எவ்வளவோ செஞ்சுட்டீங்க, இதையும் செஞ்சுடுங்க ஜான் செனா! - WWE கிங்ஸ் ஆப் தி ரிங்ஸ் பகுதி 8Sponsoredபகுதி - 1   I  பகுதி - 8

90களில் பிறந்தவர்களின் நாயகன். பெண்கள் விரும்பும் பேரழகன். பிஜி ஏராவின் மாவீரன். கூடவே, `ன்' எனும் எழுத்தில் முடியும் இன்னும் பிற தமிழ்சினிமா தலைப்புகள். WWE-யின் ரூத்லெஸ் அக்ரஷன் மற்றும் பிஜி எராக்களை தூக்கிச்சுமந்த 'டாக்டர் ஆஃப் தகனாமிக்ஸ்', அண்ணன் ஜான் செனா. 

Sponsored


ஆங்கில, ப்ரெஞ்சு - கனடிய, இத்தாலிய வம்சாவளியில் பிறந்தவர் ஜான் செனா. ஏப்ரல் 23, 1977 ஆம் ஆண்டு ஜான் செனா சீனியர் மற்றும் கரோலுக்கு இரண்டாவது மகனாக பிறந்தார். பெரும்பாலான WWE வீரர்களைப் போலவே, ஜானும் பள்ளி, கல்லூரி படித்த காலத்தில் க்ரிட் அயார்ன் விளையாட்டில் கலக்கிக் கொண்டிருந்தார். சிறுவயதிலிருந்தே மல்யுத்தம் மீதிருந்த தீராக் காதலால், உடற்பயிற்சி இயங்கியல் துறையில் படித்து பட்டமும் பெற்றார். சிலகாலங்கள் பாடிபில்டிங் செய்வதும் ஓட்டுநர் பணிக்கு செல்வதுமாகவும் வாழ்க்கையை நகர்த்தியிருக்கிறார்.

Sponsored


1999 ஆம் ஆண்டில், கலிஃபோர்னியாவைச் சேர்ந்த `அல்டிமேட் ப்ரோ ரெஸ்ட்லிங்' (UPW) நிறுவனத்திலிருந்து தனது மல்யுத்த பயணத்தை தொடங்கினார் ஜான் ஃபெலிக்ஸ் ஆண்டனி செனா. இதுதான் இவரது நிஜப்பெயர். இது அவ்வளவு ஃபோர்ஸாக இல்லாதலாலும்  முழுப்பெயரை சொல்லிமுடிப்பதற்குள் பாதிக் கூட்டம் பாப்கார்ன் வாங்க கிளம்பிவிடும் எனும் உன்னதமான காரணத்தினாலும் `ப்ரோட்டோடைப்' என தன் பெயரை மாற்றிக்கொண்டார். இதற்காக அவர் தேர்ந்தெடுத்த கிம்மிக், ரோபோ மனிதன். மனிதன் பாதி, ரோபோ பாதி கலந்த கலவை ப்ரோடோடைப். அங்கு சிலரை அல்லையில் மிதித்து, அடிவாங்கி அடப்பு தெறித்து, முழுவதும் ட்யூனாகி WWE-யின் கதவை தட்டினார். WWE-யும் `யாருப்பா அது' என கதவைத் திறந்தது. சில டார்க் மேட்சுகளில் கலந்துக் கொண்டார், WWE கான்ட்ராக்டில் கையொப்பமிட்டார். டார்க் மேட்ச் என்பது யாதெனில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படாத சண்டைப்போட்டிகள், அவ்வளவே!

உங்களால் ஒன்றை கனவு காணமுடிந்தால்,

நிச்சயம் உங்களால் அதனை செய்துமுடிக்க முடியும்.

- ஜான் செனா

WWE-க்கு வந்தபின்பு ஜான்செனா முதன்முதலில் ஒரண்டை இழுத்ததே ஒரு பெரியதலையிடம்தான். அந்த பெரியதலையும் ஒரு மொட்டைதலை, ஒலிம்பிக் ஹீரோ கர்ட் ஆங்கிள். முதல் மேட்ச் என்றுகூட பாராது அடித்து நொறுக்கினார் ஜான் செனா. ஜான் செனா கர்ட் ஆங்கிளை அடிக்க, கர்ட் ஆங்கிளை ஜான் செனா அடிக்க பரபரப்பாக சென்றுக் கொண்டிருந்தது மேட்ச். ஒருக்கட்டத்தில் அடிதாங்க முடியாமல் ஒலிம்பிக் யுக்தியை உபயோகப்படுத்திதான் சண்டையில் ஜெயித்தார் கர்ட். இப்படி முதல் சண்டையிலேயே மிகப்பெரும் எதிராளியை கதறவிட்ட ஜான் செனாவுக்கு, உடனடியாக ரசிகர்கள் உருவாகினர். சண்டை முடிந்ததும் அண்டர்டேக்கர், பில்லி கிட்மேன், ரிக்கிஷி, ஃபாரூக் ஆகியோர் `சூப்பர் ஜான் செனா' என வாழ்த்து தெரிவித்தனர். ஆமாம் பாஸ், WWE-க்கு வந்தபின்புதான் தனது பெயரை ஜான் செனா என சுருக்கிக்கொண்டார். கர்ட் ஆங்கிளைத் தொடர்ந்து க்றிஸ் ஜெரிக்கோவிடம் சில காலம், குரேரோக்களிடம் சில காலம் சண்டைப் பிடித்துவந்தவர், 2002 ஆம் ஆண்டு பில்லி கிட்மேனோடு இணைந்து டேக் டீம் சாம்பியன்ஷிப்பிற்காக சண்டையிட்டார். அந்த சண்டையில் தோற்றுவிட, அடுத்தவாரமே பில்லி கிட்மேன்தான் அவரது சாம்பியன்ஷிப் கனவுக்கு பில்லி சூனியம் வைத்துவிட்டாரென ஆக்ரோஷமாகி, பில்லியை பிளந்தெடுத்தார். ஜான் செனா தனது மல்யுத்த வரலாற்றில் வில்லன் அவதாரம் எடுத்த முதலும் கடைசியுமான தருணம் அதுதான். அதைத் தொடர்ந்து நடந்த ஹாலோவின் சிறப்பு நிகழ்ச்சியில், ராப்பர் வேடத்தில் வந்து ஜான் செனா ராப் பாடி அசத்த, `அட இதுவே நல்லாருக்கே' என அதையே அவரது கிம்மிக்காக மாற்றிவிட்டனர். அங்குதான் ராப்பர் ஜான் செனா, டாக்டர் ஆஃப் தக்கனாமிக்ஸ் உருவானார். டாக்டர் ஆஃப் தக்கனாமிக்ஸ், பிக் மேட்ச் ஜான், தி சீனேஷன் லீடர், தி செயின் கேங் சோல்ஜர், தி சாம்ப், தி ஃபேஸ் ஆஃப் WWE என்பதெல்லாம் ஜான் செனாவின் சாதனைகளுக்கு கிடைத்த பட்டபெயர்கள். 

ஆரம்பகாலத்தில், அசால்ட்டான உடல்மொழி, கைக்கு மைக் கிடைத்தால் கலாய்த்து தள்ளும் வழக்கம், ஹிப் ஹாப் ஸ்டைல் உடைகள், கழுத்தில் தொங்கும் இரும்புச் சங்கிலியில் டாலராக தொங்கும் பூட்டு... இவை எல்லாமே ரசிகர்களை `லைக்' போடவைத்தது. அதிலும் 500 பவுண்ட் பிக் ஷோவை அசால்டாக தூக்கி எறிந்ததில், மிரண்டே போனார்கள் ரசிகர்கள். பிக்‌ஷோவின் கையிலிருந்த யு.எஸ்.சாம்பியன்ஷிப் ஜான் செனாவுக்கு கிடைத்தது, சுற்றிவிட்டால் சுற்றும் பெல்ட் ரசிகர்களுக்கு கிடைத்தது. நம்மில் நிறையபேர் அந்தச் சுற்றும் பெல்ட்டை அட்டையில் செய்துபார்த்து இடுப்பில் கட்டி மகிழ்ந்திருப்போம். ஜான் செனா ஷார்ட்ஸ் வேண்டுமென்று புது ஜீன்ஸை மூன்று ஜாண் வெட்டி எறிந்திருப்போம். வீட்டின் பூட்டை கழுத்தில் தொங்கவிட்டு போஸ் கொடுத்திருப்ப்போம். அந்நேரத்தில்தான் WWE-ன் முகமாகவே ஜான் செனா மாறிக்கொண்டிருந்தார். இந்த பாக்கியம், ஹல்க் ஹோகன், ஸ்டோன் கோல்டுக்கு பிறகு ஜான் செனாவுக்குதான் கிடைத்தது. 16 முறை சாம்பியன், இரண்டு முறை ராயல் ரம்பிள் வெற்றியாளர், 10 ஸ்லாமி விருதுகளுக்கு சொந்தக்காரர். களத்தில் மட்டுமல்ல, நிஜ வாழ்க்கையில் சமூக நற்பணிகள் செய்வதிலும் ஐயா கில்லி.

2003-2005 காலக்கட்டங்களில் புகழின் உச்சத்தில் இருந்தார் ஜான் செனா. அந்தசமயங்களில் `உனக்கு  WWE-ல யார் பிடிக்கும்' என்கிற கேள்விக்கு `ஜான் செனா' என்ற பதில்தான் குவியும். அவரும் கர்லிடோ கரிபீயன் கூல், ஜேபிஎல், க்றிஸ் ஜெரிக்கோ என ஒவ்வொருவராய் அடித்து சாய்த்துவந்தார். ஜான் செனா - எட்ஜ் ரைவல்ரி நடந்ததெல்லாம் அப்போதுதான். நீதி, நேர்மை, நியாயம் என ஜான் செனா சண்டையில் கொள்கை பேச, `சண்டையில கொள்கையெல்லாம் கிடையாது ப்ரோ' என 420 வேலைகள் பார்த்து கடுப்படிப்பார் எட்ஜ். இருவருக்கும் இடையேயான ஒவ்வொரு மேட்சும் 'ரேட்டட் ஆர்' ரகம். அதிலும் லேடர் மேட்ச் லெஜண்டான எட்ஜை லேடரிலிருந்து டேபிளில் தூக்கி வீசியதெல்லாம் அல்டியோ அல்டி. அதன்பிறகு உமாகா, நெக்ஸஸ், சிஎம் பன்க், ப்ரே வெயிட், ப்ராக் லெஸ்னர் என இப்போதும் மல்லுக்கட்டிக் கொண்டிருக்கிறார். தலைமுறையின் சூப்பர்ஸ்டார்களுக்கு இடையேயான மோதலாக, ஜான் செனா - தி ராக் சண்டை ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. ஜான் செனா கடைசியாக கொண்டாடப்பட்டதும் அப்போதுதான். உண்மையில், ரசிகர்களுக்கு ஜான் செனா சலித்துவிட்டார். கிம்மிக், டெக்னிக், மூவ் ஏன் தீம் மியூசிக்கில் கூட இவ்வளவு ஆண்டுகளாக எந்த மாற்றமுமே இல்லை. இனியும் பால்வடியும் முகமாகவே இருக்காதீர்கள் ஜான் செனா, கொஞசம் வில்லத்தனம்தான் காட்டுங்களேன். ரசிகர்கள் மகிழ்வோம்... எவ்வளவோ பண்ணிட்டீங்க, இதை பண்ணமாட்டீங்களா?

நான் எப்பவும் விட்டுக்கொடுக்க மாட்டேன், புறமுதுகு காட்டி ஓடமாட்டேன்.

- ஜான் செனாTrending Articles

Sponsored