கடைசி நிமிடத்தில் கிடைத்த கோல்: அரையிறுதியை நெருங்கும் சென்னையின் எஃப்.சி! #LetsFootball #HeroISLSponsoredசென்னை மெரினா அரினாவில் கூடியிருந்த ரசிகர்களின் கூட்டம் 89-வது நிமிடம் வரை ஏங்கிக்கொண்டிருந்தது, ஒரே ஒரு கோலுக்காகத்தான். `வெற்றி பெறாமல்போனாலும் பரவாயில்லை. ஆனால், தோற்றுவிடக் கூடாது' என்பதுதான் நேற்றைய போட்டியைப் பார்த்துக்கொண்டிருந்த, சென்னை ரசிகர் ஒவ்வொருவரின் எதிர்பார்ப்பு. அதற்கு ஏற்றாற்போல் 89-வது நிமிடத்தில் சென்னையின் முகமது ரஃபி ஹெட்டிங் செய்து கோலடிக்க, கூடியிருந்த 13,195 ரசிகர்களும் உற்சாகத்தின் உச்சத்துக்குச் சென்றனர். கடைசிவரை விறுவிறுப்பாகச் சென்ற ஜாம்ஷெட்பூர் அணிக்கு எதிரான இந்தப் போட்டியை, சென்னை அணி போராடி டிரா செய்து, புள்ளிப் பட்டியலில் மூன்றாவது இடத்தைத் தக்கவைத்துக்கொண்டது. இதன்மூலம், அடுத்த சுற்று வாய்ப்பிலும் நீடிப்பது டபுள் சந்தோஷம்தானே!

ஐ.எஸ்.எல் புள்ளிப் பட்டியலில் முறையே 3-வது மற்றும் 4-வது இடங்களில் உள்ள சென்னையின் எஃப்.சி மற்றும் ஜாம்ஷெட்பூர் அணிகள், நேற்று மாலை சென்னை மெரினா அரினாவில் மோதிக்கொண்டன. இரு அணிகளும் வெற்றிக்காகப் போராடிய இந்த ஆட்டம் 1-1 என்ற கோல்கணக்கில் டிராவில் முடிந்தது. ஜாம்ஷெட்பூர் அணிக்காக வெல்லிங்டன் பிரயோரி மற்றும் சென்னை அணிக்காக முகமது ரஃபி ஆகியோர் கோல் அடித்தனர்.

Sponsored


ஆட்டத்தின் முதல் பாதியில், இரு அணிகளும் நிதானமான ஆட்டத்தையே கையாண்டன. அதிலும் ஜாம்ஷெட்பூரின் கட்டுக்கோப்பான டிஃபென்ஸைத் தாண்டி, சென்னை வீரர்களால் எதிர் அணியின் கோல் பாக்ஸுக்குள் செல்லவே முடியவில்லை. குறிப்பாக, ஜாம்ஷெட்பூரின் ஆண்ட்ரே பிக்கி, நடமாடும் மலையாக நின்று, சென்னை அணி வீரர்களின் முயற்சிகளையெல்லாம் தவிடுபொடியாக்கித் தடுத்து பட்டையைக் கிளப்பினார். மேலும், கிடைத்த ஒன்றிரண்டு வாய்ப்புகளையும், சென்னையின் `ஃபேன் ஃபேவரிட்' ரஃபேல் அகஸ்டோ வீணடிக்க, ஜாம்ஷெட்பூரின் கோல்கீப்பர் சுப்ரதா பாலுக்கு வேலையே இல்லாமல்போனது.

Sponsored


ஆட்டத்தின் 32-வது நிமிடத்தில் ஜாம்ஷெட்பூர் வீரர் வெலிங்டன் பிரயோரி, சூப்பர் `volley' கோல் ஒன்று அடித்து தன் அணிக்கு முன்னிலை பெற்றுத்தந்தார். ஃப்ரீ கிக் மூலம் கோல் பாக்ஸுக்குள் வந்த பந்தை, சென்னையின் இனிகோ கால்டெரான் க்ளியர் செய்ய, பழம் நழுவி பாலில் விழுவதுபோல பந்து ஜாம்ஷெட்பூரின் வெலிங்டனிடம் விழுந்தது. தாமதிக்காமல் அவர் பந்தை வலையின் `பாட்டம் லெஃப்ட் கார்னரு'க்கு அனுப்பிவைக்க, பந்தை தடுக்க டைவ் அடித்த சென்னை கீப்பர் கராஞ்சித் சிங்கை ஏமாற்றிவிட்டு கோலாகியது. ஆட்டத்தின் முதல் பாதியில் ஜாம்ஷெட்பூரின் கையே ஓங்கியிருந்தது. சென்னை வீரர்களால் பெரிய அளவில் அட்டாக் செய்ய முடியவில்லை. குறிப்பாக, ஜாம்ஷெட்பூர் டிஃபென்ஸைத் தாண்டி சென்னை வீரர்களால் பந்தை கோல் பாக்ஸுக்குள் கொண்டு செல்லவே முடியவில்லை. 

இரண்டாம் பாதி தொடங்கியதுமே விழித்துக்கொண்ட சென்னை அணி, ஆட்டத்தை தன் கையில் எடுத்துக்கொண்டது; சூப்பரான பாஸிங் கேமுடன் பந்தையும் அதிக நேரம் தன் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டது. ஆனாலும்கூட, அவர்களால் பவர்ஃபுல் கவுன்ட்டர் அட்டாக் செய்து, ஜாம்ஷெட்பூரின் டிஃபென்ஸைக் கலங்கடிக்க முடியவில்லை. மேலும் ரஃபேல் அகஸ்டோ, மெயில்சன் மற்றும் பிக்ரம்ஜித் ஆகியோரும் கிடைத்த வாய்ப்புகளை வீணடிக்க நேரமும் வீணாகிக்கொண்டே இருந்தது. ஆட்டத்தின் 89-வது நிமிடத்தில், சென்னை பதில் கோல் திருப்பியது. கார்னர் கிக் வாய்ப்பில் மாற்று வீரராகக் களமிறங்கிய ரெனெ மெஹிலிச் பந்தை க்ராஸ் செய்ய, மற்றொரு மாற்றுவீரரான முகமது ரஃபி அதை அற்புதமாக ஹெடிங் செய்து கோல் போஸ்டின் `டாப் ரைட் கார்னரு'க்கு அனுப்பிவைத்தார். ஜாம்ஷெட்பூர் கோல்கீப்பர் சுப்ரதா பால் மற்றும் டிஃபெண்டரைத் தாண்டி பந்து வலைக்குள் சென்றதும்தான், சென்னை ரசிகர்களுக்கு நிம்மதியே பிறந்தது. கூட்டத்தில் மகிழ்ச்சி ஆராவாரம் பிறந்தது. ஆட்டத்தின் கடைசி நிமிடம் வரை இரு அணி வீரர்களும் வெற்றிக்குப் போராடினார்கள் என்றாலும், ஆட்டம் ஒருவழியாக டிராவில் முடிந்தது.

சூப்பர் `volley' கோல் அடித்த ஜாம்ஷெட்பூரின் வெலிங்டன் பிரயோரி, ஆட்ட நாயகன் விருதைத் தட்டிச் சென்றார். தொடர்ந்து புள்ளிப் பட்டியலில் மூன்றாவது இடத்தில் நீடிக்கும் சென்னை அணி, தனது அடுத்த போட்டியில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

சதர்ன் டெர்பிக்கு ரெடியாகுங்க கய்ஸ்!Trending Articles

Sponsored