மகாபாரதப் போரின் போக்கையே மாற்றிய கிருஷ்ணர் கை ஆயுதம்! -ஸ்ரீசுதர்சன ஜயந்தி சிறப்புப் பகிர்வுSponsoredஸ்ரீசுதர்சனர், சக்கரத்தாழ்வார், ஹேதிராஜன், சுதர்சனாழ்வான், திருவாழியாழ்வான், திருமால் நேயன், சக்கர ராஜன், நேமி, திகிரி, ரதாங்கம் என்றெல்லாம் போற்றப்படுபவர் திருமாலின் திருக்கரத்தில் உள்ள ஸ்ரீசக்கரப் பெருமான். திருமாலின் பஞ்ச ஆயுதங்களில் முதன்மையான ஸ்ரீசக்கரத்தை ஆழ்வாராகவே எண்ணி வழிபடும் வழக்கம் வைணவத்தில் உள்ளது. எல்லா விஷ்ணு கோயில்களிலும் எட்டு அல்லது 16 திருக்கரங்களுடன் கம்பீரத் தோற்றத்துடன் அறுகோண சக்கரத்தில் சக்கரத்தாழ்வார் காட்சியளிப்பார். 32 திருக்கரங்கள் கொண்ட மகா சுதர்சனரையும் சில ஆலயங்களில் தரிசிக்கலாம்.


பெரும்பாலும், திருமாலின் வலக்கரத்தில் காட்சியருளும் ஸ்ரீசக்கரம், திருக்கோயிலூர் போன்ற சில தலங்களில் மட்டுமே இடக்கரத்தில் காட்சி தரும். திருமாலிருஞ்சோலை, திருக்கண்ணபுரம் போன்ற ஆலயங்களில் ஸ்ரீசக்கரத்தைப் பிரயோகிக்கும் நிலையில் திருமால் காட்சிதருகிறார். திருமாலுக்கு உறுதுணையாக சிஷ்ட பரிபாலன துஷ்ட நிக்கிரகத்துக்கு எப்போதும் துணையாக இருப்பவர் ஸ்ரீசுதர்சனர். `அனந்தன்’ எனப்படும் நாகம், ஸ்ரீகருடன், ஸ்ரீசுதர்சனம் ஆகிய இந்த மூவரும் திருமாலை ஒரு கணமும் நீங்காமல் எப்போதும் தொடர்ந்து சேவிக்கும் பக்தர்கள் என்று ஆன்மிக நூல்கள் கூறுகின்றன. ஸ்ரீசக்கரத்தின் பெருமைகளை சுக்ல யஜுர் வேதம் அநேக இடங்களில் புகழ்ந்து கூறுகின்றது. பவிஷ்யோத்தர புராணமும் இவரது பெருமைகளை பலவாறு ஆராதிக்கிறது.

Sponsored


Sponsoredஆழ்வார்களில் மூத்தவர் என்று ஆராதிக்கப்படும் ஸ்ரீசுதர்சனர், `ஆனி மாதம் சித்திரை நட்சத்திரத்தில் அவதரித்தவர்’ என்று புராணங்கள் கூறுகின்றன. இதனால் இன்று அனைத்து விஷ்ணு ஆலயங்களிலும் ஸ்ரீசுதர்சன ஜயந்தி சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. சுதர்சனர் என்றால் 'நல்வழி அருளுபவர்', `காண்பதற்கு இனியவர்' என்று புராண நூல்கள் கூறுகின்றன. சுதர்சனாஷ்டகத்தில், `ஸ்ரீசக்கரத்தாழ்வார் திருமாலுக்கு இணையானவர்’ என்று போற்றப்படுகிறார். ஷோடசாயுத ஸ்தோத்ரம் என்ற நூல் சுதர்சனரின் ஆயுதங்களை விளக்கிக் கூறுகிறது.


`ஷட்கோண சக்கரம்’ எனும் ஆறுகோணங்களின் மத்தியில் ஸ்ரீசுதர்சனர் வீற்றிருப்பதால், யந்திர வழிபாட்டின் முன்னோடியான இவரை வணங்கினால் சகல தோஷங்களும் நீங்கிவிடும் என்பது நம்பிக்கை. பதினாறு திருக்கரங்களில் சக்கரம், கத்தி, வேல், சங்கம், வில், பாசம், கலப்பை, அங்குசம், அக்னி, வஜ்ரம், கதை, உலக்கை, சூலம், மழு, ஈட்டி, தண்டு என சகல தெய்வங்களின் ஆயுதங்களையும் தாங்கி அருள்காட்சி அளிப்பார். ஜுவாலா கேசமும், மூன்று கண்களும் கொண்டு ருத்திர அம்சமாக இவர் விளங்குகிறார். இவருக்கென தனிச் சந்நிதி அமைந்திருப்பதே இவரின் மகிமையை எடுத்துச் சொல்லும். தீயவர்களுக்கு மறச்சக்கரமாகவும், நல்லவர்களுக்கு அறச்சக்கரமாகவும் விளங்குபவர். `உயிர்கள் மீண்டும், மீண்டும் பிறந்து பின்னர் இறப்பது என்ற உலக நியதி ஸ்ரீ சுதர்சனரை ஆதாரமாகக் கொண்டே நடக்கிறது’ என்று வேதங்கள் கூறுகின்றன. வைணவ விழாக்களில் அன்றாடம் காலை, மாலையில் இவர் எழுந்தருளிய பின்பே பெருமாள் புறப்பாடு நடைபெறும்.


நரசிம்ம அவதாரத்தில் இரணியனை சம்ஹாரம் செய்ய நகங்களாக இருந்தவர் ஸ்ரீசுதர்சனர். திருமாலின் வாமன அவதாரத்தின்போது தானமளிக்க முன்வந்த மகாபலி மன்னரைத் தடுக்க கெண்டியில் வண்டுருவாக வந்த சுக்கிராச்சாரியாரின் கண்களைக் குத்தி பின்னமாக்கியவர் தர்ப்பை வடிவத்தில் இருந்த இவர்தான் என்று புராணம் கூறுகின்றது. ராமாவதாரத்தில் பரதனாக அவதரித்து பாதுகை சேவை புரிந்ததும் ஸ்ரீசக்கரத்தாழ்வாரே. மால்யவான், சுமாலி, சிசுபாலன், பௌண்டரக வாசுதேவன் போன்ற பல கொடியவர்களை அழித்தது இந்த சுதர்சன சக்கரம். முதலையின் வாயில் சிக்கிக்கொண்ட கஜேந்திரனைக் காக்க திருமால் சுதர்சன சக்கரத்தை ஏவியே அருள் செய்தார். மகாபாரதப் போரில் சூரியனை மறைத்து, போரின் போக்கையே மாற்றியதும் இந்த ஸ்ரீசக்கரம்தான். துர்வாசரின் செருக்கை அடக்கி அம்பரீசனைக் காத்ததும் இந்தத் திருமால் ஏவிய ஸ்ரீசக்கரம்தான். திருமழிசையாழ்வார் ஸ்ரீசுதர்சனரின் அம்சமாக அவதரித்தவர் என்று வணங்கப்படுகிறார். ஸ்ரீரங்கத்தில் காவிரியில் மூழ்கி காணாமல் போன ரங்கநாதரை மீட்க கூரநாராயண ஜீயர் என்பவர் சுதர்சன சதகம் பாடி மீட்டார். இந்தச் சதகத்தைப் பாடினால், எல்லாத் துன்பங்களும் நீங்கும் என்பது நம்பிக்கை.


சினத்தின் வடிவமாக இவர் கூறப்பட்டாலும் இவர் தீன தயாளன் என்றே பக்தர்களால் போற்றப்படுகிறார். இவரை வழிபடுவதால், எல்லாப் பிறவிகளிலும் செய்த பாவங்கள், தோஷங்கள், தீங்குகள், தீவினைகள், கெடுதிகள் நீங்கும். கடன் தொல்லை, துர்சக்திகளின் துன்பங்கள் யாவும் விலகும். மேலும் எதிரிகள் பயம் நீங்கி அமைதியும் ஆனந்தமும் சேர்ந்த வாழ்வு கிட்டும். சிவப்பு மலர்களால் ஸ்ரீசுதர்சனரை அர்ச்சித்து, ஸ்ரீசுதர்சன காயத்ரி மந்திரத்தை உச்சரித்து இவரது அருளைப் பெறலாம். ஸ்ரீசுதர்சனரை ஆராதிப்பவர்கள் மரண பயமின்றி வாழ்வாங்கு வாழ்வார்கள் என்கிறது புராணம். இன்று ஸ்ரீசுதர்சன ஜயந்தி நாளில் சுதர்சனப் பெருமாளை வணங்கி அவரது ஆசியைப் பெறலாம்.Trending Articles

Sponsored