பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணநலன்கள், ஜோதிடப் பலன்கள்! #Astrology



Sponsored



பூரம் நட்சத்திரத்தின் அதிபதி சுக்கிரன். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சுக்கிர தசை குழந்தைப் பருவத்திலேயே வந்துவிடும். சுக்கிரனால் குழந்தைக்கு ஏற்படக்கூடிய பலன்கள் தந்தையின் மூலம் கிடைக்கும். தந்தை, கலைத்துறையில் பிரகாசிப்பதற்கான வாய்ப்பும் பணமும் புகழும் பெற்று மகிழ்ச்சியுடன் வாழும் யோகமும் உண்டாகும். பூரம் நட்சத்திரத்தில் குழந்தை பாக்கியம் பெற்ற பெற்றோர் கொடுத்துவைத்தவர் என்றுதான் சொல்ல வேண்டும்.

பூரம் நட்சத்திரத்தில் பிறந்த நீங்கள் பெண்மையின் சாயலுடன் காணப்படுவீர்கள். மற்றவர்களைக் கவரும் வசீகரத் தோற்றம்கொண்டிருப்பீர்கள். நடைமுறையில் யதார்த்தமாக இருப்பீர்கள். எதையும் எளிதாக எடுத்துக்கொள்வீர்கள். எப்போதும் எதையாவது சிந்தித்தபடி இருப்பீர்கள். அன்பான மனமும், பிறருக்கு உதவும் இரக்க குணமும் கொண்டிருப்பீர்கள். இனிமையாகப் பேசி காரியம் சாதிப்பவர்களாக இருப்பீர்கள். நடக்கப்போவதை முன்கூட்டியே அறிந்துகொண்டு அதற்குத் தகுந்தபடி செயல்படுவீர்கள். அடிக்கடி முன்கோபத்தில் வார்த்தைகளை விட்டுவிட்டு பிறகு அதற்காக வருத்தம் தெரிவிப்பீர்கள். கலைகளைக் கற்பதில் ஆர்வமுள்ளவர்களாக இருப்பீர்கள். எப்போதும் பரபரப்பாகக் காணப்படுவீர்கள். மற்றவர்களைப் பற்றிக் கவலைப்படாமல் காரியத்தில் கண்ணாக இருப்பீர்கள். எதிரிகளையும் வெற்றிகொள்ளும் வல்லமை பெற்றிருப்பீர்கள். மற்றவர்கள் தவறு செய்தால் தட்டிக் கேட்பீர்கள்.

Sponsored


எப்போதும் நேர்மைக்கும் சத்தியத்துக்கும் முக்கியத்துவம் கொடுப்பீர்கள். சுயமாக முன்னேற வேண்டும் என்று நினைத்து, அதற்காகக் கடுமையாக உழைத்து முன்னேறுவீர்கள். விதவிதமான ஆடைகளை அணிவதிலும், அடிக்கடி வாகனத்தை மாற்றுவதிலும் ஆர்வம் காட்டுவீர்கள். எல்லோரையும் அரவணைத்துச் செல்ல வேண்டும் என்று விரும்புவீர்கள். உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் தேவை என்று வந்துவிட்டால் உடனே தயங்காமல் உதவி செய்வீர்கள். மகிழ்ச்சியான வாழ்க்கை அமையப் பெற்றிருப்பீர்கள். மற்றவர்கள் செய்த உதவியை எப்போதும் மறக்க மாட்டீர்கள். ஆடம்பரமாகச் செலவு செய்வீர்கள். எப்போதும் உழைத்துக்கொண்டே இருக்க வேண்டும் என்று விரும்புவீர்கள். வெட்டிப் பேச்சு பேசி, பொழுதைக் கழிப்பவர்களைக் கண்டால் விலகி ஓடுவீர்கள். உடல்நலனில் மிகுந்த அக்கறை காட்டுவீர்கள். மற்றவர்களுக்கு கொடுத்த வாக்கை எப்படியும் காப்பாற்ற வேண்டும் என்பதில் தீவிரமாக இருப்பீர்கள். தேசாந்திரியாக ஊர் சுற்றுவதில் ஆர்வமுள்ளவர்களாக இருப்பீர்கள். ஊர் சுற்றிய அனுபவங்களைப் புத்தகமாக வெளியிட்டு, பணமும் புகழும் சம்பாதிப்பீர்கள். பாரம்பர்ய உணவு வகைகளைத் தேடிச் சென்று உண்பதில் விருப்பமுள்ளவர்களாக இருப்பீர்கள்.

Sponsored


இனி பாதவாரியான பலன்களைப் பார்ப்போம்...

பூரம் 1-ம் பாதம்

நட்சத்திர அதிபதி - சுக்கிரன்; ராசி அதிபதி - சூரியன்; நவாம்ச அதிபதி - சூரியன்.

பூரம் நட்சத்திரம் முதல் பாதத்தில் பிறந்த நீங்கள் தன்மானம் மிக்கவர்களாக இருப்பீர்கள். எந்தச் சூழ்நிலையிலும் சுயகௌரவத்தை விட்டுக்கொடுக்க மாட்டீர்கள். எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று விரும்புவீர்கள். மற்றவர்களையும் மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டும் என்று விரும்புவீர்கள். லட்சியத்துடன் வாழ்வீர்கள். மற்றவர்களின் முன்னேற்றத்துக்கு உதவி செய்வீர்கள். தெய்வப் பணிகளுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தைவிட ஏழை எளியவர்களுக்கு உதவி செய்வதே மேலான வழிபாடு என்று நினைப்பீர்கள். பிள்ளைகளைப் பலரும் பாராட்டும்படி வளர்ப்பதில் அக்கறை காட்டுவீர்கள். நவீனரக ஆடை ஆபரணங்களை வாங்கி அணிந்துகொள்ள வேண்டும் என்று விரும்புவீர்கள். வியாபாரத்தின் சூட்சுமத்தைப் புரிந்துவைத்திருப்பீர்கள். அரசாங்கத்தில் உயர்ந்த பதவி வகிக்கும் யோகசாலிகளாகவும் இருப்பீர்கள். உங்களிடம் இருப்பதை நண்பர்கள் விரும்பினால் விட்டுக்கொடுக்கத் தயங்க மாட்டீர்கள்.

பூரம் 2-ம் பாதம்

நட்சத்திர அதிபதி - சுக்கிரன்; ராசி அதிபதி - சூரியன்; நவாம்ச அதிபதி - புதன்.

பூரம் 2-ம் பாதத்துக்கு நவாம்ச அதிபதி கன்னியில் உச்சம் பெற்றிருக்கும் புதன் ஆவார். எப்போதும் மகிழ்ச்சியுடன் இருப்பீர்கள். எப்படிப்பட்ட கடினமான சூழல் ஏற்பட்டாலும், எளிதாகக் கடந்துவிடுவீர்கள். குழந்தையுள்ளம் கொண்டவர்களாக இருப்பீர்கள். ஆடம்பரத்தை விரும்ப மாட்டீர்கள். எதிலும் எளிமையாக இருக்கவே பிரியப்படுவீர்கள். கல்வி, விளையாட்டு இரண்டிலும் வெற்றிக்கொடி நாட்டுவீர்கள். தாய், தந்தையிடம் மிகுந்த அன்புடனும் மரியாதையுடனும் நடந்துகொள்வீர்கள். மனைவி, பிள்ளைகளை நேசிப்பதுடன், அவர்களுக்கு சம உரிமை கொடுப்பீர்கள். நண்பர்களைத் தேர்ந்தெடுப்பதில் மிகவும் கவனமாக இருப்பீர்கள். அரசாங்க அதிகாரிகள் மற்றும் ஆன்மிகப் பெரியோர்களின் அறிமுகம் பெற்றிருப்பீர்கள். மாற்றுச் சிந்தனையுடன் செயல்பட்டு சாதிப்பீர்கள். விவசாயத்தில் ஆர்வம் அதிகம்கொண்டிருப்பீர்கள். ஓய்வுக் காலத்திலும் ஏதேனும் செய்ய வேண்டும் என்று நினைப்பீர்கள். செய்யும் தொழிலை நன்றாகத் திட்டமிட்டுச் செய்வீர்கள்.

பூரம் 3-ம் பாதம்

நட்சத்திர அதிபதி - சுக்கிரன்; ராசி அதிபதி - சூரியன்; நவாம்ச அதிபதி - சுக்கிரன்.

பூரம் 3-ம் பாதத்துக்கு நவாம்ச அதிபதி சுக்கிரன். அழகும் கம்பீரமுமான தோற்றம் பெற்றிருப்பீர்கள். ஆடம்பரமாக வாழ வேண்டும் என்று விரும்புவீர்கள். இந்தப் பாதத்தில் பிறந்த பெண்கள் இயற்கையாகவே அழகாக இருந்தாலும், மேலும் தன்னை அழகுபடுத்திக்கொள்வதில் ஆர்வத்துடன் இருப்பீர்கள். சமூகத்தில் அனைத்துத் தரப்பினருடனும் நட்புடன் பழகுவீர்கள். உயர்வு தாழ்வு பார்க்க மாட்டீர்கள். மற்றவர்கள் சொல்வதைக் கேட்பதைவிட, உங்கள் விருப்பப்படியே நடந்துகொள்வீர்கள். உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் மதிப்பு, மரியாதையுடன் வாழ வேண்டும் என்று நினைப்பீர்கள். ஆன்மிகத்தில் அளவு கடந்த ஈடுபாடுகொண்டிருப்பீர்கள். எப்படிப்பட்ட நெருக்கடியான சூழலிலும் தவறான பாதையில் செல்ல மாட்டீர்கள். பிறர் செய்த உதவியை எப்போதும் மறக்க மாட்டீர்கள். கலைகளில் ஆர்வம்கொண்டிருப்பீர்கள். குறிப்பாக, இசையில் ஆழ்ந்த ஈடுபாடுகொண்டிருப்பீர்கள். இலக்கியங்களைப் படிப்பதிலும், கவிதை, கதை எழுதுவதிலும் திறமைகொண்டிருப்பீர்கள்.

பூரம் 4-ம் பாதம்

நட்சத்திர அதிபதி - சுக்கிரன்; ராசி அதிபதி - சூரியன்; நவாம்ச அதிபதி - செவ்வாய்.

துணிச்சலான மனம் கொண்டவர்களாக இருப்பீர்கள். எந்த விஷயத்திலும் துணிந்து முடிவெடுப்பீர்கள். அப்படி எடுக்கும் முடிவு நியாயமானதாக இருக்க வேண்டும் என்றும் விரும்புவீர்கள். நேர்மைக்கும் நியாயத்துக்கும் முக்கியத்துவம் கொடுப்பீர்கள். தவறு செய்பவர்களைத் தட்டிக் கேட்கத் தயங்க மாட்டீர்கள். ஆன்மிகத்தை வியாபாரமாக மாற்றிப் பிழைப்பவர்களைக் கண்டு கண்டிப்பீர்கள். பெற்றோரிடம் அளவு கடந்த அன்பு செலுத்துவீர்கள். அடிக்கடி எதையாவது நினைத்து மனதைக் குழப்பிக்கொண்டிருப்பீர்கள். எல்லா வசதிகளையும் பெற்று சுகமாக வாழ வேண்டும் என்று விரும்புவீர்கள். அதற்காக எத்தனை சிரமங்கள் ஏற்பட்டாலும் சமாளித்து சாதிப்பீர்கள். பிரச்னைகளை எதிர்கொள்வதில் உறுதியாக இருப்பீர்கள். பல பிரச்னைகளுக்கும் தீர்வு சொல்பவர்களாக இருப்பீர்கள். சாப்பாட்டுப் பிரியராக இருப்பீர்கள். சுவையான உணவு வகைகளை ரசனையுடன் ரசித்து உண்பவர்களாக இருப்பீர்கள்.

வழிபடவேண்டிய தெய்வம்: ஶ்ரீகாமாட்சி அம்மன், மகாலட்சுமி

அதிர்ஷ்ட ரத்தினம்: வைரம் அல்லது ஜிர்கான்

வழிபடவேண்டிய தலங்கள்: சூரியனார் கோவில், கஞ்சனூர்.



Trending Articles

Sponsored