ஆனி மாத ராசிபலன்! - மேஷம் முதல் கன்னி வரை #Astrology



Sponsored




 

துலாம் முதல் மீனம் வரை படிக்க இங்கே க்ளிங் செய்யவும்

மேஷ ராசி அன்பர்களே...

Sponsored


3-ல் சூரியன், 3, 4-ல் புதன்; 4, 5-ல் சுக்கிரன்; 7-ல் குரு; 9-ல் சனி (வ); 10-ல் செவ்வாய்; 4-ல் ராகு; 10-ல் கேது

Sponsored


காரியங்களில் அனுகூலம் உண்டாகும். பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடைபெறக்கூடும். அரசாங்க வகையில் அனுகூலம் உண்டாகும். சிலருக்குப் புதிய வாகனம் வாங்கும் யோகமும் உண்டாகும். உறவினர்களாலும் நண்பர்களாலும் நன்மைகள் ஏற்படக்கூடும். கொடுத்த கடன் திரும்பக் கிடைக்கும். தந்தையுடன் இருந்து வந்த கருத்துவேறுபாடு மறையும். அவரிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். ஆனால், தந்தை வழி உறவுகளால் அலைச்சலும் செலவுகளும் ஏற்படக்கூடும். மாதப் பிற்பகுதியில் தந்தை வழியில் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாக முடியும். சிலருக்கு சிறிய அளவில் ஆரோக்கியம் பாதிக்கப்படக்கூடும். என்றாலும், உடனே நிவாரணம் கிடைத்துவிடும்.

வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி ஏற்படும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். குடும்பத்தில் வாழ்க்கைத்துணையின் ஆலோசனையைக் கேட்டுச் செயல்படுவது பயனுள்ளதாக இருக்கும். அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக்கொள்வீர்கள். நவீன ரக மின்சார, மின்னணு சாதனங்களை வாங்கும் வாய்ப்பு உண்டாகும். உறவினர்களால் அனுகூலம் ஏற்படும் என்றாலும், சில பிரச்னைகளும் ஏற்படக்கூடும். சகோதரிகளின் அன்பும் ஆதரவும் உங்களுக்கு மகிழ்ச்சி தரும். தாய்மாமன் வகை உறவுகளால் சில அனுகூலமான பலன்களை எதிர்பார்க்கலாம்.

அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். என்றாலும், சக ஊழியர்களின் உதவியால் உற்சாகமாகச் செய்து முடிப்பீர்கள். மேலதிகாரிகள் உங்களுக்கு அனுசரணையாக நடந்துகொள்வார்கள். எதிர்பார்த்த பதவி உயர்வு ஊதிய உயர்வு போன்ற சலுகைகள் கிடைக்கும்.

தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பற்று வரவு சுமுகமாக நடைபெறும். மறைமுகப் போட்டிகளை முறியடிப்பீர்கள். சக வியாபாரிகளுடன் இணக்கமாகப் பழகுவது நல்லது.

கலைத்துறையைச் சேர்ந்த அன்பர்களுக்கு வாய்ப்புகள் கிடைக்கும். அரசாங்கத்தால் கௌரவிக்கப்படுவீர்கள். படப்பிடிப்பு தொடர்பாக வெளிமாநில, வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ள நேரிடலாம்.

மாணவ - மாணவியருக்கு பாடங்களில் கூடுதல் கவனம் தேவை. வகுப்பில் ஆசிரியர்கள் பாடம் நடத்தும்போது அக்கறையுடன் கவனிக்க வேண்டும். சந்தேகங்களை உடனுக்குடன் கேட்டுத் தெரிந்துகொள்வது நல்லது.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு சிரமங்கள் ஏற்பட்டாலும் பெரிய அளவில் பாதிப்பு எதுவும் இருக்காது. அலுவலகத்துக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும்.

சாதகமான நாள்கள்: ஜூன் 21, 23, 24, 25, ஜூலை 1, 3, 4, 7, 12, 13

சந்திராஷ்டம நாள்கள்: ஜூன் 25, 26

அதிர்ஷ்ட எண்கள்: 4, 7, 9

வழிபடவேண்டிய தெய்வம்: சூரியன், தட்சிணாமூர்த்தி

பரிகாரம்: ஞாயிற்றுக்கிழமைகளில் சூரியனுக்கு செம்பருத்தி மாலை அணிவித்து அர்ச்சனை செய்வதும், ஆதித்ய ஹ்ருதயம் பாராயணம் செய்வதும் நன்மை தரும். சங்கடஹர சதுர்த்தியன்று விநாயகருக்கு அறுகம்புல்லால் அர்ச்சனை செய்வது சிரமங்களைக் குறைக்கும்.
 

ரிஷபராசி அன்பர்களே...

2-ல் சூரியன்; 2, 3-ல் புதன்; 3, 4-ல் சுக்கிரன்; 6-ல் குரு; 8-ல் சனி (வ); 9-ல் செவ்வாய்; 3-ல் ராகு; 9-ல் கேது

உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. அரசாங்கக் காரியங்கள் தாமதமானாலும் நல்லபடி முடியும். எதிலும் வெற்றியே ஏற்படும். எதிரிகள் பணிந்து போவார்கள். அவர்களால் மறைமுக ஆதாயமும் உண்டாகும். எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பிருக்கிறது. சகோதரர்களுடன் சிறுசிறு கருத்து வேறுபாடு ஏற்பட்டு சரியாகும். மாதப் பிற்பகுதியில் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். 6-ல் இருக்கும் குருவால் சிற்சில சங்கடங்கள் ஏற்படக்கூடும். புதிய முயற்சிகளில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். கடன் விஷயத்தில் கவனம் தேவை. மாதத்தின் பிற்பகுதியில் உறவினர்களாலும் நண்பர்களாலும் ஆதாயம் உண்டாகும். அவர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகளும் ஏற்படக்கூடும். ஆனால், அஷ்டம ஸ்தானத்தில் சனி இருப்பதால், வாகனத்தில் செல்லும்போது எச்சரிக்கையாக இருக்கவும். ராகு சாதகமாக இருப்பதால் முன்னேறுவதற்கான வாய்ப்புகள் ஏற்படும்.

உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். பணிகளில் கூடுதல் கவனம் தேவைப்படும். சிறு தவறும்கூட சிக்கலை ஏற்படுத்திவிடக்கூடும். சக பணியாளர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. எதிர்பார்த்த சலுகைகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும்.

தொழில், வியாபாரத்தில் பற்று வரவில் கவனமாக இருக்கவும். பெரிய அளவில் கடன் தர வேண்டாம். பழைய பாக்கிகளைக் கறாராகப் பேசித்தான் வசூலிக்கவேண்டியிருக்கும்.

கலைத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு மாத முற்பகுதியில் எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டாலும், மாதப் பிற்பகுதியில் வாய்ப்புகள் கிடைப்பதில் சிரமமிருக்காது. சக கலைஞர்களால் அனுகூலமான பலன்கள் ஏற்படக்கூடும்.

மாணவ, மாணவியர் மாத ஆரம்பத்தில் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். மாதப் பிற்பகுதியில் படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் பாராட்டுகளைப் பெறுவீர்கள்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு குடும்பச் சூழ்நிலை மகிழ்ச்சி தருவதாக இருக்கும். அலுவலகத்துக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.

சாதகமான நாள்கள்: ஜூன் 16, 23, 24, 25, ஜூலை 2, 3, 4, 5, 6, 9, 11, 14, 15

சந்திராஷ்டம நாள்கள்: ஜூன் 27, 28, 29

அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 7

வழிபடவேண்டிய தெய்வம்: முருகப் பெருமான், மகாலட்சுமி

பரிகாரம்: தினமும் கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்வது நல்லது. வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமிக்கு நெய்தீபம் ஏற்றுவதும் சிறந்த பலன்களைத் தரும்.
 

மிதுன ராசி அன்பர்களே...

1-ல் சூரியன்; 1, 2-ல் புதன்; 2, 3-ல் சுக்கிரன்; 5-ல் குரு; 7-ல் சனி (வ); 8-ல் செவ்வாய்; 2-ல் ராகு; 8-ல் கேது

காரியங்களில் அனுகூலம் உண்டாகும். முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. முன்னேற்றத்துக்குத் தடை இருக்காது. புதிய பொருள்களின் சேர்க்கை உண்டாகும். சிலருக்கு பயணங்களும் அதன் மூலம் ஆதாயமும் ஏற்படும். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். ஆனால், குடும்பத்தில் அடிக்கடி வீண் விவாதம், கணவன் - மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படக்கூடும். ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வதன் மூலம் பாதிப்புகளைத் தவிர்க்கலாம். மாதத்தின் பிற்பகுதியில் குடும்பத்தில் மகிழ்ச்சியும் நிம்மதியும் உண்டாகும். பிள்ளைகள் வகையில் பெருமை சேரும். உறவினர்கள் வருகை மகிழ்ச்சி தரும். கேது 8-ல் இருப்பதால் வாகனத்தில் செல்லும்போது எச்சரிக்கையாக இருக்கவும்.

உத்தியோகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். ஆனால், சக ஊழியர்கள் அனுசரணையாக நடந்துகொள்வார்கள். கூடுமானவரை உங்கள் பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தவும். உயர் அதிகாரிகளுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.

தொழில், வியாபாரம் விறுவிறுப்பாக இருக்கும். போட்டிகளால் ஏற்பட்ட நெருக்கடிகள் குறையும். ஆனாலும், சக வியாபாரிகளால் மறைமுக எதிர்ப்புகளைச் சந்திக்கவேண்டி வரும். வீண் அலைச்சலும் அதனால் மனச் சோர்வும் உடல் அசதியும் உண்டாகும். வியாபாரத்தை முன்னிட்டு வெளியூர்ப் பயணங்கள் மேற்கொள்ள நேரிடும்.

கலைத்துறையைச் சேர்ந்த அன்பர்கள் தங்களுக்குக் கிடைத்த வாய்ப்புகளை கவனமாகப் பயன்படுத்திக்கொள்வது அவசியம். மாதப் பிற்பகுதியில் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். முயற்சிகளிலிருந்த தடை, தாமதங்கள் நீங்கும்.

மாணவ - மாணவியர் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்தவேண்டியது மிக அவசியம். கஷ்டப்பட்டு படித்தால்தான் நல்ல மதிப்பெண்கள் பெற முடியும். சந்தேகங்களை ஆசிரியர்களிடம் உடனுக்குடன் கேட்டுத் தெளிவு பெறுவது நல்லது.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகள் குடும்பத்தில் அனைவரையும் அனுசரித்துச் செல்வது நல்லது. மாதப் பிற்பகுதியில் அக்கம்பக்கத்தில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு மனதுக்கு உற்சாகம் தரும். வேலைக்குச் செல்லும் பெண்மணிகள் அலுவலகத்தில் தங்கள் பொறுப்புகளில் கவனமாக இருக்கவேண்டியது மிகவும் அவசியம்.

சாதகமான நாள்கள்: ஜூன் 18, 19, 20, 25, 27, 29, ஜூலை 5, 7, 12, 16

சந்திராஷ்டம நாள்கள்: ஜூன் 30, ஜூலை 1

அதிர்ஷ்ட எண்கள்: 5, 6

வழிபடவேண்டிய தெய்வம்: மகாலட்சுமி, வெங்கடாசலபதி

பரிகாரம்: விஷ்ணு சஹஸ்ரநாமம் மற்றும் மஹாலக்ஷ்மி அஷ்டகம் பாராயணம் செய்வது நல்ல பலன்களைத் தரும். சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயருக்கு துளசி அர்ச்சனை செய்வதும் நன்மை தரும்.

கடக ராசி அன்பர்களே...

12-ல் சூரியன்; 12, 1-ல் புதன்; 1, 2-ல் சுக்கிரன்; 4-ல் குரு; 6-ல் சனி (வ); 7-ல் செவ்வாய்; 1-ல் ராகு; 7-ல் கேது

குடும்பத்தில் மகிழ்ச்சியும் உற்சாகமும் காணப்படும். எதிரிகளின் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். உறவினர்களும் நண்பர்களும் மிகவும் உதவியாக இருப்பார்கள். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். மாதப் பிற்பகுதியில் உறவினர்கள் வகையில் சிறுசிறு பிரச்னைகள் ஏற்பட சாத்தியம் உள்ளதால், பொறுமையுடன் இருப்பது மிகவும் அவசியம். கேது சாதகமாக இல்லாத காரணத்தால் கணவன் - மனைவிக்கிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் ஏற்படக்கூடும். ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். குடும்பத்துடன் வெளியிடங்களுக்குச் சென்று வருவீர்கள். விருந்து விசேஷங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு உண்டு. மாதத்தின் பிற்பகுதியில் எதிரிகளால் பிரச்னைகளும், கடன் தொல்லைகளும் ஏற்படக்கூடும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். சிலருக்கு வெளியூர், வெளி மாநிலப் புண்ணியத் தலங்களுக்குச் சென்று வரும் வாய்ப்பு உண்டாகும். குடும்பப் பெரியவர்களின் அறிவுரையின்படி நடந்துகொண்டு, அவர்களின் ஆதரவைப் பெறுவீர்கள்.

அலுவலகத்தில் சக ஊழியர்களிடம் செல்வாக்கு அதிகரிக்கும். பணிகளில் அவர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும். நீண்ட நாள்களாக எதிர்பார்த்த பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்ற சலுகைகள் கிடைக்கும். மேலதிகாரிகளின் அன்பும் ஆதரவும் உங்களை உற்சாகப்படுத்தும்.

தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். எதிரிகளால் ஏற்பட்ட பிரச்னைகள் நீங்கும். புதிய முயற்சிகள் வெற்றி தரும். வியாபாரத்தை விரிவுபடுத்தும் எண்ணமிருந்தால், அதற்கான முயற்சிகளில் இந்த மாதம் ஈடுபடலாம்.

கலைத்துறையைச் சேர்ந்த அன்பர்களுக்கு புதுப் புது வாய்ப்புகள் கிடைக்கும். பெரிய நிறுவனங்களுடன் ஒப்பந்தம் கையெழுத்தாகும். பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு கௌரவிக்கப்படுவீர்கள். படப்பிடிப்பு தொடர்பாக சிலருக்கு வெளியூர் அல்லது வெளிநாடு செல்லும் வாய்ப்பு ஏற்படும்.

மாணவ மாணவியருக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் பாராட்டுகள் கிடைக்கும். போட்டி பந்தயங்களில் வெற்றி கிடைக்கும்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு உறவினர்களிடையே மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். தோழியர்கள் வட்டாரத்தில் உங்கள் செயல்பாடுகள் பாராட்டப்படும். பணிக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு, அலுவலகத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும்.

சாதகமான நாள்கள்: ஜூன் 16, 22, 27, 28, 30, ஜூலை 1, 7, 9, 10, 11, 13, 15

சந்திராஷ்டம நாள்கள்: ஜூலை 2, 3, 4

அதிர்ஷ்ட எண்கள்:1, 7, 9

வழிபடவேண்டிய தெய்வம்: துர்கை, முருகப் பெருமான்

பரிகாரம்: செவ்வாய்க்கிழமைகளில் கந்த சஷ்டி பாராயணம் செய்வதும், சனிக்கிழமைகளில் அனுமன் சாலீசா பாராயணம் செய்வதும் நற்பலன்களைத் தரும்.
 

சிம்ம ராசி அன்பர்களே...

11-ல் சூரியன்; 11, 12-ல் புதன்; 12, 1-ல் சுக்கிரன்; 3-ல் குரு; 5-ல் சனி (வ); 6-ல் செவ்வாய்; 12-ல் ராகு; 6-ல் கேது

திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் ஏற்படும். குழந்தைகளால் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நிகழும். நண்பர்களும் அனுகூலமாக இருப்பார்கள். அவர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். தெய்வ பக்தி அதிகரிக்கும். எடுத்த செயலை வெற்றிகரமாக முடிப்பீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் உறவினர்களிடையே இருந்த கருத்து வேறுபாடு நீங்கி, சுமுகமான சூழ்நிலை உண்டாகும். வெளிவட்டாரத்தில் மதிப்பு, மரியாதை கூடும். சிலருக்கு புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்பு உண்டாகும். சிலருக்கு புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும். ஆண்களுக்கு பெண்களாலும், பெண்களுக்கு ஆண்களாலும் நன்மைகள் ஏற்படும். சிலருக்கு புண்ணியத் தலங்களுக்குச் செல்லும் வாய்ப்பு உண்டாகும். ஆனால், உடல்நலனில் கவனம் தேவைப்படுகிறது. தாயாருடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படக்கூடும். அவருடைய உடல் ஆரோக்கியமும் சிறிய அளவில் பாதிக்கப்பட்டு, உடனே சரியாகிவிடும். தாய்வழி உறவினர்களிடம் அனுசரணையாக நடந்துகொள்ளவும்.

அலுவலகத்தில் அதிகப் பணிச்சுமை ஏற்படுவதால், மனதில் சோர்வும், உடல் அசதியும் உண்டாகும். உயர் அதிகாரிகளிடம் அனுசரித்துப் போவது எதிர்காலத்துக்கு நல்லது. சிலருக்கு திடீர் இடமாற்றம்,. பணிமாற்றம் ஏற்படக்கூடும். எதிர்பார்க்கும் சலுகைகள் கிடைப்பதில் தடை, தாமதங்கள் ஏற்படலாம்.

தொழில், வியாபாரத்தில் முன்னேற்றமான சூழ்நிலையே காணப்படுகிறது. உழைப்புக்கேற்ற ஆதாயம் கிடைக்கும். பங்குதாரர்களுடன் இணக்கமான சூழ்நிலை காணப்படுகிறது. ஆனாலும், மறைமுகப் பிரச்னைகளைச் சமாளிக்கவேண்டியிருக்கும். மாதப் பிற்பகுதியில் கொடுக்கல் - வாங்கல் விஷயத்தில் எச்சரிக்கை அவசியம்.

கலைத்துறையைச் சேர்ந்தவர்கள் சாமர்த்தியமாகப் பேசி வாய்ப்புகளைப் பெறுவார்கள். ஆண் கலைஞர்களுக்கு பெண் கலைஞர்களாலும், பெண் கலைஞர்களுக்கு ஆண் கலைஞர்களாலும் நன்மைகள் ஏற்பட சாத்தியம் உள்ளது.

மாணவ மாணவியருக்கு பாடங்களில் கூடுதல் கவனம் தேவைப்படும். பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் ஆலோசனைகளைக் கேட்டு நடப்பது நல்லது. தேவையற்ற சகவாசத்தைத் தவிர்க்கவேண்டியது அவசியம்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு உறவினர்கள் மத்தியில் மதிப்பு, மரியாதை கூடும். கணவரின் அன்பும் அவர் வழி உறவினர்களால் நன்மைகளும் ஏற்படும். சிலருக்கு வெளியூர் புண்ணிய தலங்களுக்குச் செல்லும் வாய்ப்பு உண்டாகும். அலுவலகத்துக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு சலுகைகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும்.

சாதகமான நாள்கள்: ஜூன் 18, 19, 23, 24, 30, ஜூலை 1, 3, 4, 9, 10, 16

சந்திராஷ்டம நாள்கள்: ஜூலை 5, 6, 7

அதிர்ஷ்ட எண்கள்: 4, 6

வழிபடவேண்டிய தெய்வம்: அம்பிகை, மகா விஷ்ணு

பரிகாரம்: புதன்கிழமைகளில் விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்வதும், வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்திக்கு நெய்தீபம் ஏற்றி அர்ச்சனை செய்வதும் நன்மை தரும்.
 

கன்னி ராசி அன்பர்களே...

10-ல் சூரியன்; 10, 11-ல் புதன்; 11, 12-ல் சுக்கிரன்; 2-ல் குரு; 4-ல் சனி (வ); 5-ல் செவ்வாய்; 11-ல் ராகு; 5-ல் கேது

பணவரவு கணிசமாக உயரும். புதிய ஆடை, ஆபரணங்கள் சேரும். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். எதையும் சாதிக்க வேண்டும் என்ற மன உறுதி ஏற்படும். பழைய வாகனத்தை மாற்றிவிட்டு, புதிய வாகனம் வாங்குவீர்கள். கணவன் - மனைவி இடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் நிம்மதியும் ஏற்படும். பிரிந்திருந்த தம்பதி ஒன்று சேருவார்கள். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். சுபநிகழ்ச்சிகளில் கலந்துகொள்வீர்கள். குடும்பத்துடன் விருந்து விசேஷங்களுக்குச் சென்று வருவீர்கள். உறவினர்களால் உதவி கிடைக்கும் அதே நேரத்தில் அவர்களால் சிறு உபத்திரவமும் ஏற்படலாம். உறவினர்கள் வகையில் சற்று பக்குவமாக நடந்துகொள்வது நல்லது. வெளிவட்டாரத்தில் மதிப்பு, மரியாதை கூடும். வாழ்க்கைத்துணை வழி உறவுகள் உங்கள் ஆலோசனைகளை ஏற்றுக்கொள்வார்கள். அவர்கள் மத்தியில் உங்கள் கௌரவம் ஒரு படி உயரும்.

அலுவலகத்தில் இதுவரை இருந்து வந்த இறுக்கமான சூழ்நிலை மாறும். உங்கள் பணிகளில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். சிலருக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்ற சலுகைகள் கிடைக்கும். நிர்வாகத்தினரிடம் எதிர்பார்த்த கோரிக்கைகள் நிறைவேறும். மாதப் பிற்பகுதியில் ராணுவம், காவல், தீயணைப்புத் துறை போன்ற துறைகளில் பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உண்டு.

தொழில் மற்றும் வியாபாரத்தில் லாபம் சுமாராகத்தான் கிடைக்கும். மாத முற்பகுதியில் வீண் விரயம் ஏற்பட சாத்தியமுள்ளது. புதிய முயற்சிகளைத் தவிர்ப்பதுடன், வியாபாரத்தை விரிவுபடுத்தும் முயற்சிகளையும் தவிர்க்கவும். சக வியாபாரிகளால் மறைமுகப் போட்டிகளைச் சந்திக்க நேரிடலாம். அரசாங்க வகையில் கிடைக்கவேண்டிய அனுமதிகள் கிடைப்பதில் தடை, தாமதம் ஏற்படலாம்.

கலைத்துறையைச் சேர்ந்த அன்பர்களுக்கு எதிர்பார்த்த புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். பட்டங்களும் விருதுகளும் பெறும் வாய்ப்பு உண்டாகும். அரசால் கௌரவிக்கப்படுவீர்கள். தொழில் தொடர்பாக பயணங்களை மேற்கொள்ள நேரிடும்.

மாணவ, மாணவியருக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்று, ஆசிரியர்களின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். ஆசிரியர் மற்றும் பெற்றோரின் ஆலோசனையைக் கேட்டு நடப்பது நல்லது.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு பல வகைகளிலும் முன்னேற்றம் தரும் மாதமாக இருக்கும். புகுந்த வீட்டு உறவினர்கள் மத்தியில் மதிப்பும் மரியாதையும் கூடும். கணவரின் பாராட்டுகள் கிடைக்கும்.அலுவலகத்துக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு சிறப்பான பலன்கள் ஏற்படக்கூடும். எதிர்பார்த்த பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்கக்கூடும்.

சாதகமான நாள்கள்: ஜூன் 16, 21, 22, 25, ஜூலை 2, 3, 4, 5, 6, 12, 13, 14, 15

சந்திராஷ்டம நாள்கள்: ஜூலை 7, 8

அதிர்ஷ்ட எண்கள்:1, 3, 7

வழிபடவேண்டிய தெய்வம்: சிவபெருமான், ஆஞ்சநேயர்

பரிகாரம்: திங்கள்தோறும் சிவபெருமானுக்கு வில்வதளத்தால் அர்ச்சனை செய்வதும், சிவஸ்துதிகளைப் பாராயணம் செய்வதும் நன்மை தரும். சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சார்த்தி வழிபடவும்.



Trending Articles

Sponsored