உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணநலன்கள், ஜோதிடப் பலன்கள்! #Astrology



Sponsored



சூரியனுக்கு உரிய நட்சத்திரங்களில் இரண்டாவது நட்சத்திரம் உத்திரம். இதன் முதல் பாதம் சிம்ம ராசியிலும் மற்ற மூன்று பாதங்கள் கன்னி ராசியிலும் இடம்பெறும். வீட்டின் கூரையைத் தாங்கிப் பிடிக்கும் உத்திரத்தைப்போல் இந்த நட்சத்திரத்தில் பிறந்த நீங்கள் குடும்பப் பொறுப்பை உங்கள் தலையில் சுமப்பீர்கள். மற்றவர்களைக் கவரும் வசீகரத் தோற்றம்கொண்டிருப்பீர்கள். உங்கள் கம்பீரமான தோற்றம் எதிரிலிருப்பவர்களை மரியாதையுடன் பார்க்க வைக்கும். அளவற்ற செல்வங்களுக்கு உரியவராக இருப்பீர்கள். சிறந்த கல்வியறிவு பெற்றிருப்பீர்கள். ஆராய்ச்சி மனப்பான்மைகொண்டிருப்பீர்கள். உடல் ஆரோக்கியத்துக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுப்பீர்கள். பூர்வீகச் சொத்துகளுடன் சுயமாகவும் சொத்து சேர்ப்பீர்கள். நவீன வசதிகளுடன்கூடிய வீட்டில் வசிப்பீர்கள். புதுப் புது வாகனங்களை வாங்குவதில் ஆர்வம்கொண்டிருப்பீர்கள். உள்ளொன்று வைத்து புறமொன்று பேச மாட்டீர்கள். மற்றவர்களின் குறைகளை நேருக்கு நேராகச் சுட்டிக் காட்டித் திருத்துவீர்கள். எந்தச் சூழ்நிலையிலும் உண்மையே பேசுவீர்கள். அடிக்கடி ஏதேனும் சாப்பிட்டுக்கொண்டே இருப்பீர்கள். விவாதங்களில் எதிராளிகளை வெற்றிகொள்வீர்கள்.

இலக்கியங்களிலும் சாஸ்திரங்களிலும் தேர்ச்சி பெற்றிருப்பீர்கள். அடிக்கடி சிந்தித்துக்கொண்டே இருப்பீர்கள். ஆன்மிகத்தில் நாட்டமுடையவர்களாக இருப்பீர்கள். கலைகளை ரசிப்பீர்கள். வாழ்க்கையின் மத்திமப் பகுதியில் சகல செல்வங்களையும் பெறுவீர்கள். மற்றவர்களுக்கு உரிய மதிப்பு கொடுத்துப் பழகுவீர்கள். சிக்கனத்தைக் கடைப்பிடிப்பீர்கள். சுயகௌரவத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள். மற்றவர்கள் நலமாக இருக்க வேண்டும் என்று விரும்புவீர்கள். சமூக சேவை செய்வதில் ஆர்வம்கொண்டிருப்பீர்கள். மற்றவர்களுடைய மனம் புண்படும்படிப் பேச மாட்டீர்கள். குடும்பத்தினரிடமும் நண்பர்களிடமும் மிகுந்த பாசம்கொண்டிருப்பீர்கள். ஆடம்பரமாகச் செலவு செய்வதை விரும்ப மாட்டீர்கள். பெண் நண்பர்களை அதிகம் பெற்றிருப்பீர்கள். வஞ்சக எண்ணத்துடன் பழகுபவர்களை இனம் கண்டு ஒதுங்கிவிடுவீர்கள். மற்றவர்களிடம் வேலை செய்வதைவிட, சொந்தமாக நிறுவனம் அமைத்து மற்றவர்களுக்கு வேலை தர நினைப்பீர்கள். உங்களிடம் பணிபுரியும் ஊழியர்களுக்கு நல்ல சம்பளமும் நிறைய சலுகைகளும் கொடுப்பீர்கள்.

Sponsored


Sponsored


இனி பாதவாரியான பலன்களைப் பார்க்கலாம்...

உத்திரம் 1-ம் பாதம்

நட்சத்திர அதிபதி - சூரியன்; ராசி அதிபதி - சூரியன்; நவாம்ச அதிபதி - குரு

வசதியான வாழ்க்கையைப் பெற்றிருப்பீர்கள். தான், தன் வீடு மட்டும் சுத்தமாக இருந்தால் போதாது என்று நினைப்பீர்கள். மற்றவர்களும் சுத்தமாக இருக்க வேண்டும் என்று நினைப்பீர்கள். எந்த ஒரு செயலைச் செய்தாலும் மிகவும் நேர்த்தியாகச் செய்வீர்கள். அரசாங்கத்தில் உயர்ந்த அந்தஸ்துள்ள பதவியில் அமரக்கூடிய அளவுக்கு தகுதியும் திறமையும் பெற்றிருப்பீர்கள். தவறான பாதைக்குச் செல்ல மாட்டீர்கள். மற்றவர்கள் தவறு செய்தால் தட்டிக் கேட்கவும் தயங்க மாட்டீர்கள். முக்கியப் பிரமுகர்களுடன் இருப்பதையே விரும்புவீர்கள். அதன் மூலம் மற்றவர்கள் உங்களைப் பற்றிப் பெருமையாகப் பேச வேண்டுமென்று நினைப்பீர்கள். பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதிலும், பொது நிகழ்ச்சிகளுக்கு உதவி செய்வதிலும் ஆர்வத்துடன் இருப்பீர்கள். மற்றவர்களுக்கு உதவி செய்தாலும், அதற்குப் பதிலாக எதையும் எதிர்பார்க்க மாட்டீர்கள். மற்றவர்களை அரவணைத்துச் செல்வீர்கள். அடிக்கடி புராதனமான கோயில்களுக்குச் செல்ல நினைப்பீர்கள். இறைவனை வழிபடுவதுடன் சிற்பங்களையும் ரசிப்பீர்கள்.

உத்திரம் 2-ம் பாதம்

நட்சத்திர அதிபதி - சூரியன்; ராசி அதிபதி - புதன்; நவாம்ச அதிபதி - சனி

எதிலும் பொறுமையைக் கடைப்பிடிப்பவர்களாக இருப்பீர்கள். சவாலான காரியங்களையும் சர்வ சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். எதையும் கலைநயத்துடன் பார்ப்பீர்கள். அறிமுகமில்லாதவர்களிடம்கூட கலகலப்பாகப் பேசிப் பழகுவீர்கள். அடிக்கடி கற்பனையில் மூழ்கிவிடுவீர்கள். கவிதை, கதை எழுதுவதில் ஆர்வம்கொண்டிருப்பீர்கள். எதிலும் பிடிவாதமாக இருப்பீர்கள். பழைய நாணயங்கள், கலைப்பொருள்கள் ஆகியவற்றைச் சேகரிக்க விரும்புவீர்கள். எப்போதும் மற்றவர்களின் நலனை சிந்திப்பவர்களாக இருப்பீர்கள். காதலில் வெற்றி கிடைக்கும் என்று சொல்வதற்கில்லை. திருமணத்துக்குப் பிறகும் அடிக்கடி கடந்துபோன காதலை நினைத்துக்கொண்டிருப்பீர்கள். பணத்தைப் பெரிதாகப் பொருட்படுத்த மாட்டீர்கள். வசிக்கும் வீடு சொந்த வீடாக இருந்தாலும், வாடகை வீடாக இருந்தாலும் கலைநயத்துடன் இருக்க வேண்டுமென்று நினைப்பீர்கள். சொந்தமாக நிறுவனங்கள் ஏற்படுத்தி பலருக்கும் வேலை கொடுப்பீர்கள்.

உத்திரம் 3-ம் பாதம்

நட்சத்திர அதிபதி - சூரியன்; ராசி அதிபதி - புதன்; நவாம்ச அதிபதி - சனி

உத்திரம் 3-ம் பாதத்துக்கு நவாம்ச அதிபதி கும்ப சனி ஆவார். நீதிக்கும் நேர்மைக்கும் முக்கியத்துவம் கொடுப்பீர்கள். எப்படிப்பட்ட நெருக்கடியான சூழ்நிலையிலும் உண்மையை மட்டுமே பேசுவீர்கள். பொய் பேசுபவர்களைக் கண்டால் அவர்களுடன் பழகுவதை தவிர்ப்பீர்கள். ஆசார அனுஷ்டானங்களைக் கடைப்பிடிப்பதில் தீவிரமாக இருப்பீர்கள். கடினமாக உழைப்பீர்கள். மனைவி மற்றும் பிள்ளைகளை மிகவும் நேசிப்பீர்கள். அவர்களுக்கு முழு சுதந்திரம் தருவீர்கள். அதேபோல் உங்கள் கொள்கை, விருப்பம் போன்றவற்றை மற்றவர்களுக்கு விட்டுத் தர மாட்டீர்கள். எப்போதும் அமைதியாகக் காணப்படுவீர்கள். பொதுநலம் கருதி சிந்திப்பீர்கள். இனிப்பு வகைகளை விரும்பிச் சாப்பிடுவீர்கள். சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தை அடைவீர்கள். அனுபவங்களின் காரணமாக இளமையிலேயே மனமுதிர்ச்சி பெற்றிருப்பீர்கள். ஆதரவற்ற ஏழைகளுக்கு முடிந்த உதவி செய்து மகிழ்வீர்கள்.

உத்திரம் - 4-ம் பாதம்

நட்சத்திர அதிபதி - சூரியன்; ராசி அதிபதி - புதன்; நவாம்ச அதிபதி - குரு

கல்வி, கேள்விகளில் தேர்ச்சிபெற்றிருப்பீர்கள். மற்றவர்கள் செய்த உதவியை மறக்க மாட்டீர்கள். தாயிடம் அதிக அன்புகொண்டிருப்பீர்கள். கொண்ட கொள்கையில் கொஞ்சமும் சமரசம் செய்துகொள்ள மாட்டீர்கள். சில நேரங்களில் கோபத்தில் கடுமையாகப் பேசிவிட்டு, பிறகு அதற்காக வருந்துவீர்கள். எப்போதும் சுறுசுறுப்பாக எதையாவது செய்தபடி இருப்பீர்கள். நேர்மையாக வாழ வேண்டுமென்று நினைப்பீர்கள். தேசப்பற்று மிக்கவர்களாக இருப்பீர்கள். சார்ந்திருக்கும் இனத்தின் முன்னேற்றத்துக்கு எதையாவது செய்ய வேண்டும் என்று நினைப்பீர்கள். குடும்பத்திடம் மிகுந்த அன்பும் அக்கறையும்கொண்டிருப்பீர்கள். அடிக்கடி வெளியில் சென்று சாப்பிட விரும்புவீர்கள். எந்தக் காரியத்தை எடுத்துக்கொண்டாலும் அதை மிகவும் நேர்த்தியாக மற்றவர்கள் பாராட்டும்விதமாகச் செய்து முடிப்பீர்கள். பிரபல நிறுவனங்களிலும் அமைப்புகளிலும் கௌரவப் பதவிகளை வகிப்பீர்கள்.

வழிபட வேண்டிய தெய்வம்: ஶ்ரீமகாலட்சுமி, ஆஞ்சநேயர்

அணிய வேண்டிய ரத்தினம்: மரகதம்

வழிபட வேண்டிய தலங்கள்: திருச்சானூர், சூரியனார் கோவில்.



Trending Articles

Sponsored