ஆறுகால பூஜை செய்து ராஜராஜசோழன் போற்றிய கோயில் சிதிலமடைந்து புதர்மண்டிக்கிடக்கும் அவலம்!



Sponsored



யிரம் வருடங்களை கடந்து, ராஜராஜ சோழனின் புகழையும், பெருவுடையாரின் பெருமையையும் தாங்கி `தட்சிணமேரு' என்ற பெயருடன் கம்பீரமாக நிற்கிறது தஞ்சை பெருவுடையார் கோயில். `சூரியன் சந்திரன் உள்ளவரை இந்தக் கோயில் நிலைத்திருக்கும்' என்று ராஜராஜனே கல்வெட்டில் கூறியுள்ளதைப் போன்றே, இன்னும் பல ஆயிரம் ஆண்டுகள் நிலைத்து நிற்கும் தஞ்சைப் பெரிய கோயில். ஆனால், ராஜராஜ சோழன் கட்டிய சிவன் கோயில் ஒன்று, கால மாற்றத்தில் சிதைந்து அழிந்துபோனது வேதனையிலும் வேதனை. 

மலம்பட்டி சிவன் கோயிலின் சிதைந்த நிலை

Sponsored


புதுக்கோட்டை மாவட்டத்தில் கீரனூருக்கு அருகே இருக்கிறது மலம்பட்டி கிராமம். இங்கு லிங்கமலை என்ற சிறு குன்றுக்குப் பின்னால், ஒரு காலத்தில் சீரும் சிறப்புமாகக் கொண்டாடப்பட்ட சிவன் கோயில் மறுசீரமைப்பு செய்ய முடியாதபடி முற்றிலும் சிதிலமடைந்து கிடக்கிறது. ஒரு காலத்தில், ஆறுகால பூஜை செய்து பக்தர்களால் வழிபடப்பட்ட சிவலிங்கம் கேட்பாரின்றி புற்களுக்கு நடுவே பரிதாபமான நிலையில் கிடக்கிறது. அம்மன், பெருமாள், நந்தி, பூதகணங்களின் சிலைகள் ஆங்காங்கே சிதறிக் கிடக்கின்றன. கோயிலுக்கு அருகில், கிரானைட் குவாரியின் கிரஷர்களில் அரைபட்டதில் எஞ்சிய ஒரேயொரு கல்வெட்டு மட்டும் ராஜராஜனின் பெயரைத் தாங்கிக்கொண்டு புதரில் கிடக்கிறது. `மொத்தக் கோயிலும் கிரஷர்களில் அரைபட்டு அழியும்முன்பு சிதைந்துபோன கோயிலையும், சிதறிக்கிடக்கும் சிலைகளையும் அரசு உரிய முறையில் பாதுகாக்க வேண்டும்' என்று வரலாற்று ஆர்வலர்களும் பக்தர்களும் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

Sponsored


புற்களுக்கு நடுவே கேட்பாரற்றுக் கிடக்கும் மலம்பட்டி கோயில் சிவலிங்கம்

``மலம்பட்டியில் மட்டுமல்ல புதுக்கோட்டை முழுவதும் பல்வேறு கோயில்கள் இப்படிச் சிதிலமடைந்து அழியும் நிலையில் இருக்கின்றன. ஆறுவேளையும் பூஜித்து வழிபட்ட கோயில்கள் இன்று ஒருவேளை விளக்குகூட ஏற்றப்படாமல் புதர் மண்டி பாம்புகள் சூழ்ந்து காணப்படுவது வேதனையளிக்கிறது. சிதிலமடைந்த கோயில்களை மறுசீரமைப்பு செய்து பாதுகாக்க அரசு முயற்சி செய்ய வேண்டும். பாதுகாப்பின்றிக் கிடக்கும் சிலைகள், திருடப்படுவதற்கு முன்பு அரசு அருங்காட்சியகங்களில் வைக்கப்பட வேண்டும்" என்று வேதனையாகச் சொல்கிறார் வரலாற்று ஆர்வலர் முருகன்.

``புதுக்கோட்டையிலிருந்து பொன்னமராவதி செல்லும் வழியில் இருக்கிறது சாத்தனூர் கிராமம். இங்கு வயல்வெளிகளுக்கு நடுவே மூன்றாம் குலோத்துங்கச் சோழன் காலத்தில் கட்டப்பட்ட உமாபதீஸ்வரர் கோயில் இருக்கிறது. ஒரு காலத்தில் மூன்றாம் குலோத்துங்கன், வீர பாண்டியன் ஆகியோர்களால் வணங்கப்பட்டு நிவந்தம் கொடுக்கப்பட்ட புகழ்பெற்ற கோயில் இது. இப்போது எந்தவிதமான பராமரிப்புமின்றி ஊருக்கு ஒதுக்குப்புறமாக வழிபாடின்றி இருக்கிறது. கோயிலுக்கு யாரும் செல்வதுகூட இல்லை. புதர் மண்டிக் கிடக்கிறது. கருவறைக்கு மேலே ஆலமரம் ஒன்று வளர்ந்திருக்கிறது. ஆலமரத்தின் வயது எப்படியும் நூறு ஆண்டுகளைத் தாண்டும். இப்போது கருவறையை ஆலமரம் தங்கியிருக்கிறதா அல்லது ஆலமரத்தைக் கருவறை தாங்குகிறதா என்று சந்தேகம் கொள்ளும் அளவுக்கு ஆலமரம் மிகப்பெரியதாக வளர்ந்துவிட்டது. ஆலமரத்திலிருந்து உதிரும் இலைகளில் சிவ லிங்கமே மூழ்கிவிட்டது. மிகப்பெரிய கற்றளியான இதில் பழைமையான கொற்றவை, விநாயகர், தட்சிணாமூர்த்தி  சிலைகள் கேட்பாரற்று கோயிலுக்கு வெளியே கிடக்கின்றன. கோயில் பக்கம் யாரும் செல்வதில்லை என்பதால் எப்போது வேண்டுமானாலும் இந்தச் சிலைகள் திருடுபோகும் அபாயம் இருக்கிறது. 

தரையோடு தரையாகக் கிடக்கும் மலம்பட்டி கோயில் பூதகணங்கள்

வயலோகம், நெரிஞ்சிக்குடி, விராலூர் ஆகிய ஊர்களிலும் பழைமையான கோயில்கள் பாழடைந்து கிடக்கின்றன. விராலூர் சிவன் கோயில் முற்கால சோழர்கள் காலத்தில் கட்டப்பட்டது. மத்திய தொல்லியல் துறைக் கட்டுப்பாட்டில் இருக்கிறது. கோயிலைப் பூட்டி வைத்திருக்கிறார்கள். ஆனால், தட்சணாமூர்த்தி, ஜேஷ்டா தேவி, முருகன் சிலைகள் கோயிலுக்கு வெளியே கிடக்கின்றன.  தட்சணாமூர்த்தி சிலை அரிதிலும் அரிதானது. ஒருகாலை மடக்கி வைத்து மறுகாலைத் தொங்கவிட்டு பிரம்ம சாஸ்தாவைப் போன்று அபூர்வமாக அருள்புரிகிறார் தட்சணாமூர்த்தி. மிகப்பெரிய பொக்கிஷமாகப் பாதுகாக்க வேண்டிய இந்தச் சிலைகள் எந்தவித பாதுகாப்புமின்றி கிடப்பதைப் பார்க்கும்போதே மனம் பதைபதைக்கும்.

இதேபோன்று, நாங்குப்பட்டி மற்றும் துலுக்கம்பட்டியில் இருக்கும் கோயில்களும் சிதிலமடைந்து விட்டன. இதில் துலுக்கம்பட்டியில் உள்ள கோயிலையும் தொல்லியல் துறைதான் நிர்வகிக்கிறது. இது ராஜேந்திர சோழன் காலத்தில் கட்டப்பட்டது. சித்தூர் என்ற ஊரில் உள்ள அக்னீஸ்வரர் சிவன் கோயில் கண்டராதித்ய சோழர் காலத்தில் கட்டப்பட்டது. அபூர்வமான எண்கோண கருவறையைக் கொண்டது இது. சோழர்களின் கட்டடக் கலையில் அபூர்வமான இந்தக் கோயிலும் சிதிலமடைந்து சிலைகள் அனைத்தும் பாதுகாப்பின்றி இருக்கின்றன" என்று வருத்தத்துடன் கூறுகிறார் வரலாற்று ஆர்வலரான பார்த்திபன். 

பாதுகாப்பின்றி காணப்படும் சாத்தனூர் கோயில் சிலை

பாதுகாப்பின்றி அழியும் தருவாயில் உள்ள கோயில்களைப் பற்றியும், அங்குக் காணப்படும் சிலைகளைப் பாதுகாக்க எப்படிப்பட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது பற்றியும் விளக்குகிறார் கங்கை கொண்ட சோழபுர மேம்பாட்டுக் குழுமத்தின் தலைவர் கோமகன்.

``சிதிலமடைந்து கொண்டிருக்கும் கோயில்களில் காணப்படும் சிலைகளை அந்தந்த இடங்களிலே வைத்துப் பாதுகாக்க வேண்டும். ஒரு இடத்தில் தெய்வமாக வணங்கப்படும் சிலை அருங்காட்சியகத்துக்குக் கொண்டு செல்லப்பட்டால் தெய்விகத் தன்மையை இழந்து கலைச் சின்னமாகிவிடும். அருங்காட்சியகத்தில் அந்தச் சிலைகள் தமது முக்கியத்துவத்தையும் வரலாற்று உணர்வையும் நிச்சயம் இழந்துவிடும்.

கம்போடியாவில் மரங்கள் வளர்ந்த புத்த விகாரங்களையும், கோயில்களையும் எந்த நிலையில் அவை இருக்கிறதோ அதே நிலையில்தான் பராமரித்துப் பாதுகாக்கிறார்கள். கோயில்களைப் பராமரித்துப் பாதுகாக்க முடியாமல் அவற்றைக் கைவிட்டு சிலைகளை வேறு இடங்களுக்குக் கொண்டு செல்வது நமது வரலாற்றை நாம் இழப்பதற்குச் சமம். பாதுகாப்பை உறுதிப்படுத்துவதே அரசின் சரியான நடவடிக்கையாக இருக்கும். திருட்டை ஒடுக்குவதே அரசின் பணி. மாறாக திருடர்களுக்கு பயந்து சிலைகளை அருங்காட்சியகங்களில் வைத்துப் பூட்டுவது சரியான நடவடிக்கையாக இருக்காது. பாழ்பட்ட கோயில்களைப் புனரமைத்து வழிபாட்டுக்குக் கொண்டுவராவிட்டாலும், அவை மேலும் சிதையாமல் பராமரித்துப் பாதுகாக்க அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்" என்றார் அவர். 

`கருவறையை ஆலமரம் தங்கியிருக்கிறதா அல்லது ஆலமரத்தைக் கருவறை தாங்குகிறதா' என்று சந்தேகம் கொள்ளும் அளவுக்கு வளர்ந்திருக்கும் ஆலமரம்

கோயில் என்பது வழிபாட்டுத் தலம் மட்டுமல்ல. பண்பாட்டு அடையாளம். வரலாற்று ஆவணம். அவற்றைப் பாதுகாத்து அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சேர்க்க வேண்டியது நம் கடைமை. பாழடைந்த ஒரு கோயிலைச் சுத்தப்படுத்தி ஒரு வேளை விளக்கேற்றி வழிபடுவது கோடி புண்ணியத்தை அளிக்கும். அப்படிச் செய்தால் அழியும் தருவாயில் உள்ள கோயிலைப் பாதுகாக்கும் புண்ணியமும் சேர்த்துக் கிடைக்கும்!



Trending Articles

Sponsored