``ஒற்றைக் கையில் அசத்தல் கேட்ச்!’’ - நியூசிலாந்து மாணவருக்கு ரூ.24 லட்சம் பரிசு (வீடியோ)ஆஸ்திரேலியா அணிக்கெதிரான டி20 போட்டியின்போது நியூசிலாந்து வீரர் ராஸ் டெய்லர் சிக்ஸருக்கு விளாசிய பந்தை ஒற்றைக் கையில் பிடித்த பல்கலைக்கழக மாணவருக்கு 50,000 நியூசிலாந்து டாலர்கள் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. 

Sponsored


ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் 3 நாடுகள் டி20 தொடர் நியூசிலாந்தில் நடந்து வருகிறது. இந்தத் தொடரின் முக்கியமான லீக் சுற்றுப் போட்டி ஆக்லாந்து மைதானத்தில் நடந்தது. இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி மார்டின் கப்திலின் சதத்தின் உதவியுடன் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 243 ரன்கள் குவித்தது. கப்தில் 105 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். காலின் மன்ரோ 76 ரன்கள் எடுத்தார். இமாலய இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்குத் தொடக்க வீரர்கள் கைகொடுக்க 18.5 ஓவர்களிலேயே 5 விக்கெட்டுகளை மட்டும் இழந்து வெற்றி இலக்கை எட்டியது. ஆஸ்திரேலிய அணியில் அதிகபட்சமாக டிஆர்கி ஷார்ட் 76 ரன்களும், டேவிட் வார்னர் 59 ரன்களும் எடுத்தனர். இதன்மூலம் டி20 வரலாற்றில் அதிகபட்ச ரன்களை சேஸ் செய்த அணி என்ற சாதனையை ஆஸ்திரேலியா படைத்தது. 

Sponsored


இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 20-வது ஓவரின் 4-வது பந்தை எதிர்கொண்ட நியூசிலாந்து வீரர் ராஸ் டெய்லர், அதை சிக்ஸருக்கு விளாசினார். மைதானத்தின் எல்லைக்கோட்டிற்கு அருகில் நின்றிருந்த வீரரைத் தாண்டிச் சென்ற அந்தப் பந்தை, ரசிகர்களுக்கான கேலரியில் நின்றிருந்த மிட்செல் க்ரிம்ஸ்டோன் எனும் பல்கலைக்கழக மாணவர், ஒரு கையில் லாகவமாக கேட்ச் பிடித்தார். இதையடுத்து, க்ரிம்ஸ்டோனைச் சுற்றியிருந்த நண்பர்கள் அவருக்கு வாழ்த்துத் தெரிவித்தனர். போட்டியின் போது மைதானத்திலிருக்கும் ரசிகர்கள் சிக்ஸருக்கு விளாசப்படும் பந்தை கேட்ச் பிடித்தால், அவர்களுக்கு 50,000 நியூசிலாந்து டாலர்கள் பரிசுத் தொகை (இந்திய மதிப்பில் சுமார் 24 லட்ச ரூபாய்) வழங்கப்படும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, அசத்தலாகக் கேட்ச் பிடித்த க்ரிம்ஸ்டோனுக்கு அந்தப் பரிசுத் தொகை வழங்கப்பட இருக்கிறது. பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகள் இடையில் துனேதின் மைதானத்தில் நடைபெற்ற 3-வது ஒருநாள் போட்டியில் இதேபோல் கேட்ச் பிடித்த ரசிகர் ஒருவருக்குப் பரிசுத் தொகை வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Sponsored
Trending Articles

Sponsored