30 அடி உயரத்துக்கு ஓடும் பம்பை நதி... தமிழகத்திலேயே இருமுடி இறக்கும் ஐயப்ப பக்தர்கள்!



முன்னெப்போதும் இல்லாத அளவுக்குக் கொட்டித் தீர்த்த பெருமழையால் கேரளா குலைந்துபோய் கிடக்கிறது. அந்த மாநிலத்தின் பல பகுதிகள் வெள்ளக்காடாக மாறியிருக்கின்றன. எப்போதும் பல்லாயிரம் பேர் குழுமியிருக்கும் சபரிமலை ஐயப்பன் கோயிலும் வெள்ளத்தில் மூழ்கியிருக்கிறது. பம்பை நதியில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கின் காரணமாக பம்பை நதி பாலத்துக்கு மேலே 30 அடி உயரத்துக்குத் தண்ணீர் பாய்ந்து ஓடிக்கொண்டிருக்கிறது. 

Sponsored


ஐயப்பனுக்கு ஆண்டுதோறும், `நிறை புத்தரிசி பூஜை' மிகவும் விசேஷமாக நடைபெறுவது வழக்கம். விவசாயம் செழிக்கவும், மக்கள் பசியின்றி வாழவும், விளைந்த நெற்கதிர்களை வைத்து பூஜை செய்து, அந்த நெற்கதிர்களையே பிரசாதமாகப் பக்தர்களுக்கு வழங்குவது வழக்கம். இந்த வருடம் கடுமையான மழை வெள்ளத்தின் காரணமாகவும், அன்றைய தினம் மழையின் அளவு அதிகமாக இருந்தபடியாலும், நிறைபுத்தரிசி பூஜையில் பக்தர்களால் கலந்துகொள்ள முடியாமல் போய்விட்டது. நான்கு பக்தர்கள் வெள்ளத்தை எதிர்த்துப் போராடி நீந்திச்சென்று கோயிலில் நிறைபுத்தரிசியைக் கொண்டு சேர்த்தார்கள். வருடம்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டிருக்க நடைபெறும் விழா, மேல்சாந்தி உன்னிகிருஷ்ணன், கீழ் சாந்திகள் சிலர், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள், சில அதிகாரிகள், நீந்தி வந்த நான்கு பக்தர்கள் மட்டுமே கலந்துகொள்ள மிக எளிமையான முறையில் நடைபெற்றது.

Sponsored


Sponsored


(PC : Twitter)

ஒவ்வொரு மாதமும் முதல் ஐந்து நாள்கள் மட்டும் சபரிமலை ஐயப்பன் கோயிலில் பக்தர்கள் வழிபாடு செய்ய நடை திறக்கப்படுவது வழக்கம். இந்த மாதம், ஆகஸ்ட் 16 -  முதல் 21 வரை நடை திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆவணி மாதத்தில் சபரிமலை ஐயப்பனைத் தரிசிப்பதற்காக தமிழகத்திலிருந்து பக்தர்கள் மாலை அணிந்து, விரதமிருந்து, இருமுடி கட்டி கேரளாவுக்குச் செல்வது வழக்கம். பம்பை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக, ``அடுத்த சில நாள்களுக்குச் சபரிமலை கோயிலுக்கு யாரும் வர வேண்டாம்" என்று சபரிமலை ஐயப்பன் தேவசம் போர்டு அறிவிப்பு செய்திருக்கிறது. 

தேவசம் போர்டின் இந்த அறிவிப்பினால் சபரிமலைக்குச் செல்வதற்குத் தயாராக இருந்த தமிழக பக்தர்கள் ஆங்காங்கே அருகிலிருக்கும் ஐயப்பன் கோயில்களில் இருமுடி இறக்கி வருகிறார்கள். அதன்படி சென்னையில் எம்.ஆர்.சி நகரில் உள்ள ஐயப்பன் கோயில், மடிப்பாக்கம் ஐயப்பன் கோயில், அண்ணா நகரில் உள்ள ஐயப்பன் கோயில்களுக்கு பக்தர்கள் இருமுடியுடன் சென்று பதினெட்டுப் படியேறி ஐயப்ப சுவாமிக்கு நெய் அபிஷேகம் செய்து தங்களது வேண்டுதலை நிறைவேற்றி வருகிறார்கள். ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக ஆங்காங்கே கோயில் நிர்வாகமும் சிறப்பு ஏற்பாடுகளைச் செய்திருக்கிறது.

ஐயப்ப பக்தரும், ஆன்மிகச் சொற்பொழிவாளருமான அரவிந்த் சுப்ரமணியம், சபரிமலை ஐயப்பன் கோயிலின் தற்போதைய நிலை குறித்து நம்மிடம் பகிர்ந்துகொண்டார்...

``பம்பை ஆற்றுநீர்ப் பாலத்துக்கு மேலே முப்பதடி சென்றுகொண்டிருக்கிறது. பக்தர்கள் யாரும் கோயிலுக்குச் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டிருக்கிறது. மலை வழியே கீழிறங்கும் பாதையும் இப்போது பாதுகாப்பானதாக இல்லை. ஆங்காங்கே நிலச்சரிவு ஏற்பட்டு மரங்கள் விழுந்து கிடக்கின்றன. அதனால், சபரிமலைக்குப் பக்தர்கள் வருவதற்கு தேவசம் போர்டு தடை விதித்திருக்கிறது. தற்போது கோயிலுக்குள் மேல் சாந்தி உன்னிகிருஷ்ணன் நம்பூதிரி உட்பட மொத்தம் 11 பேர் மட்டுமே தங்கியிருக்கிறார்கள். அதனால், ஐயப்பனுக்கு நடைபெறவேண்டிய வழக்கமான பூஜைகள், வழிபாடுகள் எந்தவிதத் தடையுமில்லாமல் நடைபெற்று வருகின்றன'' என்றவரிடம்,

``இதற்கு முன்பு பக்தர்கள் கோயிலுக்கு வரமுடியாத சூழல் ஏற்பட்டிருக்கிறதா?'' என்று கேட்டோம்.

``1900-ம் வருடம் வரை பொங்கல் பண்டிகையின்போது மகரஜோதி விழாவுக்கு மட்டுமே கோயில் நடை திறக்கப்பட்டு, பக்தர்கள் வழிபட்டுச் சென்றார்கள். மற்ற நாள்களில் கோயில் பூட்டியே இருக்கும். அதன்பிறகு சில வருடங்கள் சென்றபிறகு கோயிலில் கார்த்திகை, மார்கழி மாதங்களில் மண்டல பூஜை தொடங்கியது. அக்காலங்களில் பக்தர்கள் கோயிலுக்குச் செல்லத் தொடங்கினர். 1950-ம் வருடம் ஐயப்பன் கோயிலில் ஏற்பட்ட தீவிபத்தின் காரணமாக சில நாள்கள் பூஜைகள் தடைப்பட்டன. அதன் பிறகு எந்தப் பிரச்னையும் இல்லாமல் பக்தர்கள் ஐயப்பனை தரிசிக்க சென்றார்கள். ஆனால், இயற்கை சீற்றத்தின் காரணமாகப் பக்தர்கள் கலந்துகொள்ள முடியாமல், கோயிலில் பூஜைகள் நடைபெறுவது இதுதான் முதல்முறை. ஐயப்பன் அருளால் இந்த நிலைமை விரைவில் சீராகிவிடும் என்று நம்புகிறோம்'' என்று கூறினார்.



Trending Articles

Sponsored