காமாக்யா கோயில் `அம்புபச்சிமேளா’ திருவிழா நடத்தப்படுவது ஏன்? #KamakhyaTemple



Sponsored



ந்தியாவின் வடகிழக்கு மாநிலம் அஸ்ஸாம். இயற்கை வளங்கள் நிறைந்த மாநிலம். அங்கே பிரம்மபுத்திரா நதியின் தென் கரையில் அமைந்திருக்கும் கௌகாத்தி நகரில் `நீல் பர்வதம்' என்னும் மலைமீது அமைந்திருக்கிறது காமாக்யா கோயில். சக்திதேவியின் சக்தி பீடங்களில் மிகவும் முக்கியமான தலம் இது. சக்தி தேவியின் 51 சக்தி பீடங்களில் முக்கியமானது காமாக்யா யோனி பீடம். காமாக்யா கோயிலில் மிகவும் பிரசித்திபெற்ற `அம்புபச்சிமேளா’ என்னும் திருவிழா இந்த வருடம் தொடங்கவிருக்கிறது. கோயில், அம்புபச்சிமேளா சில விவரங்களைத் தெரிந்துகொள்வோமா..?

தன் மகளான தாட்சாயினிக்கும் தன் மருமகன் சிவபெருமானுக்கும் முறையான அழைப்பு விடுக்காமல் பெரும் யாகம் செய்கிறான் தட்சன்.  நியாயம் கேட்பதற்காகச் சென்ற தாட்சாயினியை அவமரியாதை செய்துவிடுகிறான். இதனால் கோபம் கொண்ட தாட்சாயினி, யாகம் நிறைவடையாமல் அழியுமாறு சபிக்கிறாள். பிறகு அதே யாகத் தீயில் விழுந்துவிடுகிறாள். தட்சனின் ஆணவத்தை அடக்கி, அவனுடைய யாகத்தை அழிப்பதற்காக வீரபத்திரரை அனுப்புகிறார் சிவபெருமான். வீரபத்திரர் தட்சனின் யாகத்தை அழித்து, அவன் தலையையும் கொய்துவிடுகிறார். மனைவியின் உடலைத் தன் தோளில் போட்டுக்கொண்டு சிவபெருமான் ஊழித்தாண்டவம் ஆடுகிறார். தாட்சாயினியின் உடல் சிவபெருமானின் தோளில் இருக்கும்வரை அவரது ஊழித் தாண்டவம்  நிற்காது என்பதை அறிந்த விஷ்ணு, தனது சக்ராயுதத்தை ஏவி தாட்சாயினியின் உடலைத் துண்டாக்குகிறார். அந்த உடல் 51 துண்டுகளாகச் சிதறி பூமியில் விழுகிறது. சக்தி தேவியின் உடல் பாகங்கள் விழுந்த இடங்களே 'சக்தி பீடங்கள்' என்று அழைக்கப்படுகின்றன. 51 சக்தி பீடங்களில் முதன்மையானது 'மகா காமாக்யா' தேவி கோயில். `தாட்சாயினியின் யோனி விழுந்த சக்தி பீடம் இது’ என்று புராணங்கள் கூறுகின்றன. 

Sponsored


Sponsored


தேவியின் அங்கம் விழுந்ததும், மலை நீல நிறமாக மாறியதாம். அதனால்தான் இந்த மலையை, `நீல் பர்வதம்' என்றும் `நீலாச்சல்' என்றும் அழைக்கிறார்கள். தரையிலிருந்து 700 அடி உயரத்தில் மகா காமாக்யா தேவியின் கோயில் வனங்கள் சூழக் காணப்படுகிறது. தாட்சாயினியின் யோனி விழுந்த இடத்தில், விஸ்வகர்மா மூலம் கோயில் கட்டிய பிறகுதான் மன்மதன் இழந்த தன் உடலைத் திரும்பப் பெற்றான் என்று கூறுகிறார்கள். இந்தக் கோயில் பற்றி வேறொரு புராணக் கதையும் வழங்கப்படுகிறது. அது...

`தான் படைப்புத் தொழில் செய்கிறோம்' என்ற எண்ணத்தில் பிரம்மதேவருக்கு கர்வம் ஏற்பட்டது. பிரம்மதேவரின் ஆணவத்தை அழிக்க எண்ணிய தேவி, தன் கூந்தலிலிருந்து கேசிகன் எனும் அசுரன் ஒருவனை உருவாக்கினாள். கேசிகனைக் கண்டு நடுநடுங்கிய பிரம்மதேவர், தேவியைச் சரணடைந்தார். தான் உண்டாக்கிய அசுரனைத் தானே சாம்பலாக்கி அழித்த தேவி, அவனது சாம்பலைக் கொண்டு தனக்கு ஒரு கோயில் கட்டுமாறு பிரம்மதேவரைப் பணித்தாள். அதன்படியே பிரம்மதேவர் கேசிகனின் சாம்பலைக் கொண்டு `நீலாத்ரி’ எனும் மலையை உருவாக்கி தேவிக்குக் கோயில் கட்டினார் என்கிறார்கள்.

தேவியின் யோனி விழுந்த இந்தத் தலத்துக்கு காமரூபம், ஹரிக்ஷேத்திரம், பிரக்ஜோதிஷபுரம், காமகிரி, காமயோனி மண்டலம், மஹாமாயா ஸ்தானம், நீலாச்சலம், நீல் பர்வதம்... எனப் பல பெயர்கள் இருக்கின்றன. இந்த நீலாச்சல் மலையில்தான் `மகா வித்யாக்கள்’ என அழைக்கப்படும்  காளி, தாரா, திரிபுரசுந்தரி, புவனேஸ்வரி, பைரவி, சின்னமஸ்தா, தூமவதி, பகளாமுகி, மாதங்கி, கமலா என 10 தேவிகளின் கோயில்கள் இருக்கின்றன. இவற்றில் திரிபுரசுந்தரி, மாதங்கி, கமலா ஆகிய தேவிகளுக்கு காமாக்யா கோயிலுக்கு உள்ளேயே சந்நிதிகள் இருப்பது கூடுதல் சிறப்பு.  

இந்தத் தலத்திலிருக்கும் அம்பிகையைக் காமேஸ்வரி,  காமரூபிணி, காம, காமாக்யா என்றெல்லாம் அழைக்கிறார்கள். இந்தத் திருத்தலத்தில் சக்தி தேவிக்கு உருவம் கிடையாது. தேவியின் யோனியே சக்தியின் வடிவமாக வணங்கப்படுகிறது.

நீலாச்சல் மலைமீது ஏறினால், மூன்று பெரிய கோபுரம், அவற்றைச் சுற்றிலும் சிறிய நான்கு கோபுரங்களுடன் கம்பீரமாகக் காட்சியளிக்கிறது கோயில். கோயிலின் மேற்குப் பகுதியில் பலிபீடம் இருக்கிறது. இங்கு தேவிக்கு தினமும் ஓர் ஆட்டை பலி கொடுத்து அதன் தலையைக் கருவறையில் வைத்த பிறகுதான் தினசரி நித்ய பூஜையைத் தொடங்குகிறார்கள். வருடத்தில் மகாநவமி அன்று எருமையைப் பலியிடுகிறார்கள். பலியிடப்படும் விலங்குகளின் கறியைத்தான் பக்தர்களுக்குப் பிரசாதமாகக் கொடுக்கிறார்கள். அம்பிகையின் முக்கிய சக்தி பீடமாக இது விளங்கினாலும் பிரம்மன், சிவன், விஷ்ணு, கணேசன், ரதி தேவி-மன்மதன் ஆகியோரும் கோயிலில் வணங்கப்படுகிறார்கள். மன்மதனின் கட்டளையின் பேரில் காமாக்யா கோயிலைக் கட்டிய விஸ்வகர்மாவின் சிலையும் இருக்கிறது. 
கோயிலின் கருவறை இயற்கையாக அமைந்த மலையின் குகைக்குள் இருக்கிறது. நீலாச்சல் மலையின் சிறிய ஊற்றில் நீர் வழிந்து ஓடியபடி இருக்கிறது. அந்த ஊற்றில் நீருக்குள் மூழ்கியபடி தேவியின் யோனி பாகம் இருக்கிறது. 108 செம்பருத்தி மலர்களால் ஆன மாலையை தேவிக்கு பிரத்யேகமாகச் சூட்டி வணங்கி வேண்டிக்கொள்கிறார்கள். தேவியை வேண்டினால், மனதில் நினைத்தது அனைத்தும் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. கல்யாண வரம் வேண்டுவோரும் சக்திதேவியின் பீடத்தை வேண்டி வரம் பெறுகிறார்கள். 

தாந்த்ரீகர்களுக்கு முக்கியமான திருக்கோயில் இது. அவர்கள் பயிற்சியில் முதல் நாளையும் நிறைவு நாளையும் இங்குதான் மேற்கொள்கிறார்கள். அந்த அளவுக்குச் சக்தி மிகுந்த கோயில் இது. 

கோயிலில் மிகவும் முக்கியமான பண்டிகை அம்புபச்சி மேளா. 'அம்புபச்சி மேளா' என்பது பருவமழை நிறைவுறும் காலத்தில் தேவிக்கு நன்றி செலுத்தும் விதமாக நான்கு நாள்கள் கொண்டாடப்படும் பெரும் திருவிழா. மாதம்தோறும் காமாக்யா தேவியின் மாதவிலக்குக் காலமான நான்கு நாள்கள் சக்தி பீடத்தை சிவப்பு வஸ்திரத்தால் மறைத்துவிடுவார்கள். ஆனால், தமிழ் மாதக் கணக்குபடி ஆனி மாதம் வரும் மாதவிலக்கு நாள்களில் மட்டும் சக்தி பீடத்தில் வழிபாடுகள் நடைபெறும். அன்றைய தினம் பக்தர்களும் யோகிகளும் ஆயிரக்கணக்கில் வந்து தேவியை வழிபடுகின்றனர். 

கும்பமேளா திருவிழாவைப் போன்றே அம்புபச்சிமேளா மிகவும் பிரசித்திபெற்றது. திரிவேணி சங்கமத்தில் நடைபெறும் கும்பமேளாவில் நதியில் நீராடினால் என்ன பலன்கள் கிடைக்குமோ, அதே அளவு பலன்கள் அம்புபச்சிமேளா அன்று தேவியின் யோனி பீடத்தை வணங்கினால் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. அம்புபச்சிமேளா நாளை (22.6.2018) தொடங்கி நான்கு நாள்கள் நடைபெறவிருக்கிறது. ஒவ்வொரு வருடமும் இந்தக் குறிப்பிட்ட நாள்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கூடி தேவியைத் தரிசிப்பார்கள். வட மாநிலங்களில் பிரபலமாக உள்ள நிர்வாண நாகா சாதுக்கள் ஆயிரக்கணக்கில் அம்புபச்சிமேளா திருவிழாவில் கலந்துகொண்டு காமாக்யா தேவியை வழிபடுகிறார்கள்.

பக்தர்கள் தங்கள் வாழ்நாளில் ஒருமுறையேனும் தரிசிக்க வேண்டிய தலம் இது. நேரில் சென்று வழிபட முடியாவிட்டாலும், சக்தி தேவியை மனதினால் நினைத்து, அவள் பாதங்களில் சரணடைந்து, அவளது பேரருளைப் பெறுவோம்!



Trending Articles

Sponsored