ஆழ்குழாய் கிணறுகள், கட்டுமானங்கள்... அழிவின் விளிம்பில் ராமேஸ்வர புண்ணியத் தீர்த்தங்கள்!



Sponsored



ரு கோயில் என்றால் பிரதானமாக மூன்று சிறப்புகள் சொல்லப்படும். மூர்த்தி, தலம், தீர்த்தம் என்பவையே அவை. கோயிலில் அமைந்திருக்கும் தீர்த்தத்தில் நீராடிய பிறகே இறைவனை வழிபடுவது நம் மரபு. 

அந்த வகையில் மூர்த்தி, தலம், தீர்த்தம் என்று மூன்றும் சிறப்புற்று விளங்கும் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயிலில் அமைந்திருக்கும் தீர்த்தங்கள் தண்ணீர் இல்லாமல் வறண்டுவிட்டது பக்தர்களிடையே அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியிருக்கிறது.

Sponsored


பொதுவாகக் கோயில்களில் ஒரு சில தீர்த்தங்கள்தாம் அமைந்திருக்கும். ஆனால், ராமேஸ்வரம் கோயிலில் 20-க்கும் மேற்பட்ட தீர்த்தங்கள் இருப்பது இந்தக் கோயிலுக்கே உரிய சிறப்பு. காசி யாத்திரை செல்பவர்கள் ராமேஸ்வரத்திலிருந்து மண் எடுத்துக்கொண்டு காசிக்குச் சென்று கங்கையில் போட்டுவிட்டு, கங்கை நீரை எடுத்து வந்து ராமநாதசுவாமிக்கு அபிஷேகம் செய்வது தொன்றுதொட்டு கடைப்பிடிக்கப்பட்டு வரும் வழிபாட்டு முறை. காசிக்குச் செல்பவர்கள் ராமநாதசுவாமி கோயிலுக்குள் அமைந்திருக்கும் மகாலட்சுமி தீர்த்தத்தில் முதலில் நீராடி, அதன் பிறகு சாவித்திரி, கங்கா, யமுனா,  காயத்ரி உள்ளிட்ட தீர்த்தங்களில் புனித நீராடிய பிறகே யாத்திரையைத் தொடங்குவர். கோயிலுக்கு வருபவர்கள்கூட இந்தத் தீர்த்தங்களில் நீராடிய பிறகே சுவாமி தரிசனத்துக்குச் செல்வது வழக்கம். வருடத்துக்கு சுமார் 50 லட்சத்துக்கும் மேலானோர் கோயிலுக்கு வந்து புனித நீராடிச் செல்கின்றனர். இதுவரை வற்றாமல் தீர்த்தம் வழங்கி வந்த கிணறுகள் இன்று நீரில்லாமல் வற்றிப் போய்விட்டன.

Sponsored


திருக்கோயில் தீர்த்தங்கள் வற்றிப்போனது பற்றி விவரித்த தமிழகத் திருக்கோயில்கள், திருமடங்கள் பாதுகாப்பு அமைப்பின் பொறுப்பாளர் பக்‌ஷி சிவராஜன், ``ராமேஸ்வரம் என்றாலே புனித நீராடிச் செல்வதுதான் பிரதானமான அம்சம். ராமேஸ்வரம் கோயிலுக்குள் உள்ள 22 தீர்த்தங்களைத் தவிர கோயிலுக்கு வெளியே தீவுப் பகுதியில் ஏராளமான தீர்த்தங்கள் இருந்திருக்கின்றன. அவற்றில் சில மட்டுமே இன்றளவும் புழக்கத்தில் இருந்து வருகின்றன. இதனால் ராமேஸ்வரம் வரும் யாத்ரீகர்களில் பெரும்பாலானோர், கோயிலுக்குள் உள்ள 22 தீர்த்தங்களில் மட்டுமே நீராடிச் செல்கின்றனர். பக்தர்களின் வசதிக்காகக் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் சத்யாமிர்தம், சிவ, சர்வ தீர்த்தங்கள் இடமாற்றம் செய்யப்பட்டன. தற்போது 1 முதல் 6 வரையிலான தீர்த்தங்களையும் இடம் மாற்றம் செய்யும் பணிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் யாத்திரைவாசிகள் அனைவருக்கும் வற்றாது தீர்த்தம் வழங்கி வந்த தீர்த்தக் கிணறுகள் சமீப காலமாக வறண்டு போய் பாறை, மணல், சகதி மற்றும் குப்பைகள் நிறைந்து காட்சியளிக்கின்றன. குறிப்பாகச் சங்கு தீர்த்தம், கங்கா தீர்த்தம் ஆகிய தீர்த்தங்கள் முற்றிலும் வறண்டு பாறைகளாகக் காட்சியளிக்கின்றன. இதனால் யாத்ரீகர்கள் அதிகமாக வரும் நாள்களில் அவர்கள் முழுமையாகப் புனித நீராட முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது.

தீர்த்தக் கிணறுகள் வறண்டு போனதற்கு, கோயில் நிர்வாகம் மட்டுமல்ல, அரசு நிர்வாகமும் பிரதான காரணமாக உள்ளது. முன்பெல்லாம் ராமேஸ்வரம் பகுதியில் தரையிலிருந்து சுமார் 20 முதல் 30 அடிகளுக்குள்ளாகவே நல்ல தண்ணீர் கிடைத்து வந்தது. சுற்றிலும் கடல் நீர் சூழ்ந்த நிலையிலும், நல்ல நண்ணீர் கிடைக்கக் காரணமாக இருந்தது சிறு தரவை, பெரும் தரவை எனப்படும் நீர்ப் பிடிப்புப் பகுதிகளாகும். சமீப காலமாக சட்டத்துக்குப் புறம்பாக இந்தப் பகுதிகளில் இறால் பண்ணைகள் அமைக்கப்பட்டதால், நீர் ஆதாரங்கள் உருக்குலைந்து போய்விட்டன. 

இவை தவிர, கோயிலுக்குச் சொந்தமான இடங்கள் மற்றும் கோயிலின் வடக்கு, தெற்கு நந்தவனப் பகுதிகளில் சுமார் 15 ஆயிரம் மரங்கள் இருந்தன. இவற்றுள் வெப்பத்தைத் தாங்கக்கூடிய பனை மரங்கள் மற்றும் நீர்ச்சத்து, பால்சத்து நிறைந்த மரங்கள் அதிகம். இவற்றின் மூலம் உரிய மழைப் பொழிவு இருந்ததால் தீர்த்தங்கள் வற்றாத நீரூற்றாகத் திகழ்ந்தன. இதைக் கருத்தில் கொண்டே நமது முன்னோர்கள் கோயில் கட்டும்போது அதன் பரப்பளவைப் போல் ஒரு பங்கு வெற்று நிலப்பரப்பை ஏற்படுத்தி, அந்த நிலப்பரப்பில் நந்தவனங்களை அமைத்துப் பராமரித்து வந்தனர். ராமேஸ்வரம் கோயிலின் மொத்தப் பரப்பளவான 15 ஏக்கரில் 7 ஏக்கரில் மட்டுமே கோயில் அமைந்திருக்கிறது. எஞ்சிய 8 ஏக்கர் பகுதி மரங்களும், நீர்ப் பிடிப்பு நிலப்பரப்பாகவும் இருந்து வந்தது. ஆனால்,  தற்போது கோயிலுக்குச் சொந்தமான நிலங்கள் மற்றும் கோயிலுக்குள் உள்ள நந்தவனப் பகுதியில் சில நூறு மரங்கள்தாம் மிஞ்சியுள்ளன. இதனால் மழைப் பொழிவு கடந்த 2 ஆண்டுகளாகக் குறைந்துவிட்டது. 

முன்பெல்லாம் யாத்ரீகர்கள் புனித நீராடும்போது அந்தத் தண்ணீர் தீர்த்தக் கிணறுகளின் அருகில் இருந்த நிலப்பரப்பின் வழியாகப் பூமிக்குள் சென்றது. அதற்கும் வழியில்லாமல், தீர்த்தக் கிணறுகள் இருந்த பகுதி முழுவதும் ஓடுகளைப் பதித்து விட்டனர். ஓட்டுத் தளத்தில் விழும் தண்ணீரையும் வாய்க்கால்கள் வழியே கடலில் கலக்கும்படிச் செய்துவிட்டனர். மேலும் மழை நீரை சேகரித்துத் தந்துகொண்டிருந்த நந்தவனப் பகுதிகளையும் கல்யாண மண்டபம், அன்னதான மண்டபம் என்று கட்டடங்களாக மாற்றிவிட்டனர். தீர்த்தக் கிணறுகள் வற்றாமல் இருப்பதற்குப் பெரிதும் உதவிய சிறு சிறு கிணறுகளையும் முற்றாக மூடிவிட்டனர். இவை அனைத்தையும் விட, கோயிலைச் சுற்றி அமைந்திருக்கும்  பெரிய பெரிய தங்கும் விடுதிகள் ஆழ்துளைக் கிணறுகள் மூலம் நிலத்தடி நீரை அளவில்லாமல் உறிஞ்சி வருகின்றன. இவையெல்லாம் சேர்ந்து இன்றைக்குக் கோயிலில் இருக்கும் தீர்த்தக் கிணறுகளுக்கு வரும் நீரைத் தடைசெய்து, கிணறுகளை வற்றச் செய்துவிட்டன. இதே நிலை நீடித்தால், கோயிலுக்கு வெளியிலிருந்த தீர்த்தங்களுக்கு ஏற்பட்ட நிலையே கோயிலுக்குள் இருக்கும் தீர்த்தங்களுக்கும் ஏற்பட்டுவிடும்'' என்று வருத்தத்துடன் கூறினார்.

கோயிலிலுள்ள தீர்த்தக் கிணறுகளுக்கு ஏற்பட்டுள்ள நிலையைச் சரிசெய்வதில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் நடவடிக்கைகள் குறித்து, கோயில் இணை ஆணையர் மங்கையர்க்கரசியிடம் கேட்டோம்.

``தீர்த்தங்களில் நீர் வறண்டு போனதற்கு முக்கியக் காரணம் கடந்த 2 ஆண்டுகளாக போதிய மழை இல்லாததுதான். மேலும், கோயிலைச் சுற்றி தனியார் கட்டியுள்ள தங்கும் விடுதிகள், ஹோட்டல்கள் ஆகியவற்றுக்கு ஆழ்துளைக் கிணறுகள் அமைத்துள்ளனர். இதனால் நிலத்தடி நீர் மட்டம் குறைந்துள்ளது. இந்நிலையில் நீர் வற்றிப் போன தீர்த்தங்களை ஆழப்படுத்த முடியாது. அவ்வாறு ஆழப்படுத்தினால் கடல் நீர் தீர்த்தங்களில் கலக்கும் நிலை ஏற்பட்டுவிடும். எனவே, கோயிலைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஆழ்துளைக் கிணறுகள் அமைக்க அனுமதிக்கக் கூடாது என்பதை அரசின் கவனத்துக்குத் தெரியப்படுத்தியுள்ளோம். மேலும் யாத்ரீகர்கள் குளிக்கும் தீர்த்த நீர் மீண்டும் நிலப்பகுதிக்குள் செல்லும் வகையில் தற்போது உள்ள தரை தள ஓடுகளை அகற்றவும், தீர்த்தங்கள் நீரின்றி வறண்டு போகாமல் இருக்கவும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்'' என்றார்.

எப்படியோ, மறுபடியும் ராமேஸ்வரம் கோயிலில் இருக்கும் தீர்த்தக் கிணறுகள் நிரம்பி, பக்தர்கள் புனித நீராடி புண்ணியம் தேடிக்கொள்ள ஒரு வழி ஏற்பட்டால் சரிதான்.



Trending Articles

Sponsored