ராஜேந்திர சோழன் கட்டியது, சுந்தரர் பாடியது... புதர்மண்டிக் கிடக்கும் பரமேஸ்வரன் கோயில்!



`கோயில்களின் தலைநகரம்’ என்று குறிப்பிடும் அளவுக்குப் பல புகழ் பெற்ற திருத்தலங்களைக் கொண்டிருக்கும் மாநிலம் இது. ஆனால், இங்குதான் வரலாற்று ஆவணங்களாகவும் கலைப் பொக்கிஷங்களாகவும் இருக்கும் 1,000 ஆண்டுகளுக்குமேல் பழைமை வாய்ந்த பல அபூர்வகோயில்கள் கண்டுகொள்ளப்படாமல் கிடக்கின்றன. 

Sponsored


அப்படியோர் அபூர்வ கோயில்தான் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகேயுள்ள மூனுசாவடி என்ற ஊரிலுள்ள பரமேஸ்வரன் கோயில். புதர் மண்டிப்போய், சுற்றுச்சுவர்கள் இடிந்து காணப்படும் இந்தக் கோயில், சுந்தரரால் பாடல்பெற்ற திருத்தலம் என்பது குறிப்பிடத்தக்கது. இங்கே இருந்த பல கல்வெட்டுகளை வேறு இடத்துக்குப் பெயர்த்துக் கொண்டு சென்றுவிட்டனர்.

Sponsored


இந்த ஆலயம் மட்டுமல்ல, இந்த மாவட்டத்திலுள்ள பொன்குறிச்சி, பாச்சல், குச்சிக்காடு உள்ளிட்ட இடங்களிலும் பல்வேறு காலகட்டங்களில் பொறிக்கப்பட்ட கல்வெட்டுகளும் கவனிப்பாரின்றி கிடக்கின்றன.

Sponsored


பரமேஸ்வரன் கோயிலைச் சுற்றியும் சில கல்வெட்டுகள் காணக்கிடைக்கின்றன. பல்வேறு காரணங்களால் சிதிலமடைந்துபோன கோயில் மற்றும் கல்வெட்டுகளைப் பாதுகாக்க வேண்டும் என்று தொடர்ச்சியாகக் குரல் கொடுத்துவரும், கல்வெட்டு ஆராய்ச்சியாளர் வெள்ளக்கல்பட்டி துரைசாமியிடமும் பேசினோம்.

“கி.பி.1025-ம் ஆண்டு, இந்தப் பகுதியை ஆண்டுவந்த ராஜராஜ சோழனின் மகன், முதலாம் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்டது மூனுசாவடி பரமேஸ்வரன் கோயில். அம்பாள் சந்நிதியுடன் கோயிலின் எதிர்புறத்தில் இரண்டு ரிஷப மண்டபங்களும் அமைந்திருந்தன. இப்போது அதற்கான தடயம் மட்டுமே இருக்கிறது.

`உலகாளத்தான் சதுர்வேதி மங்கலத்து திருவாச்ராமமுடைய பரமேச்வரர்க்கு, இவ்வூர் சபையாரிடம் இரு கழைஞ்சு பொன் கொடுத்து வாங்கியது’ என ஒரு கல்வெட்டில் பதிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல், கி.பி 1034-ம் ஆண்டில் பொறிக்கப்பட்ட மற்றொரு கல்வெட்டில் `முக்கழைஞ்சு பொன் கொடுத்து சபையாரிடம் மேலும் சிறிது நிலம் வாங்கப்பட்டதாக’த் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கோயில் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்டது என்பதற்கு இவை இரண்டும்தான் சான்று. கோயிலில் கலசம் இருந்த இடத்தில் இப்போது கம்பி மட்டுமே இருக்கிறது. சந்நிதிக்குள் மூலவர் இல்லை. கலையம்சம் பொருந்திய இந்தக் கோயிலை மீட்டு பாதுகாக்க வேண்டும்...” என்கிறார் துரைசாமி.

“பரமேஸ்வரன் கோயில் அருகே இருந்த இரு கல்வெட்டுகள் இப்போது எங்கு உள்ளன” என்று கல்வெட்டு ஆர்வலர் தனசேகரிடம் கேட்டேன்.

``இந்தக் கோயிலில் இருந்த இரண்டு கல்வெட்டுகள், தற்போது ஏ.கே.சமுத்திரத்தில் உள்ள சித்தி விநாயகர் ஆலயம் அருகே வைக்கப்பட்டிருக்கின்றன. 20 வருடங்களுக்கு முன்பு, இந்தக் கோயிலுக்குள் கால்நடைகள் நுழைந்து பாழ்படுத்தின. அதைத் தடுக்கும் நோக்கில் மூனுசாவடி மக்கள் கல்வெட்டுகளை நுழைவாயிலில் தடுப்பாக வைத்துவிட்டனர். அதற்குப் பிறகு, விநாயகர் கோயில் ஒன்றைப் புதிதாகக் கட்டும் பணி நடைபெற்றது. அப்போது, இந்தக் கல்வெட்டுகளை அகற்றி, அதைக் கோயிலுக்குப் படிக்கட்டுகளாக அமைக்க முடிவெடுத்தனர். அப்போதுதான், இந்தக் கல்வெட்டு குறித்து கோயில் நிர்வாகத்தினரிடம் எடுத்துக் கூறினேன். அதனால், இரு கல்வெட்டுகளும் தப்பியது. அதன் பிறகு, கல்வெட்டு ஆராய்ச்சியாளர் துரைசாமியிடம் எடுத்துச் சொன்னேன். அவர் வந்து, கல்வெட்டைப் படியெடுத்தார். அதில் பரமேஸ்வரன் கோயில் குறித்த பல தகவல்கள் எங்களுக்குக் கிடைத்தன. இந்தக் கோயிலைப்  போலவே காணப்படும் மற்றொரு கோயில் மல்லசமுத்திரம் பகுதியில் உள்ளது. இந்தக் கோயிலும் சோழர்கள் காலத்தில்தான் கட்டப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இந்தக் கோயில் குறித்த கல்வெட்டுகள் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை. பாழடைந்த இந்தக் கோயில்களையும் கல்வெட்டுகளையும் இந்து சமய அறநிலையத்துறையும் தொல்லியல் துறையினரும் மீட்டெடுக்க வேண்டும். அப்போதுதான் அவற்றின் வரலாறு, அடுத்த சந்ததியினருக்குப் போய்ச் சேரும்” என்கிறார் தனசேகர்.

`ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய இந்தக் கல்வெட்டுகள் அழிந்துவரும் நிலையில் இருக்கின்றன. இதைப் பாதுகாப்பதன் வழியே வரலாற்றை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சேர்க்க முடியும்...’ என்கிற கோரிக்கை அந்தப் பகுதி மக்களிடையே வலுத்துவருகிறது. அதிகாரிகளின் பார்வை பரமேஸ்வரன் கோயில் பக்கம் திரும்புமா?



Trending Articles

Sponsored