மாயைகளை விட்டு விலகி, இறைவனுக்கு உகந்தவர்களாக வாழுங்கள்! #BibleSponsoredசிறுவன்  ஒருவன் சாலையோரமாக நடந்து சென்று கொண்டிருந்தான். அப்போது ஓரிடத்தில் தரையில் கிடந்த 100 ரூபாயைக் கண்டெடுத்தான். அது அவனுக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது. எனவே அவன் அதை  தன்னுடைய பெற்றோரிடம் காட்டி அளவற்ற மகிழ்ச்சியடைந்தான். அப்போது அவன் யோசித்துப் பார்த்தான். இன்றுபோல எப்போதும் கீழே பார்த்துக் கொண்டு நடந்தால் நிறைய பணம் கண்டெடுக்கலாம் என்று நினைத்தான். எனவே அன்றுமுதல் அவன் எங்கே சென்றாலும் கீழே பார்த்துக்கொண்டே நடந்தான்.

காலங்கள் ஓடின. அந்தச் சிறுவனுக்கு 30, 40 வயது என்று ஏறிக்கொண்டே போனது. அப்போதும்கூட அவன் கீழே பார்த்தபடி நடப்பதை நிறுத்தவில்லை. எப்படியும் ஒருநாள் பெரிய பணப்பெட்டியோ, தங்கப்புதையலோ கிடைக்கும்; அதைக்கொண்டு பெரிய ஆளாகிவிடலாம் என்பதே அவனது எண்ணமாக இருந்தது. அதனால் அவன் தொடர்ந்து கீழே பார்த்தபடியே நடந்தான். இப்படியே காலங்கள் செல்ல வயது அறுபதைத் தொட்டது. அப்போது, இதுவரை அவன் கீழே கண்டெடுத்த பணத்தையும் தங்கத்தின் மதிப்பையும் கணக்குப் போட்டுப் பார்த்தான். அது 20 ஆயிரத்துக்கும் குறைவாகவே இருந்தது. அப்போது அவன், `இந்த இருபதாயிரத்துக்கும் குறைவான பணத்துக்காகவா என் சுக துக்கங்களை மறந்து நடந்தேன்' என்று வருத்தப்பட்டுக் கொண்டான். 

Sponsored


இந்தக் கதையில் வரும் மனிதனைப் போன்றுதான் நாம் நம்முடைய வாழ்வில் எது முக்கியமோ அதற்கு முக்கியம் தராமல் நடந்து கொள்கிறோம். மாறாக, சிறு சிறு காரியங்களுக்கும் சிற்றின்பத்துக்கும் முக்கியத்துவம் கொடுத்து வாழ்க்கையைத் தொலைத்து நிற்கிறோம். அப்படிப்பட்ட வாழ்க்கையை வாழாமல், நமது வாழ்வில் இறைவனுக்கு முக்கியத்துவம் கொடுத்து வாழ வேண்டுமென விவிலியத்தில் கூறப்பட்டுள்ளது. அதில், ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து விண்ணரசை திருமண நிகழ்ச்சியோடு ஒப்பிடுகிறார். அரசன் ஒருவன் திருமண விருந்துக்கு ஏற்பாடு செய்துவிட்டு விருந்து உண்பதற்காகப் பெற்றோர் உள்பட உறவினர்களை அழைக்கிறான். அவர்கள், சில காரணங்களைச் சொல்லிவிட்டு விருந்துக்கு வர மறுக்கிறார்கள். இதனால் சினங்கொண்ட அரசன் தனது பணியாளர்களை அனுப்பி தெருவோரங்களிலும் சாலையோரங்களிலும் இருப்பவர்களைத் தான் ஏற்பாடு செய்த விருந்துக்கு அழைக்கிறான்.

Sponsored


ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து சொல்லும் இந்த உவமை இறைவனின் அழைப்பு முதலில் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களாகிய யூதர்களுக்குக் கொடுக்கப்பட்டது எனச் சொல்கிறது. ஆனால், யூதர்கள் இறைவனின் அழைப்புக்குச் செவிமடுக்காமல் தங்கள் விருப்பப்படி வாழ்ந்து வந்தார்கள். அதனால்தான், புறவினத்தாருக்கு அந்த அழைப்பு கொடுக்கப்படுகிறது. அவர்களோ கடவுள் கொடுத்த அழைப்பைத் திறந்த மனதுடன் ஏற்றுக்கொண்டு அவர் ஏற்பாடு செய்திருக்கும் விண்ணக விருந்தில் கலந்து கொள்கிறார்கள்.

இந்த உவமை பற்றி சிந்தித்துப் பார்த்தால், நாம் நமது வாழ்வு குறித்தும் சிந்தித்துப் பார்க்க வேண்டும். அதாவது, கடவுள் நம்மை அவரது விருந்தில் கலந்து கொள்வதற்காக அழைக்கும்போது நாம் அவரது அழைப்புக்குச் செவிமடுத்து, அவர் தரும் விருந்தில் கலந்து கொள்கிறோமா அல்லது ஏதாவது சாக்குப்போக்குச் சொல்லிவிட்டு நமது மனம்போல வாழ்ந்து கொண்டிருக்கிறோமா என்றும் சிந்திக்க வேண்டும். பல நேரங்களில் நாம் இறைவனின் மேலான அழைப்பினை உதறித்தள்ளிவிட்டு சிற்றின்ப வாழ்க்கையில் புதையுண்டு கிடப்பது மிகவும் வேடிக்கையாக இருக்கிறது. ஆகவே நமது வாழ்க்கையில் எது முக்கியம் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

இயேசு சொல்லும் இந்த உவமை நமக்கு இன்னொரு செய்தியையும் மிகத் தெளிவாக எடுத்துச் சொல்கிறது. அது என்னவென்றால், இறைவனின் அழைப்பைத் நாம் சிறப்பாகப் பெற்றிருந்தாலும் இறைவன் தரும் விருந்தில் கலந்துகொள்வதற்கு தகுதியான நிலையில் செல்ல வேண்டும். இல்லையென்றால் விண்ணக விருந்தில் நம்மால் கலந்துகொள்ள முடியாமல் போய்விடும். மேலும் அந்த உவமையில், எல்லோரும் திருமண உடையில் வந்திருக்கும்போது ஒருவர் மட்டும் வேறு உடை உடுத்தி வந்தாராம். ஆகவே அவரை அப்புறப்படுத்துமாறு அரசர் தன் பணியாளர்களைக் கேட்டுக்கொள்கிறார். நாம் இறைவனின் திருவிருந்தில் கலந்துகொள்வதற்கு அவரது மேலான அழைப்பைப் பெற்றிருந்தாலும் தகுதியான உள்ளத்துடன், தகுந்த மனநிலையுடன் செல்ல வேண்டும். இல்லையென்றால் நாமும் அந்த மனிதரைப் போல வெளியே அனுப்பப்படுவோம் என்பது உறுதி.

ஆகவே, நாம் நமது வாழ்வில் இறைவனுக்கு முன்னுரிமை தந்து வாழ்வோம். நம்முடைய சிற்றின்ப நாட்டங்களையும் உலக மாயைகளையும் விட்டு விலகுவோம். எப்போதும் இறைவனுக்கு உகந்த வாழ்க்கை வாழ்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.Trending Articles

Sponsored