சக்தி யாத்திரை - ஞானமலை!



ஒவ்வொரு திருத்தலமாக யாத்திரை மேற்கொண்டு இறைவனை வழிபடுவதில் நமக்குக் கிடைக்கும் ஆத்ம திருப்தியே தனிதான். அதனால் நமக்கு ஏற்படும் பரவச உணர்வை அனுபவத்தில்தான் உணரமுடியும். அந்தப் பரவச அனுபவத்தை, 'சக்தி விகடன்' வாசகர்களும் பெறும் வகையில், வாசகர்களுடனும் ஆன்மிகப் பெரியோர்களுடனும் புண்ணியத் தலங்களை தரிசிக்கும் வகையில் தொடங்கவுள்ளது 'சக்தி யாத்திரை!'.

பிணிகள் தீர்க்கும் வேல்மாறல் பாராயணம்,  நினைத்ததை நிறைவேற்றும் திருப்புகழ் மகாமந்திர பூஜை மற்றும் ஆன்மிகப் பெரியோர்களின் வழிகாட்டுதலுடன் அமையப்போகிறது இந்த அற்புத யாத்திரை.
முதல் யாத்திரையில் - ஆறுமுகன் அருள்பாலிக்கும் ஆறு திருத்தலங்கள் இடம்பெறுகின்றன. தலங்களை தரிசிப்பது மட்டுமின்றி, ஆன்மிக உரையாடல்கள், சிறப்பு சங்கல்பம், விசேஷ வழிபாடுகள் என களைகட்டப் போகிறது சக்தி யாத்திரை. யாத்திரையில் நாம் தரிசிக்கவிருக்கும் தலங்களைப் பற்றிய கட்டுரைத் தொகுப்பு இது.

Sponsored


Sponsored



றைவன் அருளால் எத்தனை செல்வங்கள் பெற்றிருந்தாலும், அப்படிப் பெற்றதை முறைப்படி செலவிட்டு இறைவனின் திருவருளுக்கு ஆட்பட வேண்டும். அப்போதுதான் நமக்கு ஆன்ம ஞானம் கிடைக்கும். ஞானம் பெறாதவரின் கல்வியறிவுகூட பொருளற்றதாகிப் போய்விடும். ஈட்டிய பொருளை நல்லவழியில் செலவிடவும், ஞானத்தைப் பெறவும் சத்குரு ஒருவரின் அருள் நமக்குத் தேவை. எல்லோருக்குமே சத்குரு ஒருவர் கிடைப்பது சாத்தியமில்லை என்ற சூழலில், அத்தனை உயிர்களுக்கும் ஞான வடிவமாக - ஞானகுருவாகக் காட்சியளிப்பவன் அந்த ஞானபண்டிதன் முருகப்பெருமான். ஞான மூர்த்தியான முருகப்பெருமான் குடிகொண்ட ஒரு மலையே ஞான வடிவில் அமைந்துள்ளது. அதன் காரணமாகவே அந்த மலை `ஞானமலை' என்றே போற்றப்படுகிறது. இதை நாம் சொல்லவில்லை. மகாஞானியர்களும், யோகியர்களும்தாம் இதை `ஞானமலை’ என்று கொண்டாடியிருக்கிறார்கள். ஞானமலை எங்கிருக்கிறது என்பது பற்றியும், அந்தப் பெயர் எப்படி ஏற்பட்டது என்பதையும் காண்போமா..?

Sponsored



வண்ணக்குறமகள் வள்ளிப்பிராட்டியை கரம் பற்றிய முருகப்பெருமான், வள்ளிமலையிலிருந்து திருத்தணிகை மலைக்குப் புறப்பட்டார். வழியில் தென்பட்டது ஒரு சிறிய குன்று. குன்றென்றாலே குமரப்பெருமானுக்குக் குதூகலம் அல்லவா? வள்ளியம்மையோடு முருகப்பெருமான் அந்தக் குன்றில் தங்கினார். கொஞ்சம் இளைப்பாறினார். அந்த மலைதான் ஞானமலை என்று புராணங்கள் கூறுகின்றன. அதற்கு அழுத்தமான சான்றாக முருகப்பெருமானின் திருவடிச் சுவடுகளும் இங்கு காட்சியளிக்கின்றன. 
வேலூர் மாவட்டத்தின் காவேரிப்பாக்கத்திலிருந்து சோளிங்கர் போகும் வழியில், 16 கி.மீ தூரத்தில் மங்கலம் என்ற ஊர் இருக்கிறது. இந்த ஊரிலிருந்து 2 கி.மீ தொலைவில் ஞானமலையின் அடிவாரம் உள்ளது. 

மலையடிவாரத்திலிருக்கும் ஞானமலை ஆசிரமத்தில் `குறமகள் தழுவிய குமரன்' உற்சவ சிலையை தரிசிக்கலாம். மலையடிவாரத்தில் அழகே வடிவான `ஞானஸித்தி விநாயகர்', கிராம தேவதை `பொன்னியம்மன்’ ஆலயங்களை வணங்கிவிட்டு மலைமீது ஏறப் படிக்கட்டுகளை கடக்க வேண்டும். வழியில் அருள்பாலிப்பவர் `ஞான தட்சிணாமூர்த்தி’. இப்படிக் காணும் வழியெங்கும் ஞானக்கடவுளர்களின் தரிசனத்தைக் கண்டவாறே மலை உச்சியை அடைந்தால் ஒரு முகம், நான்கு திருக்கரங்கள் கொண்ட ஞான முருகப்பெருமான் வள்ளி, தேவசேனாவோடு காட்சியளிக்கிறார். 

ஜபமாலை, கமண்டலம் தாங்கி, வலக்கை அபயமுத்திரை காட்ட, இடக்கையை இடுப்பில் வைத்தவாறு `பிரம்ம சாஸ்தா' உருவில் இங்கு முருகப்பெருமான் காட்சியளிக்கிறார். பிரம்மனுக்கு வேத ரகசியம் சொன்ன வடிவம் இது என்பதால், இங்கு முருகப்பெருமான் குருவின் அம்சமாக ஞானத் திருவுருவாகக் காட்சியளிக்கிறார். இவரைத் தரிசிப்பவர்கள் அஞ்ஞானம் அழிந்து ஞான ஒளி பெற்று வாழ்வில் வளம் பெறுவார்கள் என்கிறது தல வரலாறு. 

திருக்கோயிலைச் சுற்றிவிட்டு இன்னும் மலையின் மீதேறிச் சென்றால் தேவசுனை, ஞானகிரீஸ்வரர் சந்நிதி, ஞானவெளி சித்தரின் ஜீவசமாதி, முருகப்பெருமானின் திருவடித் தடங்கள் என்று மலையெங்கும் அதிசயக் காட்சிகள் விரிந்துகிடக்கின்றன. மலையின் மீதிருந்து நோக்கினால் எங்கெங்கும் பசுமைக் காட்சிகள், காவேரிப்பாக்கம் ஏரியின் அழகிய காட்சிகள், மலையெங்கும் வளர்ந்து குளுமை தரும் அற்புத மரங்கள் என்று ஞானமலை இயற்கை அழகின் பெட்டகமாகவும் விளங்கி வருகிறது. ஞானமலையின் மீதிருந்து பார்த்தால் வள்ளிமலை, திருத்தணிகை மலை தெரிகிறது. இந்த மூன்று மலைகளும் ஒரு முக்கோண வடிவில் அமைந்திருப்பதும் ஓர் அதிசயச் சிறப்பு.

ஞானமலைக்கு வந்த அருணகிரிநாதருக்குத் திருவண்ணாமலை முருகப்பெருமானின் நினைவு வந்துவிட்டதாம். அங்கு இவரை  ஆட்கொண்டு குருவாக நின்று தீட்சை தந்த பெருங்கருணையை எண்ணி கண்ணீர் மல்கிய அருணகிரிநாதர், ஞானமலையிலும் முருகப்பெருமானின் பாத தரிசன அனுபவத்தைப் பாடி தரிசித்தார்.  பல்லவர் காலத்து கோயில் என்று சொல்லப்படும் ஞானமலையில் 14-ம் நூற்றாண்டு காளிங்கராயன் காலத்துக் கல்வெட்டு ஒன்று கோயிலின் திருப்பணியை விவரிக்கிறது. 

வள்ளிமலை ஸ்ரீசச்சிதானந்த சுவாமிகள் மகிழ்ந்து போற்றிய மாமலை இது. இன்றும் ஞானம் தேடி வரும் பக்தர்களுக்கு ஞான ஆசிரமமாக இந்த மலை விளங்கி வருகிறது. தைப்பூசம், பங்குனி உத்திரம், கந்தசஷ்டி, வைகாசி விசாகம் என மாதம்தோறும் விழாக்களால் சிறப்புப் பெறும் இந்த அற்புத மலை கல்வி, கலைகளில் சிறப்பான இடத்தைப் பெற விரும்பும் அன்பர்களுக்கு ஒரு சிறப்பான தலம் எனப்படுகிறது. 
ஞான குருவாக எழுந்தருளி வந்தவர்களுக்கு வரமளிக்கும் ஞானமலையில் வீற்றிருக்கும் ஞானப் பண்டிதனை ஒருமுறை சென்று தரிசித்துப் பாருங்கள்! மாயைகள் யாவும் நீங்கி மங்கள வாழ்வைப் பெறுவீர்கள் என்று அங்கு சென்று திரும்பிய எண்ணற்ற பக்தர்கள் சாட்சி சொல்கின்றனர். அதுமட்டுமா? இங்குள்ள `குறமகள் தழுவிய குமரன்' திருக்கோலத்தைத் தரிசித்தால் தம்பதிகளுக்கிடையே உருவான எல்லாச் சிக்கல்களும் நீங்கி ஒற்றுமை பிறக்கும் என்கிறார்கள். ஞானத்தின் முழுவடிவாகக் காட்சி தரும் வேலவனை ஞானமலையில் தரிசித்து அஞ்ஞானம் நீக்குவோம் வாருங்கள்!

அற்புதமான இந்த யாத்திரையில் 

நீங்களும் கலந்துகொள்ள வேண்டுமா?

இங்கே க்ளிக் செய்யவும்...



Trending Articles

Sponsored