பத்தாவது விம்பிள்டன், களிமண் தரையில் முத்திரை, செரினாவை விஞ்சுவது... இதெல்லாம் நடக்குமா ஃபெடரர்?!Sponsored“வயசானாலும்... உன் திறமையும் ஸ்டைலும் குறையவே இல்ல” என்று நீலாம்பரியைப் போல நம்மால் ஃபெடரரைப் பார்த்துக் கூற முடியும். 36 வயதிலும் முதலிடத்தைத் தக்கவைத்துக்கொள்வது என்பது இயல்பான செயலல்ல. ரோட்டர்டாம் ஓபனில் ராபின் ஹாசை வீழ்த்தியதன் மூலமாக, 33 வயதில் ஆண்ட்ரே அகாசி செய்திருந்த சாதனையை முறியடித்திருக்கிறார் ஃபெடரர். இன்னும் கொஞ்சம் தீராத வேட்கையோடு போராடினால் ஃபெடரர் மேலும் பல சாதனைகள் செய்யலாம். அவை என்னென்ன? 

“இப்பொழுதும் எப்பொழுதும் எனக்கு மிகவும் விருப்பமான போட்டி விம்பிள்டன். இங்கு விளையாடுவது எனக்குப் பெருங்கனவு. இது என்னுடைய கடைசிப் போட்டி இல்லையென்று நம்புகின்றேன். அடுத்த ஆண்டும் விளையாடி என்னுடைய பட்டத்தைத் தக்கவைத்துக் கொள்வேன் என்று நம்புகின்றேன்..."- இது 2017-ம் ஆண்டு எட்டாவது விம்பிள்டன் பட்டத்தை வென்றவுடன் ஃபெடரர் கூறியது. 

Sponsored


இதுவரை 11 முறை விம்பிள்டன் ஃபைனலில் விளையாடிய ஃபெடரர், எட்டு முறை சாம்பியன் பட்டம் வென்றிருக்கிறார். இப்போது செலுத்தும் இதே உழைப்பை அவர் தக்கவைத்தால், தனக்கு மிகவும் பிடித்தமான போட்டியில் பத்து முறை வென்ற சாதனையைப் படைப்பார் அவர்! 

Sponsored


“சரியான திட்டமிடுதலோடு, என் வேட்கையை நான் அணையாமல் பார்த்துக்கொள்வேன், அப்போது நல்லபடியாக சில நிகழ்வுகள் நடக்கலாம். அதனால், வயது என்பது ஒரு பொருட்டாகவே இருக்காது.”

ஆஸ்திரேலிய ஓபன் போட்டியைக் கடந்த ஜனவரி மாதம், ஆறாவது முறையாக வென்ற ஃபெடரர், அதன் மூலமாக, இப்போட்டியை வென்ற இரண்டாவது வயதான மனிதர் ( 36 வயது, 173 நாள்கள்) என்ற சாதனையைப் படைத்தார். முதல் இடத்தைப் பிடித்தது, ஆஸ்திரேலிய ஜாம்பவான் கென் ரோஸ்வால். 1972-ம் ஆண்டு இந்தப் பட்டத்தை வென்றபோது அவருக்கு 37 வயது 62 நாள்கள் ஆகியிருந்தது.

ஆகஸ்ட் எட்டாம் தேதி தன்னுடைய 37-வது பிறந்தநாளைக் கொண்டாடவிருக்கும் பெடரர், மீண்டும் ஒரு முறை ஆஸ்திரேலிய ஓபன் போட்டியில் வென்றால், கென்னின் சாதனையை அவர் சமன் செய்வார். அதற்கான சாத்தியக் கூறுகளை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 

“ஸ்டட்கார்ட்டில் முதல் சுற்றில் தோல்வியடைந்தவுடன் நான் சற்று ஆடித்தான் போனேன். கடந்த பதினைந்து ஆண்டுகளில் அவ்வாறு நடந்ததில்லை. அதை மறந்துவிட்டு முன்னேற வேண்டும். அவ்வளவே”  2017, ஹாலே பட்டத்தை வென்றவுடன் பெடரர் சொன்ன வார்த்தைகள் இவை.   

விம்பிள்டன் தொடருக்கு முன்னதாக பயிற்சிக்கு ஃபெடரர் தேர்வு செய்வது, ஜெர்மனியில் உள்ள ஹாலே ஓபன் போட்டிகள்தாம். கடந்த ஐந்து ஆண்டுகளில் நான்கு பட்டங்கள் உள்பட அங்கு மொத்தம் ஒன்பது பட்டங்கள் வென்றுள்ளார். எனவே, ஹாலே கெர்ரி வெபர் ஓபன் போட்டியில் தன் பத்தாவது பட்டத்தையும் இந்த ஆண்டு வெல்வார் என எதிர்பார்க்கலாம். 

ஸ்விட்சர்லாந்தின் பாஸல் போட்டிகளில் தன்னுடைய 12 வயதில் பால் பாயாக இருந்தவர் ஃபெடரர். இதுவரை பாஸல் ஓபன் தொடரில் எட்டு முறை பட்டம் வென்றுள்ள அவர், இன்னும் இரண்டு முறை பட்டம் பெற்றால் சொந்த மண்ணில் பத்து பட்டங்கள் பெற்றவர் என்ற பெருமை கிடைக்கும். 

“நீண்ட காலம் செல்ல வேண்டுமென்றால் அதற்குத் திட்டமிடுதல் மிகவும் இன்றியமையாதது என்று உணர்ந்திருக்கின்றேன். எனவே, ஒரே ஒரு முறை நான் களிமண் அரங்கத்தில் விளையாடுவது எவ்விதத்திலும் என்னுடைய உடல்சார்ந்த மெனக்கெடுதலுக்கோ அல்லது டென்னிஸ் வாழ்க்கைக்கோ பெரிய தாக்கத்தை அளிக்கப் போவதில்லை என்று நானும் என் குழுவும் உணர்ந்தோம்" -  இந்த ஆண்டு ஃபெடரர் களிமண் அரங்கில் விளையாடுவதன் வாய்ப்பு குறைவாக உள்ளதால், இரண்டாவது முறையாக ஃபிரெஞ்சு ஓபன் பட்டத்தை வெல்வது கடினம்தான். ஆனால், அவ்வாறு நிகழ்ந்தால், ஒவ்வொரு கிராண்ட்ஸ்லாம் பட்டத்தையும் இரண்டு முறை வென்ற பெருமை ஃபெடரருக்கு வந்துசேரும். 

கடந்த ஆண்டு களிமண் அரங்கில் எவ்விதப் போட்டிகளிலும் கலந்துகொள்ளாமல், ஹாலே மற்றும் விம்பிள்டன் போட்டிகளில் கலந்துகொண்டு பட்டம் வென்று அசத்தினார் ஃபெடரர். எனவே, இந்த ஆண்டு அவர் பாரிஸில் விளையாடுவாரா என்பது சந்தேகமே. 

“அது எனக்குக் கொஞ்சம் குழப்பமும் விசித்திரமுமான ஒரு உணர்வுதான். முதலிடத்தைத் தக்கவைத்துக்கொள்வது விளையாட்டுத் துறையில் மிக மிக முக்கியமான ஒன்று. உங்களுக்கு வயதாகும்போது நீங்கள் கூடுதல் உழைப்பைச் செலுத்தியாகவேண்டுமல்லவா? அதனால் எனக்கு இந்த இடம் இப்போது மிக முக்கியமான ஒன்றாக இருக்கின்றது. ஒரு கனவு நனவானது போல..."- ராட்டர்டாம் போட்டியில் வென்று முதலிடத்தைத் தக்கவைத்துக்கொண்டபோது இப்படிக் கூறினார் ஃபெடரர்.

Open Era-வுக்குப் பின் அதிகப்படியான கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றவர் என்ற சாதனையை, 23 ஸ்லாம் பட்டங்களோடு செரீனா வில்லியம்ஸ் வைத்துள்ளார். 20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள் கொண்ட ஃபெடரர் இச்சாதனையை முறியடிப்பாரா என்று பொறுத்திருந்து பார்ப்போம். 109  பட்டங்கள் கொண்ட ஜிம்மி கொன்னோரின் சாதனையை, 96 பட்டங்கள் கொண்ட ஃபெடரர் முறியடித்தால் மேலும் ஒரு வரலாற்றுச் சாதனையை நிகழ்த்திவிடுவார். Trending Articles

Sponsored