ஷரபோவாவை வெளியேற்றிய அதே மெல்டோனியம்... ஊக்கமருந்து சோதனையில் சிக்கிய தடகள வீரர்!Sponsoredவிம்பிள்டன் உள்பட ஐந்து கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றவர்; உலகின் தலைசிறந்த வீராங்கனைகளுள் ஒருவர்; செரீனா வில்லியம்ஸுடன் போட்டிபோட தகுதியானவர்; விளம்பரங்கள் மூலம் அதிகம் சம்பாதிக்கும் விளையாட்டு வீராங்கனை... இன்னும் எத்தனையோ, மரியா ஷரபோவாவை குறிப்பிடச் சொல்லப்பட்டவை. 2016-ம் ஆண்டு ஆஸ்திரேலிய ஓப்பன் தொடரின்போது ஊக்கமருந்து பயன்படுத்தியதற்காக இரண்டு ஆண்டுகள் தடைசெய்யப்பட்டார். `மெல்டோனியம்’ எனும் மருந்தை அவர் பயன்படுத்தியதாக ஆய்வுகள் தெரிவித்தன. அந்த ஆண்டு ஜனவரி மாதம்தான் அந்த மருந்து தடைசெய்யப்பட்டது. ஆய்வு நடந்தது ஏப்ரலில். அவரோ, தான் அந்த மருந்தை கடந்த பத்து ஆண்டுகளாக தனது மருத்துவத்துக்காகப் பயன்படுத்துவதாகவும், இதை தடைசெய்தது தனக்குத் தெரியாது எனவும் தெரிவித்தார். ஆனாலும், தடை நீங்கவில்லை.  

மாரடைப்பு ஏற்படும் நோயாளிகளின் இதயத் தசைகளுக்கு ரத்தத்தை அதிகம் எடுத்துச் செல்வதற்குப் பயன்படும் மருந்துதான் `மெல்டோனியம்'. இது, பக்கவாதம் வந்த நோயாளிகளுக்கு மூளைக்குச் செல்லும் ரத்தத்தை அதிகப்படுத்தவும் பயன்படுகிறது. மெல்டோனியம், தசைகளுக்கு ரத்தம் மற்றும் ஆக்சிஜன் எடுத்துச்செல்லும் தன்மையை அதிகப்படுத்துவதால், விளையாட்டு வீரர்கள் தங்கள் தசைகளின் திறனை அதிகப்படுத்த இந்த மருந்தை தவறாகப் பயன்படுத்துகின்றனர் என்று கூறி, ஊக்கமருந்து தடுப்பு அமைப்பு 2016-ம் ஆண்டில் இந்த மருந்தைப் பயன்படுத்த தடைவிதித்தது. இந்த ஊக்கமருந்து, ரஷ்யாவில் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது. 

ஷரபோவாவைத் தொடர்ந்து, இந்தியத் தடகள வீரர் ஜிதின் பால் கரியரை முடக்கியுள்ளது இந்த மெல்டோனியம். 400 மீட்டர் ஓட்டப்பந்தய வீரரான ஜிதின் பால், தடைசெய்யப்பட்ட மெல்டோனியம் வைத்திருந்ததாக தேசிய ஊக்கமருந்து எதிர்ப்பு அமைப்பின் ஒழுங்குக் குழு கண்டறிந்து, அவரைப் போட்டிகளில் பங்கேற்க தடை விதித்துள்ளது.

Sponsored


Sponsored


இதில் ஆச்சர்யம் என்னவெனில், ஜிதின் பால் விளையாட்டின்போதோ மற்ற எந்த நேரத்திலோ இந்த மருந்தை உபயோகித்ததாக சோதனை முடிவுகள்  சொல்லவில்லை. அவர் தன் அறையில் இந்த மருந்தை வைத்திருந்தார் என்பது மட்டும்தான் குற்றச்சாட்டு. ஊக்கமருந்தைத் தடைசெய்யும் அமைப்பினர், பாட்டியாலாவில் உள்ள தேசிய விளையாட்டு நிறுவனத்தின் வளாகத்தில் உள்ள ஜிதினின் அறையில் சில மருந்துகள் இருப்பதைக் கண்டறிந்துள்ளனர். தேசிய ஊக்கமருந்து ஆய்வகம் அது மெல்டோனியம்தான் என உறுதிப்படுத்தியது. 

உலக ஊக்கமருந்து தடை சட்டத்தின்படி, தடைசெய்யப்பட்ட மருந்தை வைத்துள்ள வீரர் அல்லது வீராங்கனை தடைசெய்யப்பட வேண்டும் அல்லது போட்டிகளில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படக் கூடாது. இந்த விதிகளின்படி, ஒழுங்குமுறைக் குழு, ஜிதின் பால் நான்கு ஆண்டுகளுக்குப் போட்டிகளில் கலந்துகொள்ள தடைவிதித்துள்ளது. 

இது இன்று புதிதாக நடப்பதல்ல, கடந்த ஏப்ரல் மாதத்தில் இதே வளாகத்தில் மில்ஹா சிங் என்பவர் கார்னிடின் எனும் மருந்தை வைத்திருப்பதாக ஒழுங்குமுறைக் குழு கண்டறிந்து, அவரை தடைசெய்தது. கார்னிடின், கொழுப்பை அதிகம் எரித்து உடல் எடையைக் குறைக்கச் செய்யும் மருந்து. 

ஒழுங்குமுறைக் குழுவின் முன்னால் ஆஜரான ஜிதின், மெல்டோனியம் தன்னுடைய அறையிலிருந்து கைப்பற்றப்படவில்லை என்றும், கைப்பற்றியவர்கள் எந்த ஓர் அறிக்கையையும் அப்போது என்னிடம் தரவில்லை என்றும் சொன்னார். மேலும், அவர் தனக்கு ஆணையம் அனுப்பிய அறிக்கையில் பத்து ஊசிகள் எனக் குறிப்பிட்டிருந்ததாகவும், இங்கே இருபது இருப்பதாகவும், தனக்கும் இதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும் வாதிட்டார். ஆனால், அதிகாரிகள் `தவறாக அச்சிடப்பட்டுள்ளது' என்று கூறி, ஊசிகளின் எண்ணிக்கையை இருபது என மாற்றிக் குறித்துக்கொண்டனர். 

அதேபோல் ``ஜிதின், மருத்துவத் தேவைக்காக மெல்டோனியம் பயன்படுத்துவதாக முன்பே விதிவிலக்கு பெறவில்லை'' என்று ஆணையம் கூறுகிறது. அனைத்து வாதங்களையும் கேட்ட பிறகு ஆணையத்தின் ஒழுங்குமுறைக் குழு `ஜிதின் தனது அறையில் மெல்டோனியம் விதிகளை மீறி வைத்திருந்தார்' எனவும், `அது ஒழுங்குமுறைக் குழு சோதனையின்போது பிடிபட்டது' எனவும் கூறி சர்வதேச விதிகளின்படி அவரை நான்கு ஆண்டுகள் விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொள்வதற்கு தடைவிதித்து உத்தரவிட்டது. 

மெல்டோனியம், `இதர வகைகள்’ என்ற பிரிவின் கீழே வகைப்படுத்தப்பட்டுள்ளதால், இதை வைத்திருப்பதை மட்டும் காரணமாகச் சொல்லி அவரை தடைசெய்தது பலரின் விமர்சனங்களுக்கு உள்ளாகியிருக்கிறது. ஜிதினின் தரப்பு வழக்குரைஞர் கோஸ்வாமியிடம் பேசியபோது ``ஒழுங்குமுறைக் குழு, இந்த வழக்கில் முறையாக விசாரணையை நடத்தவில்லை. ஜிதினின் தரப்பு வாதங்கள் முறையாக விசாரிக்கப்படவில்லை. நாங்கள் இதை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போகிறோம்” என்றார்.

உண்மையில் மெல்டோனியம் மருந்தால் தடைசெய்யப்படும் முதல் இந்தியர் இவர் அல்ல. ஏற்கெனவே குத்துச்சண்டை வீரர் நிஷா, இந்த மருந்தை உபயோகித்ததற்காக சோதனையில் உறுதிசெய்யப்பட்டு தடைசெய்யப்பட்டார். இதேபோல் ஜக்டார் சிங் எனும் வீரர் சோதனையில் பயன்படுத்தியது உறுதியாகாவிட்டாலும்கூட இதே மருந்தை  வைத்திருந்ததற்காக ஆசியத் தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளில் விளையாட அனுமதிக்கப்படவில்லை.Trending Articles

Sponsored