12 ஆண்டுகளுக்குப் பின்பு நிரம்பும் சூரிய தீர்த்தம் - பக்தர்கள் மகிழ்ச்சி



Sponsored



நாகை மாவட்டம், திருவெண்காட்டில் உள்ள சுவேதாரண்யேசுவரர் கோயிலில் இருக்கும் சூரிய தீர்த்தம் என்று அழைக்கப்படும் குளம் ஏறக்குறைய 12 வருடங்களுக்குப் பிறகு நீர் நிரம்புவதால் பக்தர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

திருவெண்காட்டில் உள்ள இந்த ஆலயம் உலகப் புகழ்பெற்றது. இங்கு நவகிரகங்களில் ஒருவரான கல்விக்கு அதிபதியான புதன் எழுந்தருளியுள்ளார். இங்கு சிவனடியார்களான 63 நாயன்மார்களும் காட்சி அளிக்கின்றனர். மேலும், இந்த ஆலயத்தில் சிவன் உருவம் கொண்டு அகோரமூர்த்தியாகக் காட்சியளிக்கிறார். இந்தக் கோயிலில் இந்தியாவிலேயே இல்லாத சிறப்பாக சிவனின் முக்கண்ணில் இருந்து தோன்றிய மூன்று பொறிகளால் உருவான அக்னி, சந்திரன் மற்றும் சூரிய தீர்த்த குளங்கள் காணப்படுகின்றன. இதில் சிறப்பானது சூரிய தீர்த்தம். இது புதன் சந்நிதிக்கு எதிரே அமைந்துள்ளது. மேலும், இதற்கு மேலே ருத்திர பாத மண்டபம் உள்ளது. இந்தக் குளங்களில் நீராடி மூதாதையர் நினைவாக ருத்திர பாதத்தில் திதி கொடுப்பது வழக்கம். மேலும், இந்தக் குளங்களில் நீராடி ஆலய இறைவனான சுவேதாரண்யேசுவரரை வணங்கினால் குழந்தை பாக்கியம் நிச்சயம் என்பது ஐதீகம்.

Sponsored


Sponsored


இத்தகைய சிறப்புகளை உடைய இந்தக் குளங்களில் கடந்த பல வருடங்களாகவே தண்ணீர் வராததால் ஆழ்துளை மோட்டார்கள் மூலம் தண்ணீர் நிரப்பப்பட்டு வந்தது. மேலும், மழைக்காலத்தில் மழைநீரால் குளம் நிரம்புவது வழக்கம். ஆனாலும் கடந்த 12 வருடங்களாக மூன்று குளங்களும் அடிக்கடி வறண்டுபோய் தண்ணீர் இல்லாமல் இருந்து வந்தது. இதனால் இவ்வாலயத்துக்குப் பரிகாரம் செய்ய வரும் பக்தர்கள் குளங்களில் நீராட முடியாத நிலை ஏற்பட்டது. எனவே, பெரும்பாலான பக்தர்கள் முழுமையாகப் பரிகாரம் செய்ய முடியாமல் திரும்பிச் செல்லும் நிலையே இருந்தது. ஆனால், தற்போது மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளதால் திருவெண்காடு ஆண்டி வாய்க்காலில் தண்ணீர் அதிக அளவில் நிரம்பி வருகிறது.

இதைப் பயன்படுத்தி கோயில் நிர்வாகம் மற்றும் 63 நாயன்மார்கள் நற்பணி மன்றத்தினர் மூலம் வாய்க்காலில் இருந்து கோயிலுக்குச் செல்லும் வாய்க்கால் வரை காணப்பட்ட அடைப்புகள் நீக்கப்பட்டன. இதன் காரணமாக முக்குளங்களிலும் தண்ணீர் நிரப்பும் பணி தொடங்கியுள்ளது. பல வருடங்களுக்குப் பிறகு மூன்று குளங்களும் நிரம்புவதைக் கண்ட பக்தர்களும் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.



Trending Articles

Sponsored