சங்கரநாராயணர் கோயிலில் தபசுக் காட்சி! - லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்Sponsoredசங்கரன்கோவில் உள்ள சங்கரநாராயணர்-கோமதி அம்பாள் திருக்கோயிலின் ஆடித்தபசு திருவிழா விமரிசையாக நடைபெற்றது. இந்த விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

சைவத் திருத்தலங்களில் முக்கியத்துவம் வாய்ந்த திருத்தலமாகக் கருதப்படும் சங்கரநாராயணர் -கோமதி அம்பாள் திருக்கோயிலில், அரியும் சிவனும் ஒன்றே என்ற உயரிய தத்துவத்தை விளக்கும் வகையில் ஆடித் தபசு திருவிழா நடைபெற்றது. இதில், லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு, பக்தி கோஷங்கள் முழங்க சுவாமி தரிசனம் செய்தனர்.  

Sponsored


இந்த ஆண்டுக்கான தபசுக் காட்சி திருவிழா, கடந்த 17-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 12 நாள்கள் நடக்கும் திருவிழாவில் ஒவ்வொரு நாளும் கோமதி அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.  நாள்தோறும் மண்டகப்படிதாரர்கள் மூலமாக பக்திச் சொற்பொழிவு, கலை நிகழ்ச்சிகள், இசைக் கச்சேரி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

Sponsored


இந்த நிலையில், விழாவின் 11-ம் நாள் திருவிழா, இன்று முக்கிய நிகழ்ச்சியாக தபசுக் காட்சி விழா நடைபெற்றது. இதையொட்டி, கோமதி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் செய்யப்பட்டு, பிற்பகல் 12.05 மணிக்கு தங்கச்சப்பரத்தில் எழுந்தருளி, கோயிலில் இருந்து புறப்பட்டு தெற்கு ரதவீதியில் உள்ள தபசு மண்டபத்தில் தவக்கோலத்தில் வீற்றிந்தார்.  

மாலையில், சுவாமி ரிஷப வாகனத்தில் கோயிலிலிருந்து புறப்பட்டு, தவக்கோலத்தில் இருக்கும் கோமதி அம்பாளுக்கு சங்கரநாராயணராகக் காட்சிகொடுத்தார். சுவாமி, அம்பாளுக்கு மாலை மாற்றப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அப்போது, பக்தர்கள் பக்தி கோஷங்கள் முழங்கியபடி பக்திப்பரவசத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர். தபசு நிகழ்ச்சியில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமி, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் வளர்மதி, மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அருண் சக்திகுமார் ஆகியோர் கலந்துகொண்டனர். 

சைவமும் வைணவமும்  ஒன்று என உலகிற்கு உணர்த்திய இந்த தபசுக் காட்சியைக் காண நெல்லை மாவட்டம் மட்டும் அல்லாது பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் சங்கரன்கோவிலில் குவிந்திருந்தனர். விழாவையொட்டி பல்வேறு பகுதிகளில் இருந்தும் சங்கரன்கோவிலுக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன. பாதுகாப்புக் காரணம் கருதி, ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இன்று சந்திரகிரகணம் நடப்பதால், இரவு 10 மணிக்குள் உற்சவர்கள் கோயிலுக்குள் வர வேண்டும் என்பதால், கோமதி அம்பாளுக்கு சங்கரலிங்கமாகக் காட்சியளிக்கும் நிகழ்ச்சியும் முன்கூட்டியே நடைபெறும் என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.Trending Articles

Sponsored