கண்ணன் புல்லாங்குழலை விடுத்து மகுடி எடுத்த கதை!Sponsoredகண்ணன் என்றாலே புல்லாங்குழல்தான் நம் நினைவுக்கு வரும்.  ஆனால், கண்ணனின் கரங்களில் மகுடி தவழ்ந்த சம்பவம் ஒன்று உண்டு. அதேபோல் கண்ணன் காளிங்கன் என்ற பாம்பின் தலையில் நடனம் புரிந்தது நமக்குத் தெரியும். ஆனால், மகுடி வாசித்து பல விஷப் பாம்புகளை மயக்கிய நிகழ்ச்சி ஒன்றும் மகாபாரதத்தில் இருக்கவே செய்கிறது. அந்த இரு நிகழ்ச்சிகளை இங்கே பார்க்கலாம்.

வடமதுராவில் கம்சனின் சிறைச்சாலையில்  தங்கள் குழந்தையாக அவதரித்த கண்ணனை, இறைவனின் கட்டளைப்படி கோகுலத்தில் கொண்டு விடச் சென்றார் வசுதேவர். குழந்தை கண்ணனை ஒரு கூடையில் வைத்துக்கொண்டு யமுனையின் அக்கரையிலிருக்கும் கோகுலத்துக்குச் செல்லும்போது, யமுனை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. கூடவே இடி மின்னலுடன் மழையும் சேர்ந்துகொண்டது.

Sponsored


வசுதேவர் இறைவனைப் பிரார்த்தித்தபடி யமுனை ஆற்றைக் கடந்து செல்லத் தொடங்கினார். கூடையில் இருக்கும் குழந்தை நனைகிறதே என்று கவலைப்பட்ட வசுதேவரின் கவலையைப் போக்குவது போல், மிகப் பெரிய நாகம் தன் ஐந்து தலைகளையும் விரித்து கூடையில் இருந்த குழந்தையின் மீது மழைநீர் படாமல் பார்த்துக்கொண்டது. அந்தப் பாம்பின் நோக்கம் அதுமட்டுமல்ல; குழந்தையாக வந்திருக்கும் இறைவனின் திருவடி ஸ்பரிசம் தன் மீது படவேண்டும் என்பதுதான் பாம்பின் பிரதானமான விருப்பம். ஆனால், கூடையில் இருந்த கண்ணனின் கால்களோ மேல் நோக்கி அந்தப் பாம்பை ஸ்பரிசிப்பதற்கு பதிலாக, கீழே வெள்ளமென பெருகி வந்த யமுனையை ஸ்பரிசித்து யமுனைக்கு ஆனந்தம் தந்தது.

Sponsored


அந்தப் பாம்பு வேறு யாருமல்ல; கோகுலத்தில் கண்ணனின் காளிங்க நர்த்தனத்துக்குக் காரணமான காளிங்கன்தான் அந்தப் பாம்பு.

காளிங்கனின் தலைகளின் மீது நடனம் புரிந்து அவனுடைய அகந்தையை அடக்கிய கண்ணன், பிறிதொரு தருணத்தில் பாம்புப் பிடாரனாக மாறி மகுடி வாசித்து பல நாகங்களை மயக்கவும் செய்தார். 

மகாபாரதத்தில் கௌரவர்கள் எப்போதுமே பாண்டவர்களிடம் துவேஷம் கொண்டவர்களாக இருந்தனர். குறிப்பாக, பீமனைக் கண்டாலே துரியோதனனுக்கு மாளாத வெறுப்பு. கெட்ட குணங்களுடன் தகாத சகவாசமும் கொண்டிருந்த துரியோதனனை எப்போது பார்த்தாலும் பீமன் வம்புக்கு இழுத்துக்கொண்டேஇருப்பான். அதனால் பீமனைக் கொன்றுவிடவேண்டும் என்று முடிவு செய்தான் துரியோதனன். ஒரு நாள் பாண்டவர்களிடம் சென்ற துரியோதனன் நயமாகப் பேசி அவர்களை வனபோஜனத்துக்கு அழைத்தான். துரியோதனனின் தீய எண்ணம் தெரியாத பாண்டவர்கள் வனபோஜனத்துக்குச் சென்றனர். பீமன் அளவுக்கதிகமாக உண்பவன் என்பதால், அவனிடம் சென்ற துரியோதனன், ''பீமா, நீ அதிகம் சாப்பிடுபவன் என்பதால், உனக்குத் தனியாக விருந்து தயாராக இருக்கிறது'' என்று சொல்லி, அவனைத் தனியே அழைத்துச்சென்று விஷ மூலிகைகள் கலந்த உணவைக் கொடுத்து சாப்பிடச் செய்தான். துரியோதனனின் சூது அறியாத பீமனும் அந்த உணவு முழுவதையும் உண்டுவிட்டான். விஷ மூலிகைகள் கலந்த உணவை உண்ட காரணத்தினால் பீமன் மயங்கி விழுந்துவிட்டான். உடனே துரியோதனனும் அவனுடைய தம்பிகளும் பீமனை காட்டுக் கொடிகளால் இறுக்கிப் பிடித்துக் கட்டி, விஷப் பாம்புகள் நிறைந்த ஒரு மடுவிற்குள் தள்ளிவிட்டனர். மடுவுக்குள் விழுந்த பீமனை அங்கிருந்த அத்தனை விஷப் பாம்புகளும் கடித்துவிடவே பீமன் மடிந்து போனான்.

துரியோதனனுடன் சென்ற தம்பி பீமன் நீண்ட நேரமாகியும் திரும்பாத காரணத்தால், துரியோதனனை அழைத்துக் கேட்டார் தர்மர். அவனோ, பீமன் வந்து சாப்பிட்டுவிட்டு உடனே திரும்பிவிட்டதாகக் கூறிவிட்டான். வருத்தத்துடன் வீடு திரும்பிய தர்மர் நடந்த விஷயத்தைத் தன் தாய் குந்தியிடம் கூறினார். மேற்கொண்டு என்ன செய்வதென்று அவர்களுக்குப் புரியவில்லை. ஆபத்பாந்தவனாகிய கண்ணனை நினைத்தனர். நினைத்ததும் நினைத்த மாத்திரத்தில் வந்துவிடும் கண்ணன் அவர்களுக்கு முன் தோன்றினார். அவர்களின் வருத்தத்துகான காரணமும், பீமன் இருக்கும் இடமும் கண்ணனுக்குத் தெரிந்தது.

உடனே பாம்புப் பிடாரனாக மாறி, பீமன் தள்ளப்பட்டிருந்த மடுவின் அருகில் சென்றார். தன் கையில் இருந்த மகுடியை இசைத்தார். கண்ணனின் குழலிசைக்கு இயற்கையே வசமாகும் என்றால், கண்ணனின் மகுடி இசைக்கு பாம்புகள் மயங்காதா என்ன? மடுவிலிருந்த அத்தனை நாகங்களும் வெளியேறி கரைக்கு வந்துவிட்டன. கண்ணனின் மகுடி இசையில் தங்களை மறந்து லயித்திருந்தன. மடுவில் இருந்த அத்தனை பாம்புகளும் காணாததைக் கண்ட  பாம்புகளின் அரசன் வாசுகி மடுவிலிருந்து வெளியே வந்து பார்த்தது. மகுடி இசைப்பவன் சாட்சாத் கண்ணபிரானே என்பதைப் புரிந்துகொண்ட வாசுகி, கண்ணனிடம் மன்னிப்புக் கேட்டதுடன், பீமனின் உடலைத் தீண்டிய அத்தனை பாம்புகளையும் பார்த்து பீமனின் ரத்தத்திலுள்ள விஷத்தை உறிஞ்சி எடுக்கும்படிக் கட்டளையிட்டது. அப்படியே பாம்புகள் பீமனின் ரத்தத்திலிருந்த விஷம் முழுவதையும் உறிஞ்சி எடுத்து விட்டன. உறக்கத்திலிருந்து எழுபவனைப் போல் பீமன் எழுந்துகொண்டான். எதிரில் கண்ணன் இருப்பதைக் கண்டு வணங்கினான். 

கண்ணனை மறுபடியும் வணங்கிய வாசுகி, ''பீமனின் உடலில் இருந்த மூலிகைகளின் விஷத் தன்மையும், பாம்புகளின் விஷமும் சேர்ந்து அவனுடைய உடலை வஜ்ரம் போல் ஆக்கிவிட்டது. இனி எந்த விஷமும் அவனைப் பாதிக்காது'' என்று வரமும் கொடுத்தது. Trending Articles

Sponsored