ஸ்கோர் 126, எக்ஸ்ட்ராஸ் 147.... தென்னாப்பிரிக்காவில் நோஹிட் ரோஹித்!Sponsoredகடைசி 10 ஒருநாள் போட்டிகளில் 687 ரன்கள். அதில் ஒரு இரட்டைச் சதம், இரண்டு சதங்கள், இரண்டு அரைசதங்கள். சராசரி 76.33. டர்பனில் ரோஹித் ஷர்மா களமிறங்கியபோது இந்திய ரசிகர்களிடம் அவர்மீது நம்பிக்கை அதிகமாகவே இருந்தது. டெஸ்ட் தொடரில் 78 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தபோதும் அவர்மீது நம்பிக்கை குறையவில்லை. ஏனெனில், இது வேற ஃபார்மட்... இது வேற ரோஹித்! ஒருநாள் போட்டிகளில் 3 இரட்டைச் சதங்கள் அடித்த ஒரே வீரராயிற்றே. அந்தப் போட்டியில் அவர் 20 ரன்களில் அவுட்டானார். அடுத்த போட்டியில் 15-க்கு அவுட். ரொம்பவுமே அதிர்ச்சியாக இருந்தது. சனிக்கிழமை வாண்டரர்ஸ் மைதானத்தில் நடந்த 4-வது ஒருநாள் போட்டியில் அவர் 5 ரன்களில் வெளியேறியபோது பெரிதாய் யாருக்கும் ஆச்சர்யமில்லை. ஏனெனில், இது பழகிவிட்டது. இந்தத் தென்னாப்பிரிக்கச் சுற்றுப்பயணத்தில் இதுவரை 8 இன்னிங்ஸில் வெறும் 118 ரன்கள்தான் அடித்துள்ளார். ரோஹித் ஏன் 'நோ'ஹிட் ஆனார்?. ஹிட் மேனுக்கு என்னதான் ஆச்சு...?

முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் ரஹானேவின் இடத்தில் ரோஹித் தேர்வுசெய்யப்பட்டதற்கே கடுமையான எதிர்ப்புக் கிளம்பியது. மூன்றாம் போட்டியில் அவர் நீக்கப்பட்டு ரஹானே தேர்வு செய்யப்பட்டதற்கும், அந்தப் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றதற்கும் அனைவரும் முடிச்சுப்போட, ஒருநாள் தொடரில் ஜொலிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தார் ரோஹித். ஆனால், இந்த 4 ஒருநாள் போட்டிகளிலுமே சொதப்பல். 40 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இந்த 4 போட்டிகளில் தென்னாப்பிரிக்க அணி விட்டுக்கொடுத்த எக்ஸ்ட்ரா (57 ரன்கள்) ரோஹித் அடித்த ஸ்கோரை விட அதிகம். ஆடுகளத்தில் பிரச்னை இல்லை. மற்றொரு ஓப்பனர் ஷிகர் தவான் 1 சதம், 2 அரைசதம் உள்பட 271 ரன்கள் குவித்துவிட்டார். கேப்டன் விராட் 373 ரன்கள் குவித்து வேறு லெவல் ஃபார்மில் இருக்கிறார். ஆக, தென்னாப்பிரிக்க ஆடுகளங்களைக் குறைகூறிப் பயனில்லை. 

Sponsored


'எப்பேர்ப்பட்ட வீரருக்கும் ஒரு தொடரில் அடி சறுக்கும்' என்று நமக்கு நாமே சமாதானம் சொல்லிக்கொள்ள முடியாது. 2011 ஜனவரி மாதம் தென்னாப்பிரிக்க அணியுடன் நடந்த 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் அவர் அடித்தது வெறும் 49 ரன்கள். 2013-ம் ஆண்டு நடந்த தொடரிலும் அவரால் சோபிக்க முடியவில்லை. இரண்டு போட்டிகளில் 37 ரன்கள். மொத்தத்தில் தென்னாப்பிரிக்க ஆடுகளங்களில் 11 ஒருநாள் போட்டி இன்னிங்ஸ்களில் அவர் எடுத்த ஸ்கோர்...126! இதில் அதிகபட்சமே 23 தான். அந்த 11 இன்னிங்ஸ்களில் தென்னாப்பிரிக்க பௌலர்கள் கொடுத்த உதிரிகள் மூலம் இந்தியாவுக்குக் கிடைத்தது 147 ரன்கள். ரோஹித் ஷர்மா மூலம் வந்த ரன்களைவிட தென்னாப்பிரிக்க பௌலர்கள் கொடுத்த ரன்கள்தான் அதிகம். 7 வருடங்களாய் அவரால் இங்கு சோபிக்கவே முடியவில்லை. 

Sponsored


இங்கிலாந்தில் நடந்த சாம்பியன்ஸ் டிராஃபியில் கலக்கியிருக்கிறார். ஆஸ்திரேலிய மண்ணில் 51.95 சராசரி வைத்துள்ளார். வெளிநாட்டு மண்ணிலும் அவர் சாதித்திருக்கிறார். உண்மைதான். ஆனால், ரோஹித்தின் பிரச்னை துணைக்கண்டத்துக்கு வெளியிலான ஆடுகளம் என்று பொத்தம் பொதுவாகச் சொல்லிவிட முடியாது. "ரோஹித் ஷர்மா தென்னாப்பிரிக்காவில் சொதப்புவதற்கு அவரது அணுகுமுறைதான் காரணம். இந்தியா, ஆஸ்திரேலியா ஆடுகளங்களில் அவருக்குப் பிரச்னை இல்லை. காரணம், அங்கு சீரான பௌன்ஸ் இருக்கும். தென்னாப்பிரிக்க ஆடுகளங்களில் seam, பௌன்ஸ் இரண்டுமே இருப்பதால்தான் அவர் திணறுகிறார்" என்று முன்னாள் தென்னாப்பிரிக்க கேப்டன் கெப்ளர் வெஸல்ஸ் தெரிவித்திருந்தார். பிரச்னை இங்குதான்.

ரோஹித் எப்போதுமே தொடக்கத்தில் கொஞ்சம் மெதுவாக ஆடிவிட்டு, அதன்பிறகுதான் தன் இன்னிங்ஸை நிலைநிறுத்துவார். அதுவரை ஆடுகளத்தின் தன்மையை அறிந்துகொள்வார். பின்பு அதற்கு ஏற்றதுபோல் தன் ஆட்டத்தை வேகப்படுத்துவார். இந்திய ஆடுகளங்கள் மிகவும் 'ஸ்லோ'வானவை. பந்து நின்று மெதுவாகவே பேட்ஸ்மேனை அடையும். அந்த டைமிங்கை ரோஹித் நன்கு பயன்படுத்திக்கொள்வார். ஆஸ்திரேலியாவில் பௌன்ஸ் அதிகமாக இருக்கும். ஆனால், seam இருக்காது. எந்த அளவுக்கு பௌன்ஸுக்கு ஆடுகளம் ஒத்துழைக்கிறது என்று தொடக்கத்தில் தெரிந்துகொண்டால், அது ஆடுவதற்குக் கொஞ்சம் எளிதாக இருக்கும். இங்கிலாந்தில் ஸ்விங். இங்கும் பெரிய அளவில் seam இருக்காது. ரோஹித் இங்கெல்லாம் ஜொலிக்கக் காரணமே அதுதான். 

ஒற்றைத் தன்மையுள்ள ஆடுகளங்களுக்கு ஏற்றதுபோல் அவரால் தன் ஆட்டத்தை மாற்றிக்கொள்ள முடிகிறது. ஆனால், seam, பௌன்ஸ் இரண்டுக்கும் ஒத்துழைக்கும் ஆடுகளங்களில் அவர் திணறுகிறார். இரண்டு விஷயங்களையும் சேர்ந்தார்போல் அவரால் பேலன்ஸ் செய்ய முடிவதில்லை. தென்னாப்பிரிக்காவைப்போலவே seam. பௌன்ஸ் இரண்டுக்கும் ஒத்துழைக்கும் நியூசிலாந்து ஆடுகளங்களிலும் இவரது சராசரி (38.28) குறைவுதான்.  முதல் ஒருநாள் போட்டியில் மோர்னே மோர்கல் வீசிய ஷார்ட் பௌன்ஸருக்கு அவுட்டானது, ரோஹித்தின் தடுமாற்றத்தை அப்பட்டமாகக் காட்டும். 

இந்தத் தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணத்தில் மட்டும் 6 முறை ரபாடா பந்துவீச்சிலேயே ஆட்டமிழந்திருக்கிறார். மொத்தத்தில், தென்னாப்பிரிக்காவில் விளையாடிய 11 இன்னிங்ஸ்களில் 10 முறை வேகப்பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சில்தான் அவுட்டாகியுள்ளார். ஒரு முறை ரன் அவுட். ஆக, seam மற்றும் பௌன்ஸ் இரண்டுக்கும் ஒத்துழைக்கும் ஆடுகளங்களில், வேகப்பந்துவீச்சாளர்களிடம் ரோஹித் திணறுகிறார். உண்மையைச் சொல்லவேண்டுமெனில், இந்தியத் துணைக்கண்டத்திலும் ரோஹித் திணறியுள்ளார்.

இலங்கை ஆடுகளங்கள் இந்திய ஆடுகளங்களைப்போல் சுழலுக்கு நன்றாக ஒத்துழைக்கும். ஆனால், அவை இந்திய ஆடுகளங்களிலிருந்து மாறுபட்டவை. அங்கு பௌன்ஸ் சீராக இருக்காது. ஆஸ்திரேலிய ஆடுகளங்களில் பந்து சீராக எகிறும். எங்கு பிட்ச் ஆனால் எந்த அளவுக்கு எகிறும் என்பதை பேட்ஸ்மேன்களால் ஓரளவு கணிக்க முடியும். ஆனால், இலங்கையில் அப்படியல்ல. ஆஸ்திரேலிய ஆடுகளங்களைப் போல் பந்து எகிறாது. ஆனால், தாறுமாறாக பௌன்ஸ் ஆகும். ஒரு பந்து இந்திய ஆடுகளத்தைப் போல் சீராக வரும். அடுத்த பந்தே திடீரென்று மார்பளவு உயர்ந்து வரும். இதுபோன்ற ஆடுகளங்களில் கொஞ்சம் பொறுமையுடன் கவனமாக ஆடவேண்டும். இப்படி சீரில்லாத பௌன்ஸ் கொண்ட ஆடுகளங்களிலும் ரோஹித் திணறுவது சகஜம். 

கடந்த ஆகஸ்ட் மாதம் இலங்கையில் நடந்த ஒருநாள் தொடரில் இரண்டு சதங்கள் அடித்தார் ரோஹித். இருந்தும், அங்கு அவரது ஒருநாள் சராசரி 25.34 தான். அங்கு விளையாடிய 26 இன்னிங்ஸ்களில் 583 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். 2012-ம் ஆண்டு அங்கு நடந்த ஒருநாள்  தொடரில், 5 போட்டிகளில் இவர் அடித்தது வெறும் 13 ரன்களே. சீரில்லாத பௌன்ஸின் காரணமாக மேத்யூஸ், நுவான் பிரதீப் ஆகியோரிடம்கூட தலா இருமுறை வீழ்ந்தார் ரோஹித். 'துணைக்கண்டத்தில் ரோஹித் கில்லி' என்றும் நம்மால் சொல்லிவிட முடியாது. ஏனெனில், ஒரே போன்ற தன்மையுடைய ஆடுகளங்களில் மட்டுமே அவரால் ஆடமுடியும். இலங்கை அதற்கு விதிவிலக்கு.

கோலி, ஸ்டீவ் ஸ்மித் போன்ற பேட்ஸ்மேன்கள் எல்லா நாடுகளிலும், எல்லா வகையான ஆடுகளங்களிலும் ஜொலிப்பதற்கு அவர்களது அணுகுமுறைதான் காரணம். ஆடுகளத்தின் தன்மை, பௌலரின் தரம், பந்து பிட்ச் ஆகும் லெங்த், பந்தின் வேகம், ஃபீல்டர்கள் நிற்கும் திசை என அனைத்தையும் சரியாகக் கணக்கிட்டு, அதற்கேற்ப தங்களின் ஷாட்களைத் தீர்மானிக்கிறார்கள். ஆனால், ரோஹித்...?ஆடுகளத்தின் தன்மையை மட்டும் கருத்தில் கொண்டு, பந்தின் லெங்துக்கு மட்டுமே ஆடுகிறார். அதனால்தான் அவரால் தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து போன்ற ஆடுகளங்களில் ஜொலிக்க முடியவில்லை. 

ரோஹித் ஷர்மாவின் அணுகுமுறை மற்ற ஓப்பனர்களின் ஆட்டத்தை பாதிக்கும் என்று ஏற்கெனவே ஒரு கட்டுரையில் அலசியிருந்தோம். இந்தத் தொடரில், தவான் சுதந்திரமாகவும், சிறப்பாகவும் ஆடுவதிலேயே அதுவும் தெளிவாகப் புலப்படுகிறது. ரோஹித் ஒருபுறம் நிலைத்து நிற்பதற்காகப் பொறுமையாக ஆட, அது தவான் மீதான பிரஷரை அதிகரித்து வந்துள்ளது. ஆனால், இந்தத் தொடரில் தவான் தொடக்கத்திலிருந்தே கூலாக விளையாடுகிறார். காரணம், மறுபுறம் கோலி ரன்ரேட் குறையாமல் சீராக ரன் எடுத்துவிடுகிறார். அதனால் இவர்மீது எந்த நெருக்கடியும் இல்லை. சரி, இதை ஏன் இப்போது பேசவேண்டும்...?

ரஹானே மிடில் ஆர்டரில் ஆடுவது அணிக்கு அவ்வளவாக உதவாது என்று பலரும் கூறுகின்றனர். ஒருவகையில் அது சரிதான், சேஸிங்கின்போது அதிகமான ரன்ரேட் தேவைப்படும் இடத்தில், மெதுவாக ஆடும் அணுகுமுறை, மற்ற பேட்ஸ்மேன்கள் மீதான பாரத்தைக் கூட்டும். அது மொத்த அணிக்குமே பாதிப்புதான். அதேபோல்தான் ரோஹித் ஷர்மாவின் அணுகுமுறையும். இந்திய ஆடுகளங்களுக்கு அது ஓகே. ஏனெனில், அவர் மெதுவாகத் தொடங்கிவிட்டுப் பின்னர் நிலைத்து நின்று அடித்துவிடுவார். ஆனால், தென்னாப்பிரிக்கா போன்ற ஆடுகளங்களில்? கோலி, தவான் போன்றவர்கள் ஜொலிக்கத் தவறும் அந்த வெகுசில போட்டிகளில். இதுபோன்ற இடங்களில், ரோஹித்தைவிட, ரஹானே ஓப்பனிங் இறங்க நல்ல சாய்ஸாக இருப்பார். 

எப்படி டெஸ்ட் போட்டிகளில், இந்திய ஆடுகளங்களுக்கு 2 ஸ்பின்னர்கள், வெளிநாட்டு ஆடுகளத்தில் 1 ஸ்பின்னர் என இந்திய அணி வேறு பிளானோடு களமிறங்குகிறதோ, ஒவ்வொரு ஃபார்மட்டுக்கும் வேறு வேறு ஓப்பனர்கள், வேறு வேறு ஸ்பின்னர்கள் என வகைப்படுத்தி வைத்திருக்கிறதோ, அதுபோல், இனி ஆடுகளங்களின் தன்மைக்கு ஏற்ப வீரர்களைத் தேர்வு செய்வதற்கும் தயாராக இருக்கவேண்டும். இனியும் ஃபார்ம், சாதனைகள் என்று காரணங்கள் சொல்லிக்கொண்டிருந்தால், இந்த டெஸ்ட் தொடரைப்போல் தொடர்களை இழக்க நேரிடும்... இரண்டாவது டெஸ்ட் போட்டி முடிந்ததும் சரமாரியாக கேட்கப்பட்டதுபோல் கேள்விகள் கேட்கப்படும்...!Trending Articles

Sponsored