நாளை ஆடி அமாவாசை: முன்னோர்களுக்குத் தர்ப்பணம் கொடுத்து வழிபட சிறந்த நாள்...Sponsoredறைந்த நமது முன்னோர்களுக்கு அமாவாசை தினங்களில் தர்ப்பணம் கொடுத்து வழிபடுவது நமது பழக்கம். குறிப்பாக ஆடி, புரட்டாசி, தைமாதங்களில் வரும் அமாவாசை தினங்களில் முக்கியமான நீர் நிலைகளில் புனித நீராடி, மறைந்த தங்களின் முன்னோர்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்து தர்ப்பணம் கொடுக்க வேண்டும்.


ஆடி முதல் மார்கழி முடிய உள்ள காலம் தேவர்களுக்கு இரவுக் காலம். ஆதலால் நம்முடைய முன்னோர்கள் நமக்குக் காவலாக நம் உலகத்துக்கு வருகின்றனர் என்பது ஐதிகம். அவர்கள் பித்ரு லோகத்திலிருந்து புறப்படும் நாள் ஆடி அமாவாசை. எனவே, அவர்களைப் பூமிக்கு வரும்படி அழைப்பு விடுத்து ஆடி அமாவாசையன்று அவர்களுக்குத் தர்ப்பணம் கொடுக்க வேண்டும் என்கிறது சாஸ்திரம். அவர்கள் பூமிக்கு வந்து சேரும் நாள் புரட்டாசி மாத மகாளய அமாவாசை ஆகும். எனவே, அன்றும் அவர்களுக்குத் தர்ப்பணம் கொடுக்க வேண்டும். பித்ரு லோகத்திலிருந்து வந்த நம் முன்னோர்கள் திரும்பவும் பித்ரு லோகத்துக்குச் செல்லும் நாள் தை அமாவாசை. அன்று அவர்களை வழியனுப்பும் விதமாகத் தர்ப்பணம் கொடுக்க வேண்டும். இந்த மூன்று அமாவாசை தினங்களில் நாம் கண்டிப்பாக நம் முன்னோர்களுக்குத் தர்ப்பணம் கொடுக்க வேண்டும் என்கின்றன சாஸ்திரங்கள். முன்னோர் வழிபாட்டுக்கு உகந்த தலங்கள் பல இருக்கின்றன. அவற்றுள் ராமேஸ்வரம் மிகவும் விசேஷமான தலம் ஆகும். ஆடி அமாவாசையன்று ராமேஸ்வரத்தில் கடல் நீராடி முன்னோர்களுக்குத் தர்ப்பணம் கொடுப்பது அளவற்ற நன்மைகளைத் தரவல்லது. குறிப்பாக, அக்னி தீர்த்தத்தில் நீராடுவது மிகவும் விசேஷம். பித்ரு வழிபாட்டைக் காலையிலேயே தொடங்கிவிட வேண்டும். ஏதேனும் ஒரு தீர்த்தக் கரைக்குச் சென்று நீராடி, தர்ப்பணம் கொடுத்து வந்து, மதியம் வீட்டில் மறைந்த நம் முன்னோர்களின் படங்களுக்கு மாலை அணிவித்து, விளக்கேற்றி, ஓர் இலையில் அவர்களுக்கு மிகவும் பிடித்தமான உணவு வகைகளைப் படைக்க வேண்டும். பின்னர், தீபாராதனை காட்டி, காகத்துக்கு உணவளிக்க வேண்டும். பிறகு, வீட்டில் உள்ள பெரியவர்களை முதலில் சாப்பிடச் செய்ய வேண்டும். பிறகே நாம் சாப்பிட வேண்டும். இப்படிச் செய்வதால், நம் முன்னோர்கள் மிகவும் மகிழ்ந்து நம்மை ஆசீர்வதிக்கின்றனர். அவர்களுடைய ஆசிகளால் நம் வாழ்க்கையும் நம் சந்ததியினரின் வாழ்க்கையும் மகிழ்ச்சியும் சகல செல்வங்களும் நிறைந்ததாக அமையும் என்பது உறுதி. 

நாளை ஆடி அமாவாசை நாள். நம் முன்னோர்களை வணங்கி அவர்களின் ஆசிகளைப் பெறுவோம்...

Sponsored


Sponsored
Trending Articles

Sponsored