அதிபத்தரின் பக்தியைப் போற்றும் சிவனுக்குத் தங்க மீன் அர்ப்பணிக்கும் நிகழ்வு!



ஆண்டு தோறும் ஆவணி மாதம் ஆயில்ய நட்சத்திர நாளில் நடைபெறும் அதிபத்த நாயனார் சிவபெருமானுக்கு தங்க மீன் வழங்கும் விழா நாகை கடற்கரையில் நேற்று கோலாகலமாக நடந்தது.  

Sponsored


கி.பி. 8ஆம் நூற்றாண்டுக்கு முன் நாகை அருகே நுழைப்பாடி என்னும் நம்பியார் நகரில் மீனவர் சமுதாயத்தில் பிறந்தவர் அதிபத்தர். சிறந்த சிவ பக்தரான இவர் மீன்பிடித் தொழிலைச் செய்து வந்தார்.  அப்போது, தான் பிடிக்கும் முதல் மீனை சிவபெருமானுக்கு அர்பணித்து அந்த மீனை வணங்கி கடலில் விட்டுவிடுவார் (இன்றும் மீனவர்கள் தாங்கள் பிடிக்கும் முதல் மீனைக் கடலில் விடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்). சிலநேரங்களில் வலையில் கிடைப்பது ஒரு மீனாக இருந்தாலும், அதனைச் சிவனுக்கு தந்துவிட்டு வெறும் கையுடன் வீட்டுக்குத் திரும்புவார் அதிபத்தர். இவரது பக்தியை சோதிக்க எண்ணிய சிவபெருமான் அதிபத்தர் வலையில் தங்க மீன் ஒன்று கிடைக்குமாறு செய்தார். அதையும் பொருட்படுத்தாமல் சிவபெருமானுக்கே அர்ப்பணித்தார் அதிபத்தர். பிரதிபலன் பாராத அதிபத்தரின் பக்தியை மெச்சிய சிவபெருமான், பார்வதிதேவியுடன் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி அதிபத்தருக்கு காட்சி கொடுத்தார். இவரே பின்னாளில் 63 நாயன்மார்களில் ஒருவராக அதிபத்த நாயனார் என்றழைக்கப்பட்டு, நாகை நீலாயதாட்சி அம்மன் உடனுறையும் காயாரோகன சுவாமிக் கோயிலில் தனி சன்னதியில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.  

Sponsored


Sponsored


அதிபத்த நாயனார் சிவபெருமானுக்கு தங்க மீன் வழங்கும் விழா ஆண்டு தோறும் ஆவணி மாதம் ஆயில்ய நட்சத்திர நாளில் கொண்டாடப்படுகிறது.  அதன்படி நேற்று (செப். 07) நாகை நீலாயதாட்சி அம்மன் கோயிலில் இருந்து சிவபெருமான் பார்வதிதேவி ஆகியோர் ரிஷப வாகனத்தில் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மேள, தாளங்களுடன் வாணவெடிகள் முழங்க புதிய கடற்கரைக்கு ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர்.

வழிநெடுகிலும் பொதுமக்கள் தங்கள் வீட்டு வாசலில் நீர்த்தெளித்து, கோலமிட்டு சுவாமி அம்பாளுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டனர். பின்னர் நம்பியார்நகர் ஆரியநாட்டுத்தெரு மீனவ கிராமங்கள் சார்பில் அதிபத்த நாயனாருக்கு சீர்வரிசைப் பொருள்கள் வழங்கப்பட்டன. அதன்பின் சுவாமி, அம்பாள், அதிபத்த நாயனார் ஆகியோர் உற்சவ சிலைகளுக்குச் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. பூஜை முடிந்ததும், மூன்று சுவாமிகளின் உற்சவ சிலைகளை மீனவர்கள் பைபர் படகுகளில் ஏற்றி 50 அடி தூரத்திற்குக் கடலுக்குள் கொண்டு சென்றார்கள். மற்றொரு படகில் அமைச்சர்கள் ஜெயக்குமார், ஓ.எஸ். மணியன் மற்றும் மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார், மீனவ கிராம முக்கியப் பிரமுகர்கள் சென்றனர். அவர்கள் முன்னிலையில், வெள்ளி மீன் மற்றும் தங்க மீன் இரண்டையும் கடலில் வீசி அதனை அதிபத்த நாயனார் பிடித்து சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சியும், சிவபெருமானும், பார்வதியும் அதிபத்தருக்கு காட்சிதரும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொள்ள நாகை புதிய கடற்கரையே விழாக்கோலம் பூண்டிருந்தது.   



Trending Articles

Sponsored