ஈஸ்வரனின் திருவடிவம், ஆதி ஆசிரியன் ஸ்ரீதட்சிணாமூர்த்தியின் மகிமைகள்! #VikatanPhotoStoryஅறியாமை என்னும் இருளை அகற்றுபவர் குரு. ஒருவன் நல்ல குருவை அடைந்தால் அவன் மனதிலுள்ள அறியாமை விலகும். இறைவனே குருவாக சனகாதி முனிவர்களுக்கு ஞானோபதேசம் செய்யும் திருவடிவம்தான் தட்சிணாமூர்த்தி  திருவடிவம். மோனமாக இருந்து ஞானம் உபதேசிக்கும் ஸ்ரீதட்சிணாமூர்த்தியின் மகிமைகளைப் பார்க்கலாமா..? 

Sponsored


எல்லாமுமாக விளங்கும் ஈசனின் 64 சிவ வடிவங்களில் பழைமையானது தட்சிணாமூர்த்தி வடிவம். 'தென்முகக்கடவுள்', 'ஆலமர்ச்செல்வன்', 'விரிசடைப் பெரியோன்', 'ஞானக்கிழவோன்'... என்றெல்லாம் இலக்கியங்கள் போற்றி வழிபடும் உலகின் ஆதி ஆசிரியன் தட்சிணாமூர்த்தி.

Sponsored


Sponsored


பொதுவாக எல்லா சிவாலயங்களிலும், கருவறையின் வெளிச்சுற்றில், தென்பக்க கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி சந்நிதி காணப்படும். குருப்பெயர்ச்சியின்போது தட்சிணாமூர்த்தியை வழிபடுகிறார்கள். அது சரியல்ல... குரு, நவகிரகங்களில் ஒருவர். தட்சிணாமூர்த்தி ஈஸ்வரனின் திருவடிவம்.

பஞ்ச குணங்கள் கொண்ட ஈஸ்வரனின் ரூபங்களில் தட்சிணாமூர்த்தி சாந்த வடிவம்கொண்டவர். பிரம்ம குமாரர்களான சனகாதி முனிவர்களின் அஞ்ஞானத்தை விலக்க, தென்திசை நோக்கி குருவாக அமர்ந்தவர் இவர். `முயலகன்’ எனும் அஞ்ஞான வடிவைக் காலில் அழுத்தியவாறே தட்சிணாமூர்த்தி அருட்காட்சி தருவார். 

அஞ்ஞானம் விலக விலக சனகாதி முனிவர்களின் கேள்விகள் அதிகரித்தன. இதனால் இறுதியாக சின்முத்திரை காண்பித்து அருளினார் தட்சிணாமூர்த்தி. அந்த முத்திரையில் எல்லாக் கேள்விகளுக்கும் பதில் இருந்ததை உணர்ந்த முனிவர்கள் அமைதியும் ஆனந்தமும் அடைந்து ஞானம் பெற்றனர்; கேள்விகளும் நின்றன.

தியான நிலையில் நான்கு கரம் கொண்டு அமர்ந்திருப்பார் தட்சிணாமூர்த்தி. மேல் கரம் ருத்திராட்ச மாலை அல்லது ஒரு பாம்பைத் தாங்கியிருக்கும். மற்றொரு மேல் கரம் நெருப்பை ஏந்தியிருக்கும். கீழ் இடது கரம் தர்ப்பைப் புல் அல்லது ஓலைச்சுவடியையும், கீழ் வலது கரம்  ஞான முத்திரையையும் காட்டும். 

`சின்முத்திரை’ என்பது ஞானத்தின் குறியீடு, கட்டைவிரலின் அடிப்பாகத்தைச் சுட்டுவிரல் தொடும். மற்ற மூன்று விரல்களும் விலகி நிற்கும் அற்புத முத்திரை இது. கட்டைவிரல் பரமாத்மாவையும், சுட்டுவிரல் ஜீவாத்மாவையும், விலகி நிற்கும் மூன்று  விரல்களில் நடுவிரல் ஆணவத்தையும், மோதிரவிரல் கண்மத்தையும், சுண்டுவிரல் மாயையையும் குறிப்பவை. அதாவது, ஜீவாத்மா பரமாத்மாவை சரணடைந்துவிட்டால், மும்மலங்களும் விலகும் என்பதே  இம்முத்திரையின் தத்துவம்.

பொதுவாக தென்திசை நோக்கி இவர் அருளினாலும், திங்களூரில் கிழக்கு திசை நோக்கியும், வைத்தீஸ்வரன் கோயிலில் மேற்கு திசை நோக்கியும், திருவொற்றியூர் ஆதிபுரீஸ்வரர் கோயிலில் வடக்கு திசை நோக்கியும் அமர்ந்திருக்கிறார். 

யோக தட்சிணாமூர்த்தி, ஞான (மேதா) தட்சிணாமூர்த்தி, வீணா தட்சிணாமூர்த்தி, போக தட்சிணாமூர்த்தி... எனப் பல வடிவங்களில் ஆலயங்களில் காட்சி தருவார். வணங்கிடும் பக்தர்களின் தீய குணங்களை ஒடுக்கி, அவர்களுடைய இதயத் தாமரையில் எழுந்தருளுவார்.

வியாழக்கிழமைகளில் விரதமிருந்து தம்மை வழிபடுபவர்களுக்கு, ஞானம், தெளிவான சிந்தனை, கலைகளில் தேர்ச்சி, உயர் பதவி போன்றவற்றை அருள்பவர் தட்சிணாமூர்த்தி. சிந்தனை தெளிவானால் மற்ற செல்வங்கள் எல்லாம் தானாக வந்துசேரும்தானே!

மஞ்சள் ஆடை அணிவித்து, கொண்டைக்கடலை மாலை சாத்தி, முல்லைப்பூ தூவி, மௌன விரதமிருந்து இந்த மூர்த்தியை வணங்கினால் எல்லா சம்பத்துகளும் அருளி வாழ்விப்பார் என ஆன்மிகப் பெரியோர்கள் கூறுகின்றனர். 

வால்மீகி ராமாயணத்தில் உள்ள சுந்தர காண்டத்தின் 11-வது அத்தியாயத்தைப் படிப்பதும், தட்சிணாமூர்த்தி ஸ்லோகங்களைப் பாராயணம் செய்வதும் நல்லது. பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் இவரை வணங்குவது மிகவும் விசேஷமானது. Trending Articles

Sponsored