திருப்பதியில் முதன்முதலில் அன்னதானத்தைத் தொடங்கிய மாத்ருஶ்ரீ வெங்கமாம்பாள்!Sponsoredதிருமலை,  திருப்பதியில் நாளை 18-ம் தேதி (சனிக்கிழமை) தொடங்கி, தரிகொண்ட வெங்கமாம்பாளின் 201 -வது நினைவு நாள் நிகழ்ச்சி அனுசரிக்கப்படுகிறது. இத்தனை முக்கியத்துவம் தரும் அளவுக்கு அவர் அப்படி என்ன செய்துவிட்டார் என்பதைப் பார்ப்போம்.

இன்றைக்குத் திருமலையில் சாமி தரிசனம் செய்து, மகா துவாரம் வழியாக வெளியே வந்து திரும்பியதும், பக்தர்கள் தேடிப்போகும் இடம் அன்னதானக்கூடம்தான். 

Sponsored


Photo Courtesy: TTD

Sponsored


தானத்தில் சிறந்தது அன்னதானம்தானே. அந்த அன்னதானத்தின் மகிமையை உணர்த்தும் ஒரு புராணக்கதை உண்டு.

கர்ணன் போரில் வீர மரணம் அடைந்ததும் சொர்க்கத்துக்குச் சென்றான். அங்கே அவனைப் பசிப்பிணி கடுமையாக வாட்டியது. `சொர்க்கத்தில் இருப்பவர்களுக்குப் பசியே எடுக்காதே. தன்னை மட்டும் பசி வாட்டியெடுக்கிறதே. என்ன காரணமாக இருக்கும்?' என்று பலவாறாக யோசித்தான்.

அப்போது அங்கு வந்த நாரதரிடம் காரணம் கேட்டபோதுதான், `தான் எத்தனையோ தானம் செய்திருந்தாலும் அன்னதானம் செய்யாமல் விட்டுவிட்டோம்' என்ற விஷயம் அவனுக்குத் தெரிந்தது. ஆனால், ஒருமுறை ஒருவன் பசி என்று வந்தபோது அன்னதானம் நடக்கும் இடத்தைத் தன் சுட்டு விரலால் சுட்டிக் காண்பித்தான். அதை அவனுக்கு நினைவுபடுத்திய நாரதர், சுட்டு விரலை வாயில் வைத்துக்கொண்டால் பசி போய்விடும் என்று கூறினார். கர்ணனும் அப்படியே செய்து பசித் துன்பத்திலிருந்து விடுபட்டான்.  

இத்தனை சிறப்பு வாய்ந்த அன்னதானத்தைத் திருமலையில் முதன் முதலில் தொடங்கி நடத்தியவர்தான் தரிகொண்ட வெங்கமாம்பாள். சுமார் 230 ஆண்டுகளுக்கு முன், அதாவது எந்தவித நவீன வசதிகளும் இல்லாத காலத்தில் திருமலைக்கு நடந்துதான் வந்து சாமி தரிசனம் செய்தாக வேண்டும். அப்படி வரும் பக்தர்கள் தாக சாந்தி செய்திடவும் உணவளிக்கவுமான ஏற்பாடுகளைச் செய்தவர் அவர். 

இளம் வயதிலே கணவரை இழந்தவர், வேங்கடேசப் பெருமாள் மீது பக்தி கொண்டு பல நூறு பக்திப் பாடல்களை இயற்றியவர். தன் வாழ்நாள் முழுவதும் மன்னர்களிடமும், செல்வந்தர்களிடமும் நன்கொடைகள் வாங்கி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார்.

மலையேறி வரும் பக்தர்களின் பசிப்பிணியைப் போக்குவதைவிட சிறந்த பணி வேறு என்ன இருந்து விடப்போகிறது. தான் உளமார ஏற்றுக்கொண்ட கைங்கரியத்தைத் தன் உயிருள்ள வரையிலும் சீரும் சிறப்புமாகச் செய்தார். இதனால் பக்தர்கள் அவரை, `மாத்ருஶ்ரீ வெங்கமாம்பாள்' என்று அழைத்தனர். அவருக்குப் பிறகு இடைப்பட்ட காலத்தில் பல்வேறு படையெடுப்புகளால் திருமலையில் அன்னதானம் வழங்க முடியாத நிலை ஏற்பட்டது. 

ஆந்திர மாநில முதல்வராக என்.டி.ராமராவ் பதவியேற்றதும் திருமலையில் தங்கும் இடம், முடிக்காணிக்கை, உணவு, தரிசனம் என எல்லாவற்றையும் இலவசமாக்கினார். திருமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை பத்து, இருபது மடங்குகளாக வளரத் தொடங்கியது. 

`நித்யானந்தம்' என்னும் அன்னதானக் கூடத்தில் சாதம், சாம்பார், ரசம், மோர், பொரியல், துவையல் எனப் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மிகப் பெரிய வரிசைகளில் நின்று ஏழை, பணக்காரர், படித்தவர், பாமரர் என சகலரும் சாப்பிட்டனர். இதற்கான டோக்கன் சாமி தரிசனம் செய்துவிட்டு வரும்போது கொடுப்பார்கள். 

இப்போது இந்த அன்னதானக் கூடம் தரிகொண்ட வெங்கமாம்பள் அன்னப்பிரசாதக் கூடம் என்ற பெயரில் பிரமாண்டமான கட்டடமாக உருவெடுத்திருக்கிறது. ஒரே நேரத்தில், தலா ஆயிரம் பேர் சாப்பிடும் விதமாக 4 அன்னதானக் கூடங்கள் உள்ளன. 

1985 - ம் ஆண்டு 2000 பேர் சாப்பிடும் அளவில் தொடங்கப்பட்ட இந்த அன்னதானம் இன்று நாளொன்றுக்கு 60 ஆயிரம் பேர் வரை சாப்பிடும் அளவில் விரிவாக்கம் பெற்றுள்ளது. மேலும் வைகுண்டம் க்யூ காம்ப்ளக்ஸில் இலவச தரிசனத்துக்குக் காத்திருப்போர், 300 ரூபாய் சிறப்பு தரிசனத்துக்குக் காத்திருப்போர், திவ்ய தரிசன வரிசையில் காத்திருப்போர் எனப் பல்லாயிரக்கணக்கான பக்தர்களுக்குப் பொங்கல், புளியோதரை, உப்புமா போன்றவையும் இங்குள்ள ராட்சத இயந்திரங்களின் மூலம் தயாரிக்கப்பட்டு வழங்கப்படுகின்றன. 

Photo Courtesy: TTD

``ஆயிரம் பேர் கொண்ட அலுவல் குழு மூன்று ஷிப்டுகளில் இந்த உணவு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். உணவு தயாரிப்புக்காக நாள் ஒன்றுக்கு 25 லட்ச ரூபாய்க்கு மேல் செலவாகின்றது'' என்கிறார் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் துணை நிர்வாக அதிகாரி கே.எஸ். சீனிவாசராவ்.   

திருமலை திருப்பதி தேவஸ்தானம், தரமான அரிசி மற்றும் மளிகைப் பொருள்கள், காய்கறிகள் ஆகியவற்றை வாங்கியளிக்கிறது. பக்தர்கள் பலரும் அன்னதான சேவைக்குப் பணமாகவும், பொருளாகவும், காய்கறிகளாகவும் வழங்கி வருகிறார்கள். உலகிலேயே மிகப் பெரிய உணவுக் கூடங்களில் ஒன்றாகத் திகழ்கின்றது திருமலை திருப்பதியின் அன்னதானக் கூடம்.Trending Articles

Sponsored