`ஒருவருக்கு எப்போது என்ன தேவை என்பது இறைவனுக்குத் தெரியும்!’ - பைபிள் கதைகள் #BibleStories



ஆசிரமம் ஒன்றிலிருந்த சீடன் ஒருநாள், ஆசிரம வளாகத்தில் மரக்கன்று ஒன்றை நட்டுவைத்தான். மரம் நன்றாக வளர வேண்டுமென்பதற்காக ஆண்டவரிடம் வேண்டிக்கொண்டான். `ஆண்டவரே இந்த மரக்கன்று சீக்கிரம் வளர வேண்டும். எனவே, நிறைய மழை பெய்ய வேண்டும்' என்று தனது வேண்டுகோளை முன்வைத்தான். அவனது வேண்டுகோளின்படி இறைவன் மழை பொழியவைத்தார். மழை கொட்டோ கொட்டென்று கொட்டியது. இடைவிடாமல் பெய்த மழையால், அந்த மரக்கன்று நீரில் நன்றாக ஊறியிருந்தது. இதைக் கண்டு பயந்த சீடன், `இறைவா, மழை பெய்தது போதும். மழையை நிறுத்திவிட்டு வெயில் அடிக்கும்படிச் செய்யும்..!' என்று வேண்டினான். சீடனின் வேண்டுகோளுக்கிணங்க மழை நின்றது, வெயில் வெளுத்து வாங்கியது. இதனால் அந்தச் செடி வாடத் தொடங்கியது.இதைக் கண்டு சீடன் பதறிப்போனான்.

Sponsored


உடனே இறைவனிடம் சென்று மீண்டும் ஒரு வேண்டுகோளை முன்வைத்தான். `இறைவா... வெயிலும் வேண்டாம், மழையும் வேண்டாம்; பனி பொழியட்டும்!' - சீடனின் விருப்பப்படி பனி பெய்தது. மழை, வெயில், பனி என தட்பவெப்பநிலை ஏகத்துக்கும் மாறியதால் அந்தச் செடியால் தாக்குபிடிக்க முடியாமல் பட்டுப்போனது. இதனால் மனவேதனையடைந்த சீடன் ஆசிரம குருவிடம் போய், `இந்த இறைவனுக்கு கருணையே கிடையாது. அவரால் நான் நட்டுவைத்த செடி பட்டுப்போனது' என்று புலம்பினான். `என்ன நடந்தது..?' என்று சீடனிடம் விவரமாகக் கேட்டறிந்தார் குரு. அதையடுத்து சீடனிடம் நீண்ட நேரம் பேசினார். அப்போது, `தன் படைப்பில் எதற்கு எப்போது என்னென்ன தேவை என்பது இறைவனுக்குத் தெரியும். நீ உன் சுயநலத்துக்காக அதை மாற்ற நினைத்து வேண்டுகோள்வைத்தால் இப்படித்தான் நடக்கும்' என்று கூறினார்.

Sponsored


குருவிடம் பேசியதையடுத்து அந்த சீடனுக்கு தெளிவு வந்தது. நேராக ஆசிரம வளாகத்தில், புதிதாக ஒரு மரக்கன்றை நட்டுவைத்தான். உடனே  இறைவனிடம் `இறைவா இந்த மரக்கன்றை நீரே பார்த்துக் கொள்ளும்' என்று ஒரு வேண்டுகோளையும் முன்வைத்தான் சீடன். இறைவனின் விருப்பத்துக்கே விட்டுவிட்டதால் அந்த மரக்கன்றை பெரிய மரமாக வளரச் செய்து, அது பலன் கொடுக்கவும் அருள்பாலித்தார். நம் ஒவ்வொருவருக்கும் என்னென்ன தேவை என்பது விண்ணகத்தில் உள்ள நம் தந்தையாம் இறைவனுக்குத் தெரியும். அப்படியிருக்கும்போது, ஜெபம் செய்கிறோம், வேண்டுகோள் வைக்கிறோம் என்ற பெயரில் இறைவனை நச்சரிப்பது அர்த்தமற்றதாகும் என்பதை இந்த நிகழ்வு நமக்கு எடுத்துக் காட்டுகிறது.

Sponsored


திருவிவிலியத்தில் (பைபிள்) ஆண்டவராகிய இயேசு ஜெபம் செய்வது எப்படி என்று நமக்கு நிறையவே கற்றுத்தருகிறார். அதே நேரத்தில் எப்படியெல்லாம் ஜெபிக்கக் கூடாது என்பது குறித்தும் நமக்குக் எடுத்துரைக்கிறார். பலர் நிறைய வார்த்தைகளைச் சொல்லி ஜெபிப்பதுதான் ஜெபம் என்று நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், உண்மையில் அது ஜெபமே அல்ல. வார்த்தைகளே இல்லாமலும் நாம் ஜெபிக்கலாம். நம்முடைய வேண்டுதல் இறைவனுக்கு விருப்பமானதாக இருக்கும்பட்சத்தில், அது நிச்சயமாக நிறைவேறும் என்பதில் எந்த மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை.  எப்படி ஜெபிக்கக் கூடாது என்று சொன்ன இயேசு கிறிஸ்து இப்படித்தான் ஜெபிக்க வேண்டும் என்று நமக்குக் கற்றுத்தருகிறார். 

`ஜெபம் செய்யும்போது இறைவனுக்கு முன்னுரிமை தர வேண்டும்’ என்று சொல்லும் இயேசு கிறிஸ்து அதன் பிறகு நம்முடைய தேவைகளுக்காக மன்றாடச் சொல்கிறார். நமக்குக் கிடைக்கும் அன்றாட உணவுக்காகவும் நம்முடைய குற்றங்களை இறைவன் மன்னிக்கவும்  வேண்டச் சொல்கிறார், இயேசு கிறிஸ்து. அத்துடன் தீயோனிடமிருந்து விடுவிக்க வேண்டுமாறு நம்மை வேண்டும்படி சொல்கிறார். இயேசு கற்றுத்தரும் இந்த உன்னத ஜெபத்தில் இன்னோர் ஆழமான உண்மையை நாம் கண்டுகொள்ள முடியும். அதாவது, `எங்கள்' என்ற வார்த்தைதான் அதிகமாக இடம்பிடித்திருக்கிறதே தவிர எந்த இடத்திலும் `எனது' என்ற வார்த்தையைக் காண முடியவில்லை. இவற்றைவைத்துப் பார்க்கும்போது நாம் ஜெபம் செய்யும்போது நம்முடைய குடும்பம், நமது நலனுக்காக மட்டும் ஜெபிக்காமல் எல்லோருக்காகவும் எல்லோர் நலனுக்காகவும் ஜெபிக்க வேண்டும். இவற்றை ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தான் கற்றுத் தரும் ஜெபத்தில் மிகவும் வலியுறுத்திக் கூறியுள்ளார்.

ஜெபம் செய்யும்போது, பல நேரங்களில் பிறர் மீது எந்த அக்கறையும் இல்லாமல் நம்முடைய தேவைகளை முன்னிலைப்படுத்தக்கூடியவர்களாகவே இருக்கிறோம். இத்தகைய சுயநலப்போக்கை தவிர்த்துவிட்டு எல்லோருக்கும் இடமளித்து ஜெபம் செய்வதே சிறப்பானதாக இருக்கும். ஆகவே நம்முடைய தேவைகளை இறைவன் ஏற்கெனவே அறிந்திருக்கிறார் என்பதை உணர்ந்தவர்களாக அவருக்கு நம்முடைய ஜெபத்தில் முன்னுரிமை தர வேண்டும். அப்போது நமக்காக மட்டுமல்லாமல், எல்லோருக்காகவும் ஜெபம் செய்ய வேண்டும். அதன்வழியாக இறையருள் நிறைவாகக் கிடைக்கும்.



Trending Articles

Sponsored