``இந்திய அணியும், போர்ட் எலிசபெத் மைதானமும்!'' - தடைகளை உடைக்குமா விராட் படை?



இந்தியா-தென்னாப்பிரிக்கா அணிகள் இடையிலான 5-வது ஒருநாள் போட்டி போர்ட் எலிசபெத்தில் உள்ள செயின்ட் ஜார்ஜ் பார்க் மைதானத்தில் நாளை (13.2.2018) நடைபெறுகிறது.

Sponsored


Photo: Twitter/ICC 

Sponsored



தென்னாப்பிரிக்கா சென்றுள்ள விராட் கோலி தலைமையிலான இந்திய அணி 3 டெஸ்ட், 6 ஒருநாள் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர்களில் விளையாடுகிறது. டெஸ்ட் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்த இந்திய அணி, ஒருநாள் தொடரின் முதல் 4 போட்டிகளில் மூன்றை வென்று 3-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இவ்விரு அணிகள் இடையிலான 4-வது ஒருநாள் போட்டி போர்ட் எலிசபெத் மைதானத்தில் நாளை நடக்கிறது. இந்திய அணியைப் பொறுத்தவரை இந்த மைதானத்தில் விளையாடிய 4 போட்டிகளிலுமே தோல்வியையே சந்தித்திருக்கிறது.

Sponsored


முதன்முதலாக 1992-ல் முகமது அசாருதீன் தலைமையில் தென்னாப்பிரிக்க அணியை எதிர்க்கொண்ட இந்திய அணி முதலில் பேட் செய்து 147 ரன்களுக்குச் சுருண்டது. இந்திய அணி நிர்ணயித்த இலக்கை 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து ஈட்டிய தென்னாப்பிரிக்கா, அந்தப் போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. அந்தப் போட்டியில் இந்திய அணியில் அதிகபட்சமாகத் தொடக்கவீரர் டபிள்யூ.வி.ராமன் 33 ரன்கள் எடுத்தார். 

அதேபோல், சச்சின் டெண்டுல்கர் தலைமையில் 1997-ல் அந்த மைதானத்தில் இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி விளையாடியது. அந்த போட்டியில் 50 ஓவர்கள் முழுமையாக பேட் செய்த இந்திய அணி 9 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் மட்டுமே எடுத்தது. 4-வது வீரராகக் களமிறங்கிய கேப்டன் சச்சின் டெண்டுல்கர் ஒரு ரன்னில் வெளியேறினார். தொடக்க வீரரான டிராவிட் மற்றும் மிடில் ஆர்டரில் களமிறங்கிய அசாருதீன் ஆகியோர் அரைசதம் அடித்தனர். இந்திய அணி நிர்ணயித்த 180 ரன்கள் வெற்றி இலக்கை ஜாக்ஸ் கல்லீஸின் 79 ரன்கள் உதவியுடன் 45.1 ஓவர்களில் எட்டியது. இதையடுத்து 2006-ல் வீரேந்திர சேவாக் தலைமையில் களமிறங்கிய இந்திய அணிக்கு 244 ரன்களைத் தென்னாப்பிரிக்க அணி வெற்றி இலக்காக நிர்ணயித்தது. இதில், கிப்ஸ் 99 ரன்களும், கல்லீஸ் 49 ரன்களும் எடுத்தனர். இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி 38.1 ஓவர்களில் 163 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்தப் போட்டியில் இந்தியா சார்பில் அதிகபட்ச ரன் குவித்தவர் 7-வது விக்கெட்டுக்குக் களமிறங்கிய இர்பான் பதான்தான். 47 ரன்களுடன் அவர் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். 

அதன்பின்னர், கடந்த 2011-ல் தோனி தலைமையில் இந்திய அணி களமிறங்கியது. அந்த போட்டியில் முதலில் பேட் செய்த தென்னாப்பிரிக்கா அணியில் அம்லா 64 ரன்களும், டுமினி 71 ரன்களும் எடுக்க, 266 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. இந்தப் போட்டியில் விராட் கோலி, தோனி மற்றும் பார்த்திவ் படேல் ஆகியோரைத் தவிர 8 வீரர்கள் பந்துவீசியது குறிப்பிடத்தக்கது. அடுத்து களமிறங்கிய இந்திய அணி 32.5 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 142 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டது. இதனால் டக்வொர்த் லீவிஸ் முறைப்படி தென்னாப்பிரிக்கா அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. போர்ட் எலிசபெத் மைதானத்தில் இந்திய அணி இதுவரை விளையாடியுள்ள 4 போட்டிகளிலும் தோல்வியையே சந்தித்திருக்கிறது. அதேபோல், இந்திய அணி அந்த மைதானத்தில் 200 ரன்களைக்கூட இதுவரை எட்டியதில்லை. நாளைய போட்டியில் இந்திய அணி வெல்லும்பட்சத்தில் போர்ட் எலிசபெத்தில் முதல் வெற்றியைப் பதிவு செய்வதுடன், தொடரையும் வெல்லும். 
 



Trending Articles

Sponsored