துரோணர், வசிஷ்டர்,சாந்தீபனி... அறம் போதித்த புராணக்கால நல்லாசிரியர்கள்!Sponsored`மாதா பிதா குரு தெய்வம்' என்பது ஆன்றோர் மொழி. நம்மைப் பெற்றவர்களுக்கு அடுத்தபடியாகவும், தெய்வத்துக்கு முன்பாகவும் குருவை வைத்துப் போற்றுவது நம் மரபு. மாணவர்களுக்கு ஒழுக்கத்தை போதிப்பதிலும், அவர்களிடம் உள்ள நல்ல பண்புகளை வளர்த்து, தீயவழிகளில் அவர்களைச் செல்லவிடாமல் பாதுகாப்பதிலும், மாணவர்களின் அடிமனதில் புதைந்திருக்கும் தீய குணங்களைக் களைவதிலும் குரு என்பவர் மும்மூர்த்தியருக்கும் இணையாக வைத்துப் போற்றப்படுகிறார். குருவின் எண்ணங்கள், அவருடைய வார்த்தைகள், அவருடைய செயல்கள் ஆகியவற்றை உன்னிப்பாகக் கவனித்து, அவர் வழியில் நடப்பவர்களே உயர்ந்த மாணவர்கள் என்று சாஸ்திரங்கள் சொல்கின்றன. 

`எழுத்து அறிவித்தவன் இறைவன் ஆவான்'  என்று அதிவீரராம பாண்டியன் கூட தனது வெற்றிவேற்கை எனும் நூலில், நமக்குக் கற்பிக்கும் ஆசிரியர்களை கடவுளுக்கு நிகராக வைத்துப் போற்றியிருக்கிறார். மாணவர்களுக்கு ஒழுக்கத்துடன் கூடிய கல்வியை போதிக்கும், இறைவனுக்கு நிகரான ஆசிரியர்களே நாம் வழிபடவேண்டிய முதல் குரு ஆவார். 

Sponsored


புராண இதிகாசங்களில்கூட நாடாண்ட மன்னர்களை விடவும், அவதார புருஷர்களை விடவும் குருமார்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கின்றன. 

Sponsored


புராணத்திலும் வரலாற்றிலும் புகழ் பெற்றிருந்த சில குருமார்களை தரிசிக்கலாமே...

வசிஷ்டர் :

ராமாயணத்தில் தசரதனின் குலகுருவாக விளங்கியவர் வசிஷ்டர். இவரே ராமனுக்கும் அவனுடைய சகோதரர்களுக்கும் குருவாக இருந்து நல்லொழுக்கம், கல்வி, வீரம், போர்க் கலைகள் அனைத்தையும் கற்றுக்கொடுத்து அகிலம் போற்றும் சிறந்த வீரர்களாகப் பரிமளிக்கச் செய்தவர்.

துரோணர் :

பரத்வாஜரின் மைந்தரான கௌடில்யர் பரசுராமரிடம் போர்க் கலைகளைக் கற்றவர். இவர்தான் பாண்டவர்கள் மற்றும் கௌரவர்களுக்குக் குருவாக விளங்கியர். மகாபாரதத்தில், குருக்ஷேத்திரப் போரின் நாயகன் என்ற புகழுக்கு உரிய அர்ஜுனனை யாராலும் வீழ்த்த முடியாத மிகச் சிறந்த வில் வீரனாக உருவாக்கிய பெருமை குரு துரோணாசாரியாரையே சாரும்.

சாந்தீபனி :

பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் குருகுலத்தில் கல்வி பயின்றபோது, அவருக்கு குருவாக விளங்கிய பெருமைக்கு உரியவர் சாந்தீபனி முனிவர். சிறு வயதில் கிருஷ்ணருக்கு அரசியல் சாஸ்திரங்களுடன், போர்க் கலைகளையும் கற்றுக்கொடுத்தவர். தான் இறைவனின் அவதாரமாக இருந்தாலும்கூட, குருவுக்குத் தேவையான பணிவிடைகளைச் செய்து அவரிடம் சகல சாஸ்திரங்களையும் கற்றுக்கொண்ட கிருஷ்ணர், குருவுக்கு குருதட்சிணை அளிக்க முன்வந்தபோது, குரு மறுத்துவிடுவார். ஆனால், அவருடைய மனக்குறையைத் தெரிந்துகொண்ட கிருஷ்ணர், கடலில் மறைந்துபோன அவருடைய மகனை மீட்டு வந்து குருதட்சிணையாக வழங்கி ஆசி பெற்றார்.

கிருபாசார்யார்:

சரத்வான் மற்றும் ஜனபதி தம்பதியினருக்குப் பிறந்த கிருபர் அஸ்தினாபுரம் அரண்மனையில் ராஜகுருவாக விளங்கியவர். பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் இவரும் குருவாக இருந்து கல்வி கற்றுக் கொடுத்து வழிநடத்தியவர். கிருபர் தன்னுடன் இரட்டைக் குழந்தையாகப் பிறந்த தன் தங்கை கிருபியை துரோணருக்குத் திருமணம் செய்து கொடுப்பார். பாண்டவர்களுக்கும், கௌரவர்களுக்கும் குருவாக விளங்கிய கிருபாசார்யார், அபிமன்யுவின் புத்திரன் பரீக்ஷித்துக்கும் குருவாக இருந்து வில் வித்தையைக் கற்றுக்கொடுத்தார்.

சுக்ராசாரியார் 

பிருகுவின் மகன் சுக்ராசாரியார். அசுர குலத்தவர்களின் தலைவன் விருஷபருவனின் குருவாக இருந்து அனைத்துக் கலைகளையும் அவனுக்குக் கற்றுக் கொடுத்தவர். விருஷபருவன் இந்திரனுடன் நடந்த போரில் அவனைத் தோற்கடித்து தேவலோகத்தையும்  ஆட்சி செலுத்துவான். மாவலிக்கு குருவாக இருந்தபோது, மாவலியிடம் தானம் பெற வந்த வாமனர் யார் என்பதை அறிந்துகொண்டு, மாவலியை தானம் தரக் கூடாது என்று தடுத்தவர். அதன் விளைவாகத் தன்னுடைய ஒரு கண்ணின் பார்வையை இழந்தவர்.

சாணக்கியர் :

சரித்திரம் என்று எடுத்துக்கொண்டால், மறக்கமுடியாதவர் கௌடில்யர் என்ற சாணக்கியர். இவரே மௌரியப் பேரரசு தோன்றக் காரணமாக இருந்தவர். சந்திரகுப்தன் என்பவன் அடிப்படையில் ஒரு நாடோடி. ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்தபோது, அரசனைப் போல் வேடமிட்டுக்கொண்டு சக நண்பர்கள் மத்தியில் நடித்துக்கொண்டிருந்தான். அப்போது அந்த வழியாக வந்த சாணக்கியர், சந்திரகுப்தனின் அரச தோரணை, மிகச் சிறந்த ஆளுமை ஆகியவற்றைக் கண்டு வியந்ததுடன், அவனைத் தன்னுடன் அழைத்துச் சென்று அவனுக்குக் கல்வி கற்பித்ததுடன், ராஜதந்திரத்தையும், போர்ப்பயிற்சியும் அளித்து வழிநடத்தினார். அவருடைய வழிகாட்டுதலின் பேரில், சந்திரகுப்தன் பாடலிபுத்திரத்தை ஆட்சி செய்துகொண்டிருந்த நந்தர்களைத் தோற்கடித்து, 'மௌரியப் பேரரசு' என்னும் பெரிய சாம்ராஜ்யத்தை ஸ்தாபிப்பான். நாடாளும் தகுதியை குலத்தின் வழியாக மட்டுமல்லாமல், ஆள்வதற்கு உரிய தகுதிகளைப் பெற்றிருக்கும் எவரும் அரசராக ஆகலாம் என்பதை சந்திரகுப்தன் மூலம் உணர்த்தியவர். சாணக்கியர் எழுதிய அர்த்த சாஸ்திரம் என்ற நூல் ஆட்சி அதிகாரத்தில் இருக்கவேண்டியவர்கள் அவசியம் கற்கவேண்டிய நூல்.

குருமார்களைப் போற்றவேண்டும் என்று திருமூலரும் தம் திருமந்திரத்தின் மூலமாக வலியுறுத்தியிருக்கிறார். 

தெளிவு குருவின் திருமேனி காண்டல் 

தெளிவு குருவின் திருநாமம் செப்பல்

தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்

தெளிவு குரு உரு சி்ந்தித்தல் தானே 

குருவின் அருள் இருந்தால் எத்தகைய இக்கட்டான சூழலில் இருந்தும் நாம் விடுபடலாம். இன்றைக்கு நமக்குக் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களே நம்மை நல்வழியில் நடத்தும் குருமார்களும் ஆவர். நம் வாழ்க்கை உயர அடித்தளமிடும் ஆசிரியர்களைப் போற்றி வணங்குவது நம்முடைய கடமை மட்டுமல்ல; நம்முடைய வாழ்க்கையை உயர்த்திக்கொள்வதற்கான வழியும்கூட.Trending Articles

Sponsored