`அணுவும் நானே அண்டமும் நானே’ - ஆன்மிகத்தில் அறிவியல் தேடிய அப்துல் கலாம்!Sponsoredஇந்தியாவின் முதல் குடிமகனாக இருந்த மேதகு அப்துல் கலாம், மத நல்லிணக்கத்தைக் கடைபிடிப்பதிலும் முதல் குடிமகனாக இருந்தார். இஸ்லாமிய மதத்தின் மீது தீவிரப் பிடிப்புள்ளவராக இருந்தார். அதேநேரம், பிற மதங்களில் உள்ள தத்துவங்களையும் கொள்கைகளையும் போற்ற அவர் தயங்கியதே இல்லை. உலக அளவில் நடக்கும் கருத்தரங்குகளில்கூட அதை வெளிப்படுத்தியிருக்கிறார். ஆன்மிகம் என்பது மதங்களைக் கடந்தது. அது மனிதம் சார்ந்தது என்று வாழ்ந்த கலாம் மத வேறுபாடுகளை மறந்தே தனது நட்பு வட்டாரத்தையும் கொண்டிருந்தார். எல்லா மதமும் அன்பு ஒன்றையே வலியுறுத்துகிறது என்று தெளிவாக உணர்ந்திருந்த கலாம், அதை மக்களிடமும் கொண்டு சென்றார். சிவன், நடராஜ தத்துவம், பஞ்ச பூதக் கோட்பாடுகள் போன்ற தத்துவங்கள் அறிவியலின் உள்ளடக்கத்தைக் கொண்டிருப்பவை என்று வாய்ப்புக் கிடைத்த இடங்களில் எல்லாம் சொல்லி பெருமைப்பட்டுக்கொண்டார்.  

ஜெனீவாவில் நடந்த கடவுள் துகள் கண்டுபிடிப்பு குறித்த ஆலோசனைக் கூட்டத்தில், இந்தியா உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்த அறிஞர்கள் கலந்துகொண்டனர். பூமியை ஆழமாகத் தோண்டி ஆய்வை மேற்கொள்ளும் முயற்சியை 118 நாடுகளின் பிரதிநிதிகள் எதிர்த்தனர். ஆழமாகத் தோண்டுவதால் உண்டாகும் வெப்பம், பூமியை பெரிய அளவில் பாதிக்கும் என்று காரணம் சொன்னார்கள். அப்போதுதான் அப்துல் கலாம் நடராஜ நாட்டியம் குறித்த தத்துவத்தைக் கூறினார். சிவபெருமான் தில்லையில் நடராஜராக ஆடும் தத்துவமே இந்த உலகம் இயங்கும்விதத்தைக் குறிக்கிறது. தமிழ்ப் புராணங்களில் ஒன்றான அகத்தியர் எழுதிய நூலில், 'அணுவும் நானே அண்டமும் நானே' என்று சிவபெருமான் கூறியிருப்பதாக அப்துல்கலாம் எடுத்துக் கூறினார். அறிவியல் வளர்ச்சி பெறத் தொடங்கி விஞ்ஞானிகள் 1938-ம் ஆண்டுதான் அணு என்ற விஷயத்தையே கண்டறிந்தனர். ஆனால், அதற்குப் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இந்த அறிவியல் கண்டுபிடிப்பு  அகத்தியரால் சொல்லப்பட்டதையும்  அவர் விளக்கினார். மேலும், 'அணுவைத் துளைத்து ஏழ்கடலைப் புகட்டி' என்று திருக்குறளுக்காக ஔவையார் எழுதிய பாராட்டுரையும் அவரை வியக்கவைத்தது. இந்திய இலக்கியங்களிலும், சமயக் கருத்தியலிலும் இருந்த அறிவியல் கண்டுகொள்ளாமல் போனதை பல இடங்களில் வருத்தப்பட்டு பதிவுசெய்துள்ளார். 

Sponsored


இசையில் ஆழ்ந்த விருப்பம் கொண்ட கலாம், தியாகய்யர் கீர்த்தனைகளில் சொக்கிப்போனார். நெகிழ்ந்து பாடும் தியாகய்யரின் பல பாடல்களை  கலாம் மனப்பாடமாகவே கற்று உருகிப்போனார். ‘இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகிறோம். உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்' என்ற திருக்குரான் வரிகளில் இறைவனின் குரலைக்கேட்ட அப்துல் கலாம் பிற சமயங்களிலும் இருந்த மனித நேயத்தைப் போற்றத் தவறவேயில்லை. மதங்களைவிட மனிதநேயமே உயர்ந்தது என்று நம்பிய கலாம், அதைத் தனது வாழ்நாள் முழுக்க கடைபிடிக்கவும் செய்தார். தனது குறிப்புகளில்கூட ராமேஸ்வரத்து நினைவுகளைப் பகிரும் தருணங்களில் மத ஒற்றுமையையும், சகிப்புத்தன்மையின் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார். 'ஏவுகணை நாயகர்' என்றே போற்றப்பட்ட அப்துல் கலாம், ஏவுகணையின் தாயகமே இந்தியாதான் என்றும், திப்பு சுல்தான் காலத்திலேயே ஏவுகணைகள் பயன்பாட்டில் இருந்ததையும் குறிப்பிட்டு, இந்தியாவின் பெருமையை மேற்கத்திய நாடுகளில் பரவச் செய்தார். 

Sponsored


வேற்றுமையிலும் ஒற்றுமை காணும் இந்தியாவே வல்லரசாகும் தகுதி கொண்டது என்பதை அவர் இளைஞர்களிடம் போதித்தார். அதனாலேயே அவர் எல்லா மக்களுக்குமான `மக்கள் ஜனாதிபதியாக’ கொண்டாடப்பட்டார். இன்றும், மகத்தான மனிதராகக் கொண்டாடப்படுகிறார். Trending Articles

Sponsored