முருகப்பெருமான் நண்டுடன் காட்சியருளும் கடகம்பாடி சுந்தரேஸ்வரர் திருத்தலம்!Sponsoredசிவன் கோயிலில் பொதுவாகத் துர்கையம்மன் வடக்குப் பிராகாரத்தில், வடக்கு நோக்கிக் காட்சி தருவாள். ஆனால், சுவாமிக்கும் அம்பாளுக்கும் நடுவில் கிழக்கு நோக்கி அருளும் தலம் கடகம்பாடி அருள்மிகு பாலசுந்தரி சமேத அருள்மிகு சுந்தரேஸ்வரர் திருக்கோயில். கையில் சங்கு சக்கரம் ஏந்தி சாந்தம் தவழும் திருமுகத்துடன் காட்சி தரும் துர்கை, வைஷ்ணவி என்னும் திருப்பெயர் கொண்டு அருள் புரிகிறாள்

ஒருமுறை குருபகவானின் சாபத்துக்கு ஆளான இந்திரன், இந்தத் தலத்தில் அருளும் அருள்மிகு சுந்தரேஸ்வரரை வழிபட்டு வரம் பெற்றதாக ஒரு செய்தி சொல்லப்படுகிறது.

Sponsored


இந்தக் கோயிலில் அருளும் முருகப்பெருமானின் இடக் கரத்தில் நண்டு காணப்படுவது நமக்கு வியப்பை ஏற்படுத்தியது. அதேபோல் வீதியுலா வரும் சோமாஸ்கந்த மூர்த்தியின் இடது கரத்திலும் நண்டு காணப்படுகிறது. இது பற்றித் தெரிந்துகொள்ள ஆலய அர்ச்சகர் சூரியமூர்த்தியிடம் பேசினோம்.

Sponsored


''இந்தக் கோயிலில் முருகன் கையில் நண்டு இருப்பதன் பின்னணியில் ஒரு திருக்கதை சொல்லப்படுகிறது. 

இந்தத் தலத்து இறைவன் சுந்தரேஸ்வரரை அரசலாற்றிலிருந்து ஒரு நண்டு வந்து பூஜிப்பது அன்றாட வழக்கம். அதன் காரணமாகவே ஊருக்குக் கடகம்பாடி என்ற பெயர் ஏற்பட்டதாகச் சொல்லப் படுகிறது. 

ஒரு தருணத்தில் முருகப்பெருமான் இந்தத் தலத்துக்கு வந்து சிவனாரை தியானித்து தவமியற்றினார். வழக்கப்படி சிவபூஜைக்கு வந்த நண்டு முருகப்பெருமானின் கையில் ஏறி அவருடைய தவத்தைக் கலைத்தது. தவம் கலைந்த முருகப்பெருமான், அந்த நண்டை எடுத்துத் தன் இடது கரத்தில் ஏந்திக்கொண்டார். அதனால்தான் முருகப்பெருமானின் இடது கரத்தில் நண்டு இருக்கிறது. அதேபோல் வீதியுலா வரும் சோமாஸ்கந்த மூர்த்தி திருவுருவத்திலும் கந்தரின் கையில் நண்டு இருக்கிறது. சிவபூஜை செய்ததன் பயனாக அந்த நண்டு முருகப்பெருமானின் இடது கரத்தில் இருக்கும் பெரும் பேற்றைப் பெற்றுவிட்டது!'' என்றவர் தொடர்ந்து,

''இந்தக் கோயிலில் வைஷ்ணவி துர்கை, சுவாமிக்கும் அம்பாளுக்கும் நடுவில் கிழக்கு நோக்கி இருப்பது ஒரு சிறப்பு என்றால், திட்டையில் சுவாமிக்கும் அம்பாளுக்கும் அருகில் குருபகவான் இருப்பதைப்போல், இங்கே சுவாமிக்கும் அம்பாளுக்கும் அருகில் இரண்டடி உயரத்தில் சனீஸ்வரர் காட்சி தருகிறார். அதனால் சனிக்கிழமைகளில் இங்கு வந்து வழிபடுபவர்களுக்குச் சனியினால் ஏற்படக்கூடிய சகல தோஷங்களும் விலகிவிடும் என்பது ஐதிகம்'' என்றார்.

அரச பதவியைத் துறந்து சிவனடியாராக ஒவ்வொரு சிவத் தலமாகச் சென்று ஒரு தலத்துக்கு  ஒரு வெண்பா என்று பாடிய ஐயடிகள் காடவர்கோன் நாயனார் வழிபட்டதாகச் சொல்லப்படுகிறது. 

கடகம்பாடி வைஷ்ணவி சக்தி அம்சமாகவும் செதலப்பதி என்னும் திலதர்ப்பணபுரியில் அருளும் கனகவல்லி அம்பிகை லட்சுமியின் அம்சமாகவும், கூத்தனூர் சரஸ்வதி கலைமகள் அம்சமாகவும் வழிபடப்பெறுகிறார். இந்த மூன்று கோயில்களும் ஒரே நேர்க்கோட்டில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்க சிறப்பம்சம்.

இந்தக் கோயிலிலுள்ள வைஷ்ணவி துர்கை மிகவும் வரப்பிரசாதி. இவளை வழிபட்டால், காஷ்மீரில் உள்ள வைஷ்ணவி தேவியை வழிபட்ட பலன் கிடைப்பதாக ஐதிகம். தமிழகத்தில் இருந்து மட்டுமல்லாமல் மும்பை, டெல்லி, பெங்களூரு போன்ற வெளிமாநில ஊர்களிலிருந்தும் பக்தர்கள் வந்து வைஷ்ணவி துர்கையை வழிபட்டுச் செல்கின்றனர். 

திருமணம் தடைப்படுபவர்களும், குழந்தை பாக்கியம் இல்லாதவர்களும் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் இந்தக் கோயிலுக்கு வந்து வைஷ்ணவி துர்கைக்கு நெய்விளக்கேற்றி, செவ்வரளி மலர்களால் அர்ச்சனை செய்து வழிபட்டால், திருமணத்தடை நீங்கி மகிழ்ச்சியான இல்லற வாழ்க்கை அமைவதாகவும், குழந்தை பாக்கியம் கிடைப்பதாகவும் பக்தர்கள் நம்பிக்கையுடன் சொல்கிறார்கள். சொந்தமாக ஒரு வீடு வேண்டும் என்று விரும்புபவர்கள் கோயிலுக்கு வந்து வேண்டிக்கொண்டு சென்றால், அவர்களுக்கு விரைவில் சொந்த வீடு  அமையும் என்றும் சொல்லப்படுகிறது. 

இந்தக் கோயிலில் திருப்பணிகள் நடைபெற்று, இன்று காலை (6.9.2018) கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து நாளை முதல் மண்டலாபிஷேகம் நடைபெற இருக்கிறது.

கோயில் நடை திறந்திருக்கும் நேரம்: காலை 8 முதல் 11.30 வரை; மாலை 5 முதல் 8 வரை.

எப்படிச் செல்வது..? 

மயிலாடுதுறை - திருவாரூர் வழியில் பூந்தோட்டம் என்ற இடத்திலிருந்து மேற்கே சுமார் 6 கி.மீ தொலைவிலுள்ளது கடகம்பாடி. பேருந்து மற்றும் ஆட்டோ வசதி உண்டு.Trending Articles

Sponsored