தீர்க்க முடியாத பிரச்னைகளைத் தீர்த்துவைக்கும் திருவாமாத்தூர் திருவட்டப்பாறை!



பொய் சத்தியம் செய்தாலோ, பொய்சாட்சி சொன்னாலோ என்ன நடக்கும்? நீதிமன்றத்தின் மூலமோ அல்லது தெய்வ சக்தியின் மூலமோ அவருக்குத் தண்டனை கிடைத்துவிடும். ஆனால், ஒருவன் செய்த பொய் சத்தியத்தின் காரணமாக, ஓர் அம்மனின் திருவுருவத்தில் பாம்பின் வால் அமைந்திருக்கும் சம்பவமும் உண்டு. அந்தச் சம்பவம் நடைபெற்ற தலம்தான் திருவாமாத்தூர் அருள்மிகு அபிராமேஸ்வரர் திருக்கோயில். அந்தக் கோயிலில் இருக்கும் முத்தாம்பிகை சந்நிதிதான், ஒருவன் செய்த பொய் சத்தியத்தின் காரணமாக ஏற்பட்டது. 

Sponsored


தெய்வ நம்பிக்கை மிகுந்திருந்த அந்தக் காலத்தில் அரசர்களால் தீர்க்க முடியாத வழக்குகளையும் தீர்ப்பதற்கென்று ஒரு நடைமுறை வைத்திருந்தனர். அதன்படி இறைவனின் ஆலயத்துக்கு வந்து சத்தியம் செய்யச் சொல்வார்கள். சில கோயில்களில் சத்தியம் செய்வதற்கென்று திருவட்டப்பாறை என்று ஒன்று இருக்கும். அந்தத் திருவட்டப்பாறையில் கை வைத்து சத்தியம் செய்துவிட்டால், வழக்கும் முடிவுக்கு வந்துவிடும். அந்தத் திருவட்டப்பாறைக்கு முன்பாக எவரும்  பொய் சத்தியம் செய்யமாட்டார்கள் என்ற நம்பிக்கை நிலவிய காலம் அது. அப்படியொரு திருவட்டப்பாறை விழுப்புரம் மாவட்டம் திருவாமாத்தூர் அருள்மிகு அபிராமேஸ்வரர் கோயிலிலும் உள்ளது.

Sponsored


அந்தக் கோயிலில் நாம் தரிசிக்கும் முத்தாம்பிகையின் பின்னணியில் சொல்லப்படும் கதை இது.

Sponsored


அக்காலத்தில் அந்தப் பகுதியை ஆட்சி செய்து வந்த மன்னரின் முன்பு ஒரு வழக்கு வந்தது. அண்ணன் - தம்பிக்கிடையே சொத்து சம்பந்தமாக இருந்த வழக்கு அது. தம்பிக்குச் சேர வேண்டிய சொத்தைத் தராமல், சொத்துகள் அனைத்தையும் விற்று தங்க நாணயங்களாக மாற்றி அவற்றை ஒரு மூங்கில் தடியில் மறைத்து வைத்துவிட்டான் அண்ணன். நீதி கேட்டு அரசரிடம் சென்றான் தம்பி. அரசர் விசாரித்தபோது, `சொத்துகள் எதுவும் இல்லை' என்று ஒரேயடியாகச் சாதித்துவிட்டான் அண்ணன். அரசருக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. அப்போதுதான் அவருக்கு ஒரு யோசனை தோன்றியது. அதன்படி அண்ணனிடம், `மறுநாள் காலையில் திருவாமாத்தூர் கோயிலுக்கு வந்து திருவட்டப்பாறை மீது கை வைத்து சத்தியம் செய்யும்படி'க் கூறினார்.

அரசர் கூறியபடியே மறுநாள் தம்பியுடன் கோயிலுக்கு வந்த அண்ணன், தன் கையிலிருந்த தடியை தம்பியின் கையில் கொடுத்துவிட்டு, திருவட்டப்பாறை மீது கைகளை வைத்து, ``எனக்கு உரிய சொத்துகளையும் தம்பிக்கு உரிய சொத்துகளையும் தம்பியிடமே கொடுத்துவிட்டேன்'' என்று பொய் சத்தியம் செய்தான். 

பிறகு, தன் தம்பி கையில் கொடுத்திருந்த தடியை வாங்கிக்கொண்டு திரும்பினான். தன் நண்பர்களிடம், ``பார்த்தீர்களா, திருவட்டப்பாறையாம், சத்தியமாம்! இதோ நான் இப்போது பொய் சத்தியம்தான் செய்துவிட்டேன். எனக்கு என்ன ஆகிவிட்டது?'' என்று எகத்தாளமாகப் பேசினான். 

'அரசன் அன்றே கொல்வான்; தெய்வம் நின்று கொல்லும்' என்று சொல்வார்கள். ஆனால், அந்த அண்ணனின் அகந்தைப் பேச்சு பொறுக்கமாட்டாமல் அன்றே அவனைக் கொல்ல தெய்வம் முடிவு செய்துவிட்டது போலும். ஆம். பொய் சத்தியம் செய்த அண்ணனைக் கொல்ல ஒரு பெரிய  நாகம் புற்றுக்குள்ளிருந்து வெளிப்பட்டு வந்தது. பாம்புக்கு அஞ்சிய அண்ணன், வேகமாக ஓடத் தொடங்கினான். ஒரு கட்டத்தில் பாம்பு அவனைத் தீண்டிவிட்டது. அவன் இறந்துவிட்டான். அண்ணன் பொய் சத்தியம் செய்ததை அறியாத தம்பி, இறந்துவிட்ட அண்ணனுக்கு உரிய கிரியைகளைச் செய்துவிட்டு, அண்ணன் வைத்திருந்த தடியை எடுத்தான். அதற்குள் ஏதோ கலகலவென்று சத்தம் கேட்கவே, தடியை உடைத்துப் பார்த்தான். உள்ளே தங்கக் காசுகள் நிறைந்திருந்தன. அப்போதுதான் அவனுக்கு அண்ணனின் வஞ்சக குணமும், திருவட்டப்பாறையில் பொய் சத்தியம் செய்ததன் காரணமாகவே அவன் பாம்பு தீண்டி இறக்க நேரிட்டதும் தெரிய வந்தது.

பொய் சத்தியம் செய்த அண்ணனைக் கொல்லத் துரத்திய நாகத்தின் தலைப்பகுதி தும்பூரிலும் உடல் பகுதி அவனைத் துரத்தி வந்த வயல்பகுதியிலும், வால் பகுதி திருவாமாத்தூர் அபிராமேஸ் வரர் கோயிலில் அருளும் ஈஸ்வரன் கழுத்திலும் விழுந்தது. பொய் சத்தியம் செய்தவனைத் தீண்டியதால் தனக்கு ஏற்பட்ட பாவத்தை நீக்கிக்கொண்டு, கோயிலில் உள்ள முத்தாம்பிகையின் திருமேனியில் ஐக்கியமாகிவிட்டது. முத்தாம்பிகைக்கு அணிவிக்கும் வெள்ளிக் கவசத்தில் நாகத்தின் வால் பகுதியை இன்றும் நாம் தரிசிக்கலாம்.

நாகத்தின் தலைப் பகுதி, தும்பூர் தாங்கலில் நாகாத்தம்மன் என்ற பெயரில் தோன்றி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறாள். நடுப்பகுதி சற்றுத் தள்ளி உள்ள வயலில் சிறிய கீற்றுக் கொட்டகையில் அருவமாக இருந்து அருள்பாலிப்பதாக ஐதிகம். 

திருவாமாத்தூர் திருவட்டப்பாறையில் சிவபெருமான் லிங்கேஸ்வரர் என்ற பெயரில் அருவமாகக் காட்சி தருகிறார் என்பது ஐதிகம். திருவட்டப்பாறையில் அருவமாக இருக்கும் லிங்கேஸ்வரரை தரிசித்தால், தீராத சிக்கல்களும் தீரும். அண்ணன் - தம்பிகளுக்கிடையே இருக்கும் சொத்துப் பிரச்னைகளும் நீங்கும் என்பது நம்பிக்கை. பொய் சத்தியம் செய்தவனைக் கொன்று தர்மத்தை நிலைநாட்டிய முத்தாம்பிகையை வழிபட்டு, அனைத்து நன்மைகளையும் பெறுவோம்.

திருவண்ணாமலை -செஞ்சி சாலையில் இரண்டு கி.மீ. தொலைவில் இடப்புறமாகப் பிரியும் சாலையில் சுமார் 6 கி.மீ. தூரம் பயணித்தால், அருள்மிகு அபிராமேஸ்வரர் திருக்கோயிலை அடையலாம். 



Trending Articles

Sponsored