றிய விளக்கம் நீக்கப்பட்டுவிட்டது. அது உங்களுக்கு நன்மையாக இருக்கலாம்’ என்று சொல்லியிருக்கிறார். (ஸஹீஹுல் புகாரீ 2023)

ஸஹீஹ் முஸ்லிமில் அபூசயீது அல்குத்ரீ (ரலி) வழியாக அறிவிக்கப்படும் செய்தியில், `அந்த இரண்டு முஸ்லிம்களும் தங்கள் உரிமைகள் குறித்து தர்க்கம் செய்துகொண்டார்கள் என்றும், அந்த இருவருடனும் ஷைத்தான் இருந்தான்' என்று நபியவர்கள் கூறியதாக வந்துள்ளது. (ஸஹீஹ் முஸ்லிம் 2831)


முஸ்லிம்கள் சச்சரவு செய்துகொள்வது எப்பேர்ப்பட்ட இழப்பைக் கொண்டு வரும் என்கிற படிப்பினை இந்தச் செய்தியில் இருக்கிறது. (அல்லாஹ் நம்மை மன்னிப்பாராக.) லைலத்துல் கத்ர் எது என்பது மறைக்கப்பட்டுவிட்டதால், மறுமை நாள் வரை அதைத் தேடி அமல்செய்துகொள்கிற நிலைக்கு முஸ்லிம்கள் தள்ளப்பட்டுவிட்டார்கள். நபியவர்கள் அதை எப்படித் தேடிக்கொள்ள வேண்டும் என்பதைக் கற்றுக்கொடுத்தார்கள்.

இது பற்றிய நபிமொழிகள்:

லைலத்துல் கத்ரை ரமலான் மாதத்தின் கடைசிப் பத்தில் தேட வேண்டும்.

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் ரமலானின் கடைசிப் பத்து நாள்களில் இஃதிகாஃப் இருப்பார்கள். `ரமலானின் கடைசிப் பத்து நாள்களில் லைலத்துல் கத்ரைத் தேடுங்கள்’ எனக் கூறுவார்கள். (ஸஹீஹுல் புகாரீ 2020)
அதிலும், ஒற்றைப் படை இரவுகளான 21, 23, 25, 27, 29 ஆகியவற்றில் தேட வேண்டும்.

ரமலானின் கடைசிப் பத்து நாள்களில் உள்ள ஒற்றைப்படை இரவுகளில் லைலத்துல் கத்ரைத் தேடுங்கள். (அறிவிப்பு: ஆயிஷா (ரலி), ஸஹீஹுல் புகாரீ 2017)

மேலும், அந்த இரவு கடைசி ஏழு நாள்களில் இருப்பதற்கு அதிகமான சாத்தியங்கள் உள்ளன.

இப்னு உமர் (ரலி) கூறியதாவது: நபித்தோழர்களில் சிலரது கனவில், (ரமலானின்) கடைசி ஏழுகளில் ஒன்றில் லைலத்துல் கத்ர் இருப்பதாகக் காட்டப்பட்டது. அப்போதுஅல்லாஹ்வின் தூதர் (ரலி) அவர்கள், `கடைசி ஏழுகளில் ஒன்று என்பதில் உங்கள் கனவுகள் ஒத்திருப்பதைக் காண்கிறேன். ஆகவே, அதனைத் தேடுபவர் கடைசி ஏழுகளில் தேடிக்கொள்ளட்டும்’ என்று கூறினார்கள்.

மற்றோர் அறிவிப்பு: நீங்கள் அந்த இரவை இறுதிப் பத்து இரவுகளில் தேடிக்கொள்ளுங்கள். உங்களில் ஒருவருக்குப் பலவீனம், அல்லது இயலாமை ஏற்பட்டால், எஞ்சிய ஏழு இரவுகளில் (ஒன்றிலாவது அதைத் தேடும் முயற்சியில்) தளர்ச்சிக்கு ஆளாக்கப்பட்டுவிட வேண்டாம். (அறிவிப்பு: இப்னு உமர் (ரலி), ஸஹீஹ் முஸ்லிம் 2164)

இதுவும் முடியாதவர்கள் கடைசிப் பத்தின் 9, 7, 5 ஆகிய இரவுகளில் தேடலாம். அபூசயீது அல்குத்ரீ (ரலி) அறிவிக்கும் நபிமொழியில், `ரமலானின் கடைசிப் பத்தில் அந்த இரவைத் தேடிக்கொள்ளுங்கள்; ஒன்பது, ஏழு, ஐந்து ஆகிய இரவுகளில் அதைத் தேடிக்கொள்ளுங்கள்' என்று வந்துள்ளது. அபூநள்ரா (ரஹ்) எனும் தாபிஈ இதன் விளக்கத்தை அபூசயீது (ரலி) அவர்களிடமே கேட்டிருக்கிறார்கள். அவர்கள் கூறுகிறார்கள்:


நான் அபூசயீத் (ரலி) அவர்களிடம் `அதன் எண்ணிக்கை பற்றி எங்களைவிட நீங்களே நன்கறிந்தவர்கள்` என்றேன். அதற்கு அவர்கள், `ஆம். உங்களைவிட நாங்களே அதற்குத் தகுதியானவர்கள்’ என்றார்கள். நான், `ஒன்பது, ஏழு, ஐந்து என்பவை எவை?’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள், `இருபத்தொன்றாவது இரவு முடிந்து, அதையடுத்து வரும் இருபத்து இரண்டாவது இரவே 'ஒன்பது' ஆகும். இருபத்து மூன்றாவது இரவு முடிந்து அடுத்து வரும் (இருபத்து நான்காவது) இரவே `ஏழு' ஆகும். இருபத்து ஐந்தாவது இரவு முடிந்து அடுத்து வரும் இரவே `ஐந்து' ஆகும்’ என்று பதிலளித்தார்கள். (ஸஹீஹ் முஸ்லிம் 2831)

இப்படியும் தேடிக்கொள்ள முடியாதவர்கள், இருபத்து ஏழாம் இரவிலாவது வணக்கங்களைச் செய்துகொள்ளலாம். சிலர் இருபத்து ஏழாம் இரவுக்கு எந்தச் சிறப்பும் இல்லை என்று நினைக்கிறார்கள். அது தவறு. நபியவர்கள் தம் தோழர்களை அந்த இரவில் அதிகம் வணக்கங்கள் புரிய ஏவியுள்ளார்கள். உபை இப்னு கஅப் (ரலி) அவர்கள் லைலத்துல் கத்ர் இரவு பற்றி கூறும்போது, `அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அந்த இரவைப் பற்றி நான் அறிவேன். அந்த இரவில் நின்று வணங்குமாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்குக் கட்டளையிட்டார்கள்; அது அநேகமாக இருபத்தி ஏழாம் இரவுதான் என்று நினைக்கிறேன்' என்பார்கள். (ஸஹீஹ் முஸ்லிம் 1821)



Trending Articles

Sponsored