`இயேசு ஓர் உண்மையான பரிவுள்ளம்கொண்ட ஆயர்!' - பைபிள் கதைகள் #BibleStoriesSponsoredசாலையோரமாக இருந்த மரத்தடி நிழலில் சிறுவன் ஒருவன் அமர்ந்திருந்தான். அவனுடைய கையில் அப்போதுதான் மேலிருந்து கீழே தவறி விழுந்து, சிறகு முறிந்துபோன ஒரு பறவை இருந்தது. சிறுவன் தன் கையிலிருந்த அந்த சிறகு முறிந்துபோன பறவையை வாஞ்சையோடு தடவிக்கொண்டிருந்தான்.


சிறிது நேரம் கழித்து அந்த வழியாக பெண்மணி ஒருவர் வந்தார். இயல்பிலேயே இரக்ககுணம் நிறைந்த அவர், மரத்தடியில் சிறுவன் அமர்ந்திருப்பதையும் அவனுடைய கையில் சிறகு முறிந்துபோன பறவை இருப்பதையும் கண்டார். சிறுவனின் அருகே சென்ற அந்தப் பெண், ``தம்பி! உன் கையிலிருக்கும் சிறகு முறிந்துபோன இந்தப் பறவையை என்னிடம் தருகிறாயா? அதை நான் வீட்டுக்குக் கொண்டுபோய், அதற்கு மருத்துவம் பார்த்து, அது குணமடைந்ததும் உன்னிடமோ அல்லது இங்கிருக்கும் காட்டிலோ விட்டுவிடுகிறேன்’’ என்றார். அதற்கு அந்தச் சிறுவன் அவரிடம், ``வேண்டாம் அம்மா! இந்தப் பறவையை நானே பார்த்துக்கொள்கிறேன், ஏனென்றால், இந்தப் பறவையை என்னைவிட சிறப்பாக வேறு யாராலும் கவனித்துக்கொள்ள முடியாது’’ என்றான்.

Sponsored


``உன்னைப்போல அந்தப் பறவையை வேறு யாராலும் அவ்வளவு சிறப்பாகக் கவனித்துக்கொள்ள முடியாது என்று எதை வைத்துச் சொல்கிறாய்’’ என்று அவர் கேட்க, சிறுவன் மெல்ல எழுந்து நின்றான். அப்போதுதான் அந்தச் சிறுவனின் ஒரு கால் ஊனம் என்பதை அவர் கவனித்தார். அவருக்குக் கண்களில் கண்ணீரே வந்துவிட்டது. இருந்தாலும் அதை அடக்கிக்கொண்டு, ``ஆமாம் தம்பி! நீ சொல்வதும் சரிதான். இந்தப் பறவையை உன்னைவிட வேறு யாராலும் அவ்வளவு சிறப்பாகக் கவனித்துக்கொள்ள முடியாது’’ என்று சொல்லிவிட்டு, அங்கிருந்து நகர்ந்து சென்றார்.

Sponsoredமேலே சொல்லப்பட்ட நிகழ்வில், அந்தச் சிறுவன் சிறகு முறிந்துபோன பறவையின் துயரத்தைத் தன்னுடைய துயரமாகப் பார்த்தான். அதனால்தான் அந்தப் பறவையை தானே கவனித்துக்கொள்வது என்று முடிவு செய்தான். ஓர் உண்மையான மனிதனுக்கு அல்லது தலைவனுக்கு இருக்கவேண்டிய முதன்மையான தகுதி துன்புறும் சக மனிதனின் துன்பத்தை தன்னுள் ஏற்று, அவனுடைய துன்பத்தை இன்பமாக மாற்ற முயலுவதே. ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து, மக்களின் துன்பத்தைத் தன்னுடைய துன்பமாகவே பார்த்தார். அது மட்டுமல்லாமல், அவர்களுடைய துன்பத்தை, அவல நிலையைப் போக்க இறப்பதற்கும் துணிந்தார். இப்படி இயேசு பரிவுள்ளம்கொண்ட நல்லாயனாகத் திகழ்ந்தார். 

இது போன்றச் சூழலில் இன்னொன்றை நாம் கவனிக்க வேண்டும். அதாவது, இயேசுவால் பணித்தளங்களுக்கு அனுப்பப்பட்ட திருத்தூதர்கள் அவரிடம் வந்து, தாங்கள் செய்தவை, கற்பித்தவை அனைத்தையும் ஆண்டவரிடம் எடுத்துக் கூறுகிறார்கள். உடனே இயேசு அவர்களிடம், ``நீங்கள் பாலை நிலத்திலுள்ள தனிமையான ஓர் இடத்துக்குச் சென்று, சற்று ஓய்வெடுங்கள்’’ என்கிறார். இங்குதான் நாம் இயேசுவின் பரிவுள்ளத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். மற்றவர்களாக இருந்திருந்தால் ஏற்கெனவே சோர்வாகவும் களைப்பாகவும் இருந்த சீடர்களுக்கு மேலும் வேலைகளைக் கொடுத்து, அவர்களைத் தொல்லைப்படுத்தியிருப்பார்கள். ஆனால், இயேசு கிறிஸ்து அப்படிச் செய்யவில்லை. அவர் அவர்களிடம் ஓய்வெடுக்கச் சொல்கிறார். அதன் மூலம் இயேசு தன் சீடர்கள் மீது உண்மையான பரிவைக் காட்டுகிறார்.

இயேசு தன்னுடன் வாழ்ந்த சீடர்கள் மீது மட்டும் பரிவு காட்டவில்லை. உலகத்தார் மீதும் / மக்கள் மீதும் பரிவு காட்டினார். இயேசுவும் அவருடைய சீடர்களும் தனிமையான ஓர் இடத்துக்கு ஓய்வெடுக்கச் சென்றபோது, மக்கள் அவர்கள் இருக்கும் இடத்துக்கு வந்து சேர்கிறார்கள். ஓய்வெடுக்க வந்த இடத்தில் மக்கள் இப்படித் தொந்தரவு செய்கிறார்களே என இயேசு நினைக்கவில்லை, மாறாக, அவர்கள்மீது பரிவுகொண்டு அவர்களுக்குப் பலவற்றையும் கற்பிக்கிறார். ஏனென்றால், ஆயன் இல்லாத ஆடுகளைப்போல அவர்கள் இருந்தார்கள்.


`ஆயன் இல்லா ஆடுகளின் நிலை' என்பது மிகவும் கொடியது. ஏனென்றால், ஆயனில்லாத நிலையில் ஆடுகள் கேட்பாரற்றுக் கிடக்கும். அதோடு, எந்த நேரத்திலும் எதிரிகளின் தாக்குதலுக்குள்ளாகும். எல்லாவற்றையும்விட, ஆடுகளின் வாழ்வே கேள்விக்குள்ளாகிவிடும். இஸ்ரவேல் மக்கள் ஆயனில்லா ஆடுகளைப்போல இருந்ததால், அவர்கள் சந்தித்த துன்ப, துயரங்கள், கஷ்டங்கள் ஏராளம். 
``என் மேய்ச்சலுக்குட்பட்ட ஆடுகளை அழித்துச் சிதறடிக்கும் மேய்ப்பர்களுக்கு ஐயோ கேடு, நீங்கள் என் மந்தையைச் சிதறடித்துவிட்டீர்கள்; அதனைத் துரத்தியடித்துவிட்டீர்கள்; அதைப் பராமரிக்கவில்லை. இதோ உங்கள் தீச்செயல்களின் காரணமாக உங்களைத் தண்டிக்கப்போகிறேன்' என்கிறார் இயேசு கிறிஸ்து. இஸ்ரவேல் மக்கள், லாபத்தை மட்டுமே கணக்கில்கொண்டு செயல்பட்ட போலியான ஆயர்களால் சரியாகப் பராமரிக்கப்படவில்லை. அவர்கள் நன்றாக வழிநடத்தப்படவும் இல்லை. மாறாக அவர்கள் சிதறடிக்கப்பட்டார்கள்; துரத்தியடிக்கப்பட்டார்கள். இதனால் மக்களுடைய வாழ்வு கேள்விக்குறியானது. இயேசுவுக்கு முன்பாக இருந்த ஆயர்களைக் குறித்துச் சொல்ல வேண்டுமென்றால், அவர்கள் ஆடுகளாகிய மக்கள் மீது உண்மையான அக்கறை இல்லாமல் இருந்தார்கள்.

இயேசு, அவருக்கு முன்பிருந்த ஆயர்களைப் போன்றவர் இல்லை. அவர் ஆடுகளின் மீது உண்மையான அக்கறைகொண்டிருந்தார். அதோடு, அவர்கள் மீது பரிவுகொண்டு அவர்களுக்கு பலவற்றைக் கற்பித்து, அவர்களை ஆண்டவர் பக்கம் கொண்டு வந்தார். பவுலடியார் கூறுவதுபோல, மக்களுக்காக, மந்தைக்காக துன்பங்களைத் தன்னுடைய உடலில் ஏற்றுக்கொண்டு, அவர்களுடைய மீட்புக்குக் காரணமாக இருந்தார். இப்படி இயேசு ஓர் உண்மையான பரிவுள்ளம்கொண்ட ஆயராகத் திகழ்கிறார்.

இயேசு பரிவுள்ளம் கொண்டவராக இருக்கின்றார் என்று சிந்தித்த நாம், அவரைப்போல நம்முடன் வாழ்பவர்களிடம், நாம் சந்திக்கின்ற எளியவர், வறியவர் மீது பரிவுகொண்டு வாழ்கிறோமா? என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். பல நேரங்களில் அடுத்தவரைக் குறித்த அக்கறை சிறிதளவும் நமக்கு இருப்பதில்லை என்பது வேதனையான விஷயம். ஆகவே, நம் ஆண்டவர் இயேசுவைப்போல பரிவுள்ளம்கொண்டவர்களாக வாழ்வோம். அதன் வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்!Trending Articles

Sponsored