எலி, முள்ளம்பன்றி, கார்.. விநோதக் காரணங்களுக்காகத் தடைபட்ட கிரிக்கெட் போட்டிகள்!Sponsoredஇந்தியா - இலங்கை அணிகளுக்கு  இடையிலான டெஸ்ட் போட்டி,  டெல்லி ஃபெரோஷா கோட்லா மைதானத்தில் நடந்துவருகிறது. நேற்று மதியம் களத்தில் அதிக மாசு இருப்பதாகக் கூறி இலங்கை வீரர்கள் ​​​​முகமூடி அணிந்து ஆடினர். லக்மல் உள்ளிட்ட சில இலங்கை வீரர்கள் பாதியிலேயே களத்திலிருந்து வெளியேறி டிரெஸ்ஸிங் ரூமுக்குத் திரும்பினர். இதனால், அவ்வப்போது ஆட்டம் தடைபட்டது. இதேபோல கிரிக்கெட் வரலாற்றில் பல விநோதக் காரணங்களுக்காக ஆட்டம் தடைபட்டிருக்கிறது. அதன் விவரம்...

* 1957 ஜூலை: இங்கிலாந்தில் நடந்த கவுன்டி கிரிக்கெட் போட்டியின் இடையே முள்ளம்பன்றி ஒன்று மைதானத்துக்குள் நுழைந்தது. டெர்பிஸையர் கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்  ஜார்ஜ் டாக்ஸ், அந்த முள்ளம்பன்றியை லாகவமாகப் பிடித்து  ஃபீல்டுக்கு வெளியே  விட்டார். விக்கெட் கீப்பர் என்பதால், தன் கையில் அணிந்திருந்த உறையால் முள்ளம்பன்றியின் முள்களிலிருந்து தப்பித்தார்.

Sponsored


* ஜூன் 18, 2007: இங்கிலாந்தில் நடைபெற்ற லாங்ஸயர் அணிக்கும் கென்ட் அணிக்கும் இடையேயான போட்டியில் `ஃபயர் அலாரம்' அடித்ததால் இரண்டு தீயணைப்பு வண்டிகள் அங்கே விரைந்தன. தீயணைப்புத் துறை அதிகாரி கிட்சன் உள்ளே சென்று பார்த்தபோது கருகிய நிலையிலிருந்த கிரேவியில் ஏற்பட்ட புகையால் `ஃபயர் அலாரம்' அடித்தது தெரியவந்தது. இதனால் சிறிது நேரம் ஆட்டம் தடைப்பட்டது.

Sponsored


* ஜூலை 1944: இரண்டாம் உலகப்போர் நடந்துகொண்டிருந்த சமயம், இங்கிலாந்து லார்ட்ஸ் மைதானத்தில் `தி ஆர்மி' அணிக்கும் `தி ராயல் ஏர்ஃபோர்ஸ்' அணிக்கும் இடையேயான போட்டியின்போது ஜெர்மனி நாட்டின் `டூடுல் பக்' என அழைக்கப்படும் `குண்டு வீசும்' விமானம் ஒன்று லார்ட்ஸ் மைதானத்தின் மேல் பறந்தது. இதையடுத்து, வீரர்கள் அனைவரும் அச்சத்தில் தரையில் கவிழ்ந்து படுத்தனர். ஆனால், குண்டு அருகில் உள்ள `ரீஜென்ட் பார்க்கில்' விழுந்தது.

* 1951-52-ல் சேப்பாக்கத்தில் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து முதல் நாள் பேட் செய்திருந்த நிலையில், இங்கிலாந்து நாட்டின் மன்னர் மரணமடைந்ததார். அதனால், இரண்டாம் நாள் ஆட்டம் நடைபெறவில்லை. பின் மூன்றாம் நாள் காலை இங்கிலாந்து மன்னர்க்கு அஞ்சலி செலுத்திய பின் ஆட்டம் தொடர்ந்தது. இந்த டெஸ்ட் போட்டியில்தான் இந்தியா தனது முதல் டெஸ்ட் வெற்றியை பதிவு செய்தது!

* ஆகஸ்ட் 1957: இங்கிலாந்தில் நடைபெற்ற கென்ட் மற்றும் ஹாம்ஸயர் அணிகளுக்கிடையேயான போட்டியின்போது எலி ஒன்று மைதானத்துக்குள் ஓடி வந்தது. அதைப் பிடிக்க அதன் உரிமையாளர் பின்தொடர்ந்து ஓடினார். பிறகு தன் தொப்பியை வைத்து எலியைப் பிடித்தார். இதேபோல் இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கிடையேயான போட்டியின்போது மைதானத்துக்குள் எலி வந்து ஆட்டம் சிறிது நேரம் தடைப்பட்டது.

* ஜூன் 2 , 1975: இங்கிலாந்தில் ஜூன் மாதம் என்பது வெயில் காலம். ஆட்டம் இரண்டு நாள்கள் முடிந்திருந்த நிலையில் மூன்றாம் நாளான ஜூன் 2-ம் தேதி மழை பெய்யத் தொடங்கியது. திடீரென மழை பனியாக மாற, ஆட்டம் தடைப்பட்டது. சற்று நேரத்தில் மைதானம் முழுவதும் பனி சூழ்ந்தது.

* இங்கிலாந்தில் நடைபெற்ற கவுன்ட்டி  கிரிக்கெட் போட்டியில் பன்றி ஒன்று மைதானத்துக்குள் வந்ததால் ஆட்டம் சிறிது நேரம் தடைபட்டது. அதேபோல் 1983-ம் ஆண்டில் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே ஒருநாள் போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெற்றது. இங்கிலாந்து வீரர்கள் இருவரின் பெயர் ஒரு பன்றியின் உடம்பில் எழுதப்பட்டு ஆஸ்திரேலிய ரசிகர்களால்  மைதானத்துக்குள் விடப்பட்டது.

* 1980-ம் ஆண்டு மும்பையில் இந்தியா - இங்கிலாந்து இடையேயான ஆட்டம் நடைபெற்றது. அப்போது சூரிய கிரகணம் என்பதால் இரண்டாம் நாள் ஆட்டம் கைவிடப்பட்டது. 

* 1984 - 85: பாகிஸ்தானில் இந்திய அணி 40 ஓவர்கள் பேட் செய்திருந்த நிலையில் இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்ட செய்தி எட்டியதும் ஆட்டம் கைவிடப்பட்டது.

* 1997 - 98: கோக கோலா கப் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா பேட்டிங் செய்துகொண்டிருந்தபோது மணல் புயலாகக் கிளம்பியது. இதனால் ஓவர்கள் குறைக்கப்பட்டன.

* சிட்னியில் 2009-ம் ஆண்டில் நடைபெற்ற 17 வயதுக்குட்பட்டோருக்கான போட்டியின்போது கொடிய பாம்பு ஒன்று மைதானத்துக்குள் வந்ததால் ஆட்டம் 20 நிமிடம் தடைப்பட்டது.

* பிப்ரவரி 28, 2010: `மும்பை' மற்றும் `சென்னை ' அணிகளுக்கிடையேயான ஐ.பி.எல் போட்டியின்போது நாய் ஒன்று மைதானத்துக்குள் நுழைந்தது. அதைப் பிடிப்பதற்கு வீரர்கள் முயன்று தோல்வியுற்றனர்.

* மே 18 , 2016: `டெல்லி' மற்றும் `புனே ' அணிகளுக்கிடையேயான ஐ.பி.எல் போட்டியிலும் நாய் புகுந்ததால் பதற்றம் ஏற்பட்டது.

* சமீபத்தில் டெல்லியில் ரஞ்சி டிராபி போட்டி நடந்துகொண்டிருந்தபோது காரில் ஒருவர் மைதானத்துக்குள் புகுந்து ரவுண்ட் அடித்ததால், வீரர்கள் பதறினர்.Trending Articles

Sponsored