சென்னை அணிக்குத் தேவை இன்னும் 1 புள்ளி...3 இடத்துக்கு 6 அணிகள் போட்டி! #LetsFootball #HeroISLSponsoredஇறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்ட ஐஎஸ்எல் தொடரில், அரையிறுதி வாய்ப்பை முடிவு செய்ய வேண்டிய  இக்கட்டான நிலையில், சென்னையின் எஃப்சி, கேரளா பிளாஸ்டர்ஸ் அணிகள் மோதிய போட்டி, கோல் ஏதுமின்றி டிராவில் முடிந்தது. சென்னையின் சூப்பர் கீப்பர் கரண்ஜித் சிங் அபாரமாக கோல்களைத் தடுக்க, கிடைத்த பெனால்டி வாய்ப்புகளை கேரள வீரர்கள் வீணடிக்க, கேரளாவின் அரையிறுதி வாய்ப்பு கேள்விக்குறியானது. #HeroISL 

”மஞ்சப்படா” என்றழைக்கப்படும், யெல்லோ ஆர்மி சேட்டன்களால் நிரம்பி வழிந்த கொச்சி மைதானத்தில், பெருத்த ஆரவாரத்துடன் தொடங்கிய இப்போட்டியில் இரு அணிகளுமே சம பலத்துடன் களமிறங்கின. காயத்தால் கேரளா வீரர் இயான் ஹியூம், நான்கு மஞ்சள் அட்டைகள் பெற்றதால் சென்னை வீரர் மெயில்சன் இருவர் மட்டும் மிஸ்ஸிங். மற்றபடி போட்டியில் விறுவிறுப்புக்கும் பரபரப்புக்கும் பஞ்சமேயில்லை. 

Sponsored


ஏறக்குறைய 34,000 ரசிகர்கள் முன்னிலையில் நடந்த இந்தப் போட்டியில், இரு அணிகளுமே கோல் அடிப்பதில் கவனமாக இருந்தன. குறிப்பாக கேரளா அணி துரித அட்டாக்கில் கவனம் செலுத்தியது. மாறாக சென்னை அணியோ, பந்தை அதிக நேரம் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் பாஸிங் கேமைக் கையிலெடுத்தது. சென்னை அணி ஆட்டத்தை மெள்ளமெள்ள கட்டுமானம் செய்துகொண்டிருக்க, திடீர் திடீரென அட்டாக் செய்தது கேரளா. ஆனாலும், சென்னையின் மரண மாஸ் டிஃபென்ஸையும், கோல்கீப்பர் கரண்ஜித்தையும் தாண்டி அவர்களால் எதுவும் செய்ய முடியவில்லை. 

Sponsored


போட்டியின் 22-வது நிமிடத்தில் கேரளாவின் சி.கே.வினீத் அடித்த ஷாட், வலது கோல் கம்பத்தில் பட்டு வெளியேற, மேற்கொண்டு கேரளா வீரர்கள் எடுத்த முயற்சிகளெல்லாம் கரன்ஜித்தின் கைகளில் பட்டு வெளியேறிக்கொண்டிருந்தது. முதல்பாதியின் இறுதி நிமிடத்தில் கிடைத்த எளிய வாய்ப்பை, சென்னையின் ஜேஜே வெளியே அடித்து நழுவவிட, போட்டியின் முதல்பாதி கோல்களின்றி முடிந்தது.

இரண்டாம் பாதி தொடங்கியதும், திடீர் திருப்பமாக கேரளாவுக்கு ஒரு பெனால்டி கோல் அடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. பெனால்டியில் வாப்பைக் கையிலெடுத்த கேரளாவின் பெக்யூசன், பாட்டம் லெஃப்ட் கார்னரை நோக்கி பந்தை உதைக்க, அதை எதிர்பார்த்து முன்னதாகவே டைவ் அடித்த கரன்ஜித் பந்தை சூப்பராக தடுத்து அமர்க்களப்படுத்தினார். மேலும், முதல் பாதியைக் காட்டிலும், இரண்டாம் பாதியில் சென்னை அணியின் டிஃபென்ஸ் அசுர பலத்துடன் இருக்க, கேரளா வீரர்களின் நம்பிக்கை சுத்தமாக தளர்ந்துபோனது. சென்னையின் டிஃபென்ஸை தாண்டி வந்த ஓரிரு பந்துகளும் கரண்ஜித்தைத் தாண்டிச் செல்லமுடியாமல் போக, கேரள ரசிகர்களின் நம்பிக்கையும் சுக்குநூறாக உடைந்தது. கேரளாவின் பால்டுவின்சன் மற்றும் பெக்யூசன், சென்னையின் ரஃபேல் அகஸ்டோ மற்றும் பிக்ரம்ஜித் ஆகியோர் ஓரிரு வாய்ப்புகளை வீணடித்தனர். 

சென்னைத் தரப்பில் ரஃபேல் அகஸ்டோ மற்றும் நெல்சன் கிரிகோரி மாயாஜாலம் செய்தனர். இருந்தாலும், பந்தை ஃபினிஷிங் செய்து கோலாக மாற்ற ஆள் இல்லாததாலும், கேரளாவின் சந்தேஷ் ஜிங்கான் அரணாக நின்று காத்ததாலும், சென்னையால் கோல் ஏதும் அடிக்க முடியவில்லை. கூடுதல் நிமிடத்தில் (93) கேரள டிஃபென்ஸை துளைத்து உள்ளிறங்கிய நெல்சன், நிதானமாக ஷாட்டை கனெக்ட் செய்ய, எப்படியோ கேரளா கீப்பரின் கையில் பட்ட பந்து உள்ளே சென்றாலும், வலது கோல் கம்பத்தில் பட்டு நூலிழையில் வெளியேறியது. அந்தக் கடைசிக் கட்ட டிராமாவும் முடிந்து போக, அத்துடன் போட்டியும் ஒருவழியாக கோல்கள் ஏதுமின்றி டிராவில் முடிந்தது.

கேரளா வீரர்களின் ஷாட்டுகளுடன், பெக்யூசனின் பெனால்டியையும் சேர்த்து தடுத்த சென்னையின் மெர்சல் கோல்கீப்பர் கரண்ஜித் சிங் ஆட்டநாயகன் விருதைத் தட்டிச்சென்றார். 29 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் தொடர்ந்து மூன்றாமிடத்தில் நீடிக்கும் சென்னை அணிக்கு அரையிறுதி வாய்ப்பு சற்று பிரகாசமாகவே உள்ளது. மேலும், தனது கடைசி லீக் போட்டியில் சென்னை அணி மும்பை அணியுடன் மோதவுள்ளது.

சனிக்கிழமை டெல்லியில் நடந்த லீக் போட்டியில், டெல்லி டைனமோஸ் அணி ATK அணியை 4-3 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. ஒருகட்டத்தில் 3-1 என்ற கோல்கணக்கில் முன்னிலையில் இருந்த ATK அணி, கடைசி கட்டத்தில் சொதப்ப, 20 நிமிடங்களில் 3 கோல்கள் பெற்று தோல்வியடைந்தது. ATK அணியின் ராபீ கீன், டெல்லியின் காலு உச்சே இருவரும் தலா 2 கோல்கள் அடித்தனர். டெல்லி (15 புள்ளிகள்), ATK (13 புள்ளிகள்) இரண்டு அணிகளும் ஏற்கெனவே அரையிறுதி வாய்ப்பை இழந்துவிட்டன. 

நேற்று ஜாம்ஷெட்பூர் - பெங்களூரு அணிகளுக்கு எதிராக நடந்த போட்டியில், பெங்களூரு 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. அந்த அணியின் முன்கள வீரர் மிகு பெனால்டி மூலம் முதல் கோலையும், கேப்டன் சுனில் சேத்ரி ஹெட்டர் மூலம் இரண்டாவது கோலையும் அடித்தனர். ஜாம்ஷெட்பூர் அணியின் முயற்சிகளை பெங்களூரு கீப்பர் குர்ப்ரீத் சிங் சாந்து சிறப்பாகச் செயல்பட்டு தடுத்தார். இந்தப் போட்டியில் தோற்றதனால் ஜாம்ஷெட்பூர் அணியின் அரையிறுதி வாய்ப்பு கேள்விக்குள்ளாகியுள்ளது. சென்னை (29), புனே (29), கேரளா (25), ஜாம்ஷெட்பூர் (26), கோவா (24), மும்பை (23) அணிகளுக்கு இன்னும் அரையிறுதி வாய்ப்பு முடிவாகவில்லை. பெங்களூரு அணி மட்டுமே இதுவரை அரையிறுதிக்கு நுழைந்திருக்கிறது. மற்ற 3 இடங்களுக்கு இந்த 6 அணிகளும் போராட வேண்டியுள்ளது.Trending Articles

Sponsored