தோனி தெரியும்... மீராபாய் சானு தெரியுமா..?! பத்ம விருதுகள் வென்ற விளையாட்டு வீரர்கள்



Sponsored



இவ்வாண்டும் கணிசமான அளவில் விளையாட்டு வீரர்கள் பத்ம விருதுகள் பெற்றுள்ளார்கள். தோனிக்கும், பில்லியர்ட்ஸ் விளையாட்டு வீரர் பங்கஜ் அத்வானிக்கும் பத்ம பூஷன் விருதும், நமக்குப் பெரிதாக அறிமுகமில்லாத வீரர்கள் சிலருக்கு பத்மஸ்ரீ விருதுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. யார் யாருக்கு என்ன விருது? ஒரு சின்ன அப்டேட்!

மீராபாய் சானு:       

இவ்வாண்டு பத்மஸ்ரீ விருது பெறும் ஒரே பெண் விளையாட்டுவீரர் என்ற பெருமையைப் பெறுகின்றார் சானு. இவரது முழுப்பெயர் சாய்கோம் மீராபாய் சானு. 23 வயதாகும் சானு, மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்தவர். 2014ஆம் ஆண்டு கிளாஸ்கோவில் நடந்த காமன்வெல்த் போட்டியில், பளுதூக்குதல் 48 கிலோ எடைப்பிரிவில் வெள்ளிப்பதக்கம் பெற்றார். 2017 ஆம் ஆண்டு நடந்த உலக சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப்பதக்கத்தையும் கைப்பற்றினார் சானு. கர்ணம் மல்லேஸ்வரிக்குப் பிறகு இந்தச் சாதனையை நிகழ்த்தியவர் இவர்தான். நிச்சயமாக இவர் பளுதூக்கும் போட்டிகளில் நம்பிக்கை நட்சத்திரமாக ஜொலிப்பார் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை!

Sponsored


Sponsored


முர்ளிகாந்த் பெட்கர்:
1965-ம் ஆண்டு, பாகிஸ்தான் போரின்போது முர்ளிகாந்தின் உடலைப் பல துப்பாக்கிக் குண்டுகள் துளைத்து எடுக்கின்றன. இந்திய இராணுவத்தில் பணிபுரிந்த முர்ளிகாந்த், செகந்திராபாத்தில் தேர்ந்த குத்துச்சண்டை வீரராகவும் இருந்தார். காயங்கள் அவரின் வேட்கையைக் கட்டுப்படுத்தவில்லை. 1968-ம் ஆண்டு பாராலிம்பிக் போட்டியில் டேபிள் டென்னிஸில் கலந்து கொண்ட இவர், 1972 ம் ஆண்டு பாராலிம்பிக்ஸ் போட்டியில் தேர்ந்தெடுத்தது, நீச்சல்! ஹைடெல்பேர்க்கில் நடந்த இப்போட்டியில் 50 மீ ப்ரீஸ்டைல்போட்டியில் தங்கமும் பெற்றுவந்தார் முர்ளிகாந்த்! பாராலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையையும் பெற்றுள்ள முர்ளிகாந்திற்கு இந்திய அரசு பத்மஸ்ரீ விருது அளித்து கௌவுரவப்படுத்தியுள்ளது.

சோம்தேவ் தேவ்வர்மன்:

32 வயதாகும் சோம்தேவ் கிஷோர் தேவ்வர்மனின் சொந்த ஊர், திரிபுரா. கவுகாத்தியில் பிறந்து கொல்கத்தா, சென்னை என்று பறந்து பறந்து வளர்ந்த சோம்தேவ் டென்னிஸ் விளையாட ஆரம்பித்தபோது அவருக்கு வயது 9.  கல்லூரிப் படிப்பை அமெரிக்காவில் முடித்த சோம்தேவ் வர்மன், 2010 டெல்லியில் நடந்த காமன்வெல்த் போட்டியில் தங்கப்பதக்கம், அதே ஆண்டு நடந்த ஆசிய விளையாட்டுப்போட்டிகளில் இரண்டு தங்கம், ஒரு வெண்கலம் என்று மிரட்டினார். 2011-ம் ஆண்டு அரசு இவருக்கு அர்ஜுனா விருது வழங்கி கௌவுரவித்தது. அதிகபட்சமாக உலக ரேட்டிங்கில் 62-ம் இடம்வரை வந்த சோம்தேவ், கடந்த ஆண்டு விளையாட்டிலிருந்து ஓய்வுபெற்றுக்கொண்டார்.

கிடாம்பி ஸ்ரீகாந்த்:

பயிற்சியாளர் கோபிச்சந்தின் மற்றுமொரு வார்ப்பு, 24 வயதாகும் கிடாம்பி நம்மாழ்வார் ஸ்ரீகாந்த். தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்த இவர் சட்டென்று கவனிக்கவைத்தது, 2014 ஆம் ஆண்டு. சீனாவில் நடந்த சூப்பர் சீரீஸ் போட்டியில், ஒலிம்பிக் சாம்பியன் லின் டானை 21 வயதே நிரம்பிய ஸ்ரீகாந்த் வென்றபோது ‘யாருப்பா அது?’ என்று அனைவருமே திரும்பிப்பார்த்தார்கள். இதன்மூலம் சூப்பர் சீரீஸ் போட்டியில் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையையும் பெற்றார். பத்மஸ்ரீவிருது பெற்றிருக்கும் கிடாம்பி, 2016 ஆம் ஆண்டு நடந்த தெற்காசிய விளையாட்டுப்போட்டிகளில் இரண்டு தங்கம், ஆசியா டீம் சாம்பியன்ஷிப்பில் வெண்கலம் என்று கவனிக்கவைத்தார்.

பங்கஜ் அத்வானி:

பில்லியர்ட்ஸ் மற்றும் ஸ்நூக்கர்ஸ் விளையாட்டில் சாம்பியனான பங்கஜ் அத்வானி, மூன்று ஹாட்ரிக்களுக்குச் சொந்தக்காரர். பில்லியர்ட்ஸ் விளையாட்டில், 2005, 2008, 2012 என்று மூன்று ஆண்டுகளில், உலக சாம்பியன்ஷிப், ஆசிய சாம்பியன்ஷிப், இந்திய சாம்பியன்ஷிப் என்று வேகம் காட்டிய பங்கஜ், இந்தியாவின் இளவரசன் என்றே செல்லமாக அழைக்கப்பட்டார். பத்தொன்பது வயதிலேயே அர்ஜுனா விருது (2004), இருபத்தியொரு வயதில் ராஜீவ் காந்தி கேல்ரத்னாவிருது (2006), 2009-ம் ஆண்டு பத்மஸ்ரீ விருது என்று தொடர்ச்சியாக விருது மழையிலும் நனைந்தார் பங்கஜ். கடந்த மூன்று ஆண்டுகளாக ஐஎஸ்பிஎஃப் ஸ்னூக்கர் மற்றும் பில்லியர்ட்ஸ் போட்டிகளில் தங்கம் வென்றுவரும் பங்கஜ் அத்வானிக்கு இவ்வாண்டு மத்திய அரசு பத்ம பூஷன் விருது வழங்கி சிறப்பித்துள்ளது.

மகேந்திரசிங் தோனி:

ஆடம் கில்க்ரிஸ்ட், சச்சின் டெண்டுல்கர் என்று கிரிக்கெட் வீரர்களைப் பார்த்துப் பார்த்து வளர்ந்த கனவுகளுக்குச் சொந்தக்காரன் அந்தச் சிறுவன். பசுந்தளிராகத் துளிர்விட்ட அந்த கனவுகள் விருட்சமாக விஸ்வரூபம் எடுத்தபோது, அந்தச் சிறுவன் மைதானத்தில் ருத்ரதாண்டவம் ஆடிக்கொண்டிருந்தான். நீளமான முடியைக் காற்றில் பறக்கவிட்டு, எதிர்ப்படும் பந்துகளை எல்லாம் கருணையே இல்லாமல் கண் காணாத இடத்திற்கு அனுப்பிவைத்துக்கொண்டிருந்தான். உக்கிரமான ஆட்டத்தை வெளிப்படுத்தும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனிலிருந்து, எந்நிலையிலும் நிதானம் தவறாத ‘கேப்டன் கூல்’ஆக மாறிய தோனியின் வளர்ச்சி, கனவுகள் நோக்கி அடி எடுத்துவைக்கும் அனைவருக்குமே பூஸ்ட்தான்!
20-20 உலகக்கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி, உலகக்கோப்பை என்று மூன்று சாதனைகளையும் அடைந்த ஒரே கேப்டன் என்ற பெருமைக்கும் சொந்தக்காரர் இவர்தான்.



Trending Articles

Sponsored