கண் நோய்களை குணமாக்கும் நாட்டரசன்கோட்டை கண்ணுடைநாயகி!Sponsoredஐம்புலன்களில் பிரதான  இடம் வகிப்பது கண்தான். அந்தக் கண்ணுக்கு ஏதாவது பாதிப்பு என்றால், உலகமே இருண்டது போல்தான். கண்களின் குறைபாடுகளைத் தீர்ப்பதற்காகவே ஒரு கோயில் இருக்கிறதென்றால் கேட்கவே ஆச்சர்யமாக இருக்கிறதல்லவா? ஆனால், உண்மை அதுதான், கண் நோய்களைக் குணமாக்கும் நாட்டரசன்கோட்டை கண்ணுடைநாயகி!

சிவகங்கையில் இருந்து தொண்டி செல்லும் சாலையில் 8 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது, நாட்டரசன்கோட்டை. இங்குதான் இருக்கிறது கண்ணுடைநாயகி ஆலயம். கண்ணுடைநாயகியின் அருளால் கண் பார்வை பெற்றவர்கள் பலர் என்பது அங்கு வரும் பக்தர்கள் கூட்டத்தைப் பார்த்தாலே தெரிகிறது. இந்தப் பகுதியிலிருக்கும் பலருக்கும் கண்ணன் ,கண்ணம்மா என்ற பெயரே அதிகம் இருக்கிறது.
மக்களை வேட்டையாடி அழித்ததோடு, தேவர்கள் வழிபாடு செய்ய முடியாமலும், ரிஷிபுங்கவர்கள் யாகங்களைச் செய்ய முடியாமலும் அநேக தொந்தரவுகளைக் கொடுத்துவந்த  அசுரனை அழிக்க மகா சக்தியாக வடிவெடுத்த அம்பிகை, தேவர்கள் தன்னை தரிசிப்பதற்காக  ஞானக்கண்ணை வழங்கினார். அதிலிருந்து கண்ணுடையாள் என்ற திருநாமம் பெற்றாள்.

Sponsored


Sponsored


நாட்டரசன்கோட்டைக்கு அருகில் இருக்கிறது, பிரண்டைக்குளம் என்னும் கிராமம். இந்த வழியாக ஓர் இளைஞன் எப்போது பால் கொண்டு போனாலும் கல் தடுக்கி விழுவதும், கொண்டுவந்த பால் கொட்டுவதுமாகவே இருந்தது. அதனால், செய்தி அறிந்த ஊர்மக்கள் ஏன் இப்படி நடக்கிறதென பார்க்க, வேறு சில  இளைஞர்களையும் அவ்வாறே அனுப்பி வைத்தனர். ஆனால், யார் போனாலும் இப்படியே நடந்ததால், அந்த இடத்தில் என்னதான் இருக்கிறதென்று பார்க்க முடிவு செய்து மண்ணைத் தோண்டிப் பார்த்தனர். அப்போது பூமிக்கு அடியில் அம்மன் சிலை ஒன்றைக் கண்டனர். கல் இடறி மக்களைக் காணச் செய்ததால்  கண்ணுடையாள் என்று பெயர் பெற்றார்.
கோயிலின் கோபுரம் ஐந்து நிலைகளைக்கொண்டதாக கம்பீரமாக விளங்குகிறது. இங்கு வீற்றிருக்கும் அன்னை ஶ்ரீகண்ணுடை நாயகி உத்குடி ஆசனத்தில் அமர்ந்த நிலையில் அருள் பாலிக்கிறார். 

 

கோயிலுக்கு எதிரில் உள்ள திருக்குளத்தில் நீராடி, கண்ணுடைநாயகியை வழிபட்டால், கண் பார்வைக் குறைபாடுகள் நீங்கிவிடுவதாக பக்தர்கள் நம்பிக்கையுடன் சொல்கிறார்கள்.
அம்மனின் அருள், கோயில் குளத்து நீரில் நிரம்பி இருப்பதாக ஐதீகம். கண்ணுடையாள் என்ற பெயருக்கு ஏற்பவே கண் பார்வையை வழங்கும் கண்கண்ட தெய்வமாக விளங்குகிறாள். 

இப்போதும் கண் சிகிச்சைப் பெற்றே ஆகவேண்டும் என டாக்டர்களால் கூறப்பட்டவர்களில் பலரும் இங்கு வந்து கண்ணுடையாளை வேண்டிக்கொண்டு  இங்குள்ள குளத்து நீரை குவளையில் எடுத்து தங்கள் கண்களைக் கழுவிச் செல்கின்றனர். குளத்து நீர் பொதுமக்களின் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்வதால், இப்போது குளத்தில் குளிக்க அனுமதிக்கப்படுவதில்லை. பக்தர்கள் வெள்ளித் தகட்டினாலான கண்மலரை அர்ச்சனைத் தட்டுடன் வாங்கிச் சென்று அம்மனுக்கு காணிக்கையாகக் கொடுத்து வழிபடுகின்றனர்.
 சித்தர்களில் ஒருவரான அழுகுணிச் சித்தரும் பாட்டரசரான கம்பரும் இங்கு வந்து சமாதி நிலை அடைந்தனர்.
 வைகாசி மாதத்தில் பிரம்மோற்ஸவம், ஆடி மாதத்தில் முளைக்கொட்டு உற்ஸவம், புரட்டாசியில் நவராத்திரி விழாவும், ஐப்பசி மாதம் கோலாட்டத் திருவிழாவும் தை மாதத்தில் பொங்கல் விழாவும் சிறப்பாக நடைபெறுகின்றன.
கோயில் நடை திறக்கும் நேரம்: காலை 7.15 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை மாலை 4.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை.Trending Articles

Sponsored