ரமலான் நற்செயல்கள் எல்லா மாதங்களிலும் தொடர வேண்டும்! #EidMubarakகைப் பெருநாள் பிறந்துவிட்டது. மனசுக்குள் குதூகலம். திருப்தி. பெருநாள் புத்தாடை அணிந்தாயிற்று. எவ்வளவு சந்தோஷம்! பூரிப்பு! சிரிப்பு! இனிப்பு!  வாழ்வின் அழகான நாள்கள், பெருநாள்கள்! வாழ்வின் புதிய நாள்களில் அழகான நாள்கள்! நில்லுங்கள். நிறைய குதூகலம்தான். கூடவே, கொஞ்சம் கவலை! ரமலான் நம்மை விட்டுப் போய்விட்டது. கவலைதானே? ஆம், கவலைதான். எங்கோ மனதின் ஓரத்தில் ஒட்டிக்கொண்டிருக்கும் கவலை.

Sponsored


ரமலானில் நற்செயல்கள் அதிகமாகின நமது வாழ்வில். இறை நினைவில் அதிகம் திளைத்து, இறைவழிபாட்டில் அதிகம் மூழ்கி, நமக்குள் ஓர் அமைதியான நல்ல மனம் உருவாகியிருந்தது. உண்மையில் இந்தப் பக்குவம் நம்முடைய வாழ்வில் எல்லா மாதங்களிலும் ஏற்பட வேண்டும் என்பதற்குத்தான் நோன்பு நோற்றோம். இப்போது நாம் என்ன செய்ய வேண்டும்?

Sponsored


அல்லாஹ் சொல்கிறான்: `நோன்பின் எண்ணிக்கையை நீங்கள் முழுமைப்படுத்தவும் அல்லாஹ் உங்களை நேரிய வழியில் செலுத்தியதற்காக நீங்கள், `அல்லாஹு அக்பர்’ (அல்லாஹ் மிகப் பெரியவன்) எனக் கூறி, அவனது மேன்மையைப் புகழ்வதற்காகவும் ஈகைப் பெருநாள் வருகிறது. இதனால் நீங்கள் நன்றி செலுத்துபவர்களாக ஆகலாம்.’ (அல்குர்ஆன் 2:185)

Sponsored


பெருநாளின் பிரதான அம்சம் நம்முடைய நன்றிகளை நமது ரட்சகனிடம் அர்ப்பணிப்பதாகும். அவன் நமக்கு நேர்வழி காட்டியதாலேயே நம்மால் நோன்பு நோற்று, அதை ரமலான் முழுவதுமாக முழுமைப்படுத்த முடிந்தது. 

எத்தனையோ பேர் இந்த அருட்கொடை இழந்து, நேர்வழி இழந்து, ஒளி இழந்து, இதையெல்லாம் இழந்திருப்பதுகூடத் தெரியாத அளவுக்கு அறிவை இழந்து, உணர்விழந்து நஷ்டவாளிகளாக இருக்க, நாமோ அல்லாஹ்வின் பெரும் அருளால் நோன்பு வைத்தோம். அவனிடம் பாவமன்னிப்புத் தேடினோம். அவனை வணங்கினோம். அதில் நிம்மதி பெற்றோம். இப்போது உள்ளம் உருகி நன்றி செலுத்துவோம். இதற்குத்தான் பெருநாள்.

நம்முடைய சொந்தப் பெருநாள்:

`ஒவ்வொரு சமுதாயத்துக்கும் பெருநாள் உண்டு. இது நமது பெருநாள்’ என்று நபி (ஸல்) அவர்கள் பெருநாள்களைச் சிறப்பித்துச் சொல்லியிருக்கிறார்கள். (ஸஹீஹுல் புகாரீ 952)

`நமது பெருநாள்’ என்ற அவர்களின் வார்த்தை மிக ஆழமானது. `நம்முடைய மார்க்கம் நமக்கு வழங்கியிருக்கும் பெருநாள்; நம்முடைய தனித்தன்மை வாய்ந்த பெருநாள்; மற்ற சமுதாயங்களின் பெருநாள்களைவிடச் சிறப்பும் அழகும் கொண்ட பெருநாள்; நாம் யாருடைய பெருநாளையும் கொண்டாட மாட்டோம், நமக்குச் சொந்தமான பெருநாளையே கொண்டாடுவோம்’ என்ற அர்த்தங்கள் அந்த வார்த்தையில் அடங்கியுள்ளன.

நபியவர்கள் நம்மை எப்போதுமே பிற சமுதாயங்களின் கலாசாரங்களுக்கு ஒப்பாக நடப்பதைத் தடுத்து வந்திருக்கிறார்கள். அதை நம்முடைய பெருநாளிலும் செயல்படுத்தினார்கள். இணைவைப்பவர்களுக்கு மாறு செய்தார்கள். எந்தச் சமுதாயத்திலும் இல்லாத அழகான நடைமுறைகளை நம்முடைய பெருநாளில் ஏற்படுத்தினார்கள்.

அனஸ் (ரலி) சொல்கிறார்கள்: `அல்லாஹ்வின் தூதர் (ஸல்) மதீனாவுக்கு வந்தபோது, மக்களுக்கு இரண்டு பெருநாள்கள் இருந்தன. அந்த நாள்களில் மக்கள் விளையாடுவார்கள். நபியவர்கள், `இந்த இரண்டு நாள்களும் என்ன?’ என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், `நாங்கள் அறியாமைக் காலத்தில் இந்த இரு நாள்களிலும் விளையாடிக் களிப்போம்’ என்று சொன்னார்கள். அப்போது நபியவர்கள், `நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு அந்த இரண்டு நாள்களைவிடச் சிறந்த இரண்டு நாள்களைக் கொடுத்துவிட்டான். தியாகப் பெருநாளும் நோன்புப் பெருநாளுமே அவை’ என்றார்கள்.’ (சுனன் அபூதாவூது 1136, ஸஹீஹு அபீ தாவூத் 1039)

நமக்கு இரண்டு பண்டிகை நாள்கள் மட்டுமே. மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்ள சமுதாய அளவில் இரண்டு நாள்களே வருடத்துக்கு. இந்த இரு நாள்களும் வெறுமனே கேளிக்கை கூத்துகளாக மாறிவிடாமல், இத்தருணங்களிலும் நல்ல செயல்களைச் செய்யுமாறு நபியவர்கள் வழிகாட்டியிருக்கிறார்கள். ஏழைகளுக்குத் தர்மம் செய்வது, பசித்தவர்களுக்கு உணவளிப்பது, ஆடை இல்லாதவர்களுக்கு ஆடை வழங்குவது, தொழுவது, அனைவரும் மகிழ்ந்திருக்க வாழ்த்துச் சொல்வது இப்படிப் பல நற்செயல்களைச் செய்ய நபியவர்கள் தூண்டியிருக்கிறார்கள்.  

கடைசிச் சொற்கள்...
நபித்தோழர்களும் அவர்களைப் பின்பற்றியவர்களும் ரமலான் வருவதற்கு ஆறு மாதங்கள் இருக்கும்போதே, அதை அடைய வேண்டும் என்பதற்காக அல்லாஹ்விடம் தொடர்ந்து பிரார்த்தனை செய்துவருவார்கள். அவர்களுக்கு அல்லாஹ் அனுமதித்து, ரமலானை அவர்கள் அடைந்துவிட்டால், அதில் நோன்பு நோற்று இரவுத் தொழுகைகளை நிறைவேற்றுவார்கள். பிறகு ஆறு மாதங்கள் தங்களின் அமல்கள் ஏற்கப்படுவதற்காகத் தொடர்ந்து பிரார்த்தனை செய்வார்கள்.

இப்படியே அவர்களின் வாழ்க்கை ரமலானை முன்வைத்தே நகர்ந்திருக்கிறது. ஆறு மாதங்கள் ரமலானை எதிர்பார்ப்பதும், பிறகு ஆறு மாதங்கள் தங்கள் அமல்கள் ஏற்கப்பட ஏங்கிக்கொண்டிருப்பதுமே அவர்களின் வாழ்க்கை.
நமது நிலையென்ன? ரமலான் வந்தால் நற்செயல்கள் நினைவுக்கு வருகிறது. அது போய்விட்டால் அனைத்தும் நம்மிலிருந்து போய்விடுகிறது. ரமலானில் ஐந்து வேளை தவறாமல் தொழுதவர்கள்கூட, பிறகு அலட்சியத்தில் மூழ்கிப்போகிறார்கள். அல்லாஹ்வை மறந்துவிடுகிறார்கள்.

ஆனால், ஒரு நல்ல முஸ்லிமின் அமல்கள், ரமலான் முடிந்துவிட்டாலும் தொடரும். அதுதான் முக்கியம். ஏனெனில், அல்லாஹ் கூறுகிறான்: `மரணம் உமக்கு வரும் வரை உம் இறைவனை வணங்கி வழிபடுவீராக!’ (அல்குர்ஆன் 15:99)
`அல்லாஹ்வை நம்பிக்கைகொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்ச வேண்டிய முறைப்படி அஞ்சுங்கள். முஸ்லிம்களாக இருக்கும் நிலையில்தவிர மரணித்துவிடாதீர்கள்.’ (அல்குர்ஆன் 3:102)

எனவே, ரமலான் போய்விட்டாலும் நோன்பு எனும் வணக்கத்தை ஒரு முஸ்லிம் விட்டுவிடக் கூடாது.

நபி (ஸல்) கூறினார்கள்: `எவர் ரமலான் மாதம் நோன்பு நோற்று, பிறகு தொடர்ந்து ஷவ்வால் மாதம் ஆறு நாள்கள் நோன்பு நோற்றாரோ அவர் காலம் முழுவதும் நோன்பு நோற்றவர்போல் ஆகிறார்.’ (அறிவிப்பு: அபூஅய்யூப் அல்அன்ஸாரீ (ரலி), ஸஹீஹ் முஸ்லிம் 2815)
இப்படி நோன்பு மட்டுமல்ல, தொழுகை, நல்ல அமல்கள் என்று அனைத்திலும் நிலைத்த சகோதரர்களே! வழிபாடுகளை நிறைவேற்றுவதில் நன்முயற்சி செய்யுங்கள். தவறுகளையும் தீமைகளையும் தவிர்த்துவிடுங்கள். அப்படிச் செய்தால் இவ்வுலகில் தூய வாழ்வையும் மரணத்துக்குப் பிறகு அதிகமான கூலியையும் நீங்கள் வென்றெடுப்பீர்கள்.

அல்லாஹ் கூறுகிறான்: `ஆணாயினும் பெண்ணாயினும் எவர் இறைநம்பிக்கை கொண்டவராக இருக்கும் நிலையில் நற்செயல் புரிகிறாரோ அவரை (இவ்வுலகில்) தூய வாழ்வு வாழச் செய்வோம். (மறுவுலகிலும்) அத்தகையோருக்கு அவர்களின் உன்னதமான செயல்களுக்கு ஏற்ப நாம் கூலி வழங்குவோம்.’ (அல்குர்ஆன் 16:97)Trending Articles

Sponsored